ஹிஜாப் விவகாரம் தொடர்பான வழக்கு கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், அம்மாநில சட்டப்பேரவையின் சிறப்பு அமர்வின் இரண்டாவது நாளான நேற்று(பிப். 15) சட்டப்பேரவை மற்றும் சட்ட மேலவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சட்டப்பேரவையில் பேசியுள்ள எதிர்க்கட்சி துணைத் தலைவர் யு.டி.காதர், உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை அமல்படுத்துவதில் குழப்பம் நிலவுவதாகவும், இதனால் பல பள்ளிகளில் பிரச்சினை நிலவுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
“பல்வேறு பள்ளி நிர்வாகங்கள், பள்ளி வளாகத்திற்குள் நுழைவதற்கு முன்பு ஆசிரியர்களும் ஹிஜாபை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்துகின்றன. ஆனால், உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவில் மாணவர்களின் ஆடைக் கட்டுப்பாட்டைப் பற்றி மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.
அதற்குப் பதிலளித்த கர்நாடக மாநில பாஜக அரசு, இடைக்கால உத்தரவை அமல்படுத்துவதில் அரசு உறுதியாக உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
பூஜ்ய நேரத்தின்போது சட்டப்பேரவையில் இவ்விவகாரத்தை மீண்டும் எழுப்பியுள்ள யு.டி.காதர், “ஹிஜாப்பிற்கு அனுமதி மறுக்கப்படுவதால் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். ஷிமோகா உள்ளிட்ட சில இடங்களில், ஹிஜாப் அணிந்த மாணவர்கள் பள்ளி வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. 10 ஆம் வகுப்பு மாணவர்கள், அவர்களது தேர்வுகளை கூட எழுத அனுமதிக்கப்படவில்லை” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
உயர் நீதிமன்ற உத்தரவைக் குறிப்பிட்டுள்ள யு.டி.காதர், “கல்லூரி நிர்வாகங்கள் ஆடைக் கட்டுப்பாடு விதித்திருந்தால், அக்கல்லூரி மாணவர்கள் அதையே பின்பற்ற வேண்டும் என கர்நாடக உயர் நீதிமன்றம் கூறுகிறது. பள்ளிகளைப் பற்றிக் குறிப்பிடப்படவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. ஆனாலும், மாநில அரசு பள்ளிகளிலும் அதை வலியுறுத்துகிறது. மாணவர்களுக்கு மட்டுமல்ல, ஆசிரியர்களுக்கும் இது வலியுறுத்தப்படுகிறது” என்று கூறியுள்ளார்.
ஹிஜாப் விவகாரம்: கர்நாடக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கருப்பு பட்டை அணிந்து எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
கர்நாடக சட்டமேலவையில் பேசியுள்ள காங்கிரஸ் எம்எல்சி கே. ஹரிஷ் குமார், “இது மாணவர்களின் கவனத்தை சிதறடிக்கும் தேவையற்ற சர்ச்சை. இதனால் கல்லூரி வளாகங்களில் தடியடி நடத்தப்பட்டது. ஆசிரியர் தாக்கப்பட்டனர். கல்லூரி வளாகத்தில் காவிக்கொடி ஏற்றப்பட்டது. மாணவர்கள் கல்வி பறிக்கப்பட்டது” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
Source: New Indian Express
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.