Aran Sei

ஹிஜாப் தடை: இந்தியாவுக்கு எதிராக சர்வதேச அளவில் அதிகரிக்கும் கண்டனங்கள்

Credit : The Wire

ந்தியாவில், கல்வி நிலையங்களில் இஸ்லாமியப் பெண்கள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டிருப்பதற்குச் சர்வதேச அளவில் தொடர்ந்து கண்டனங்கள் எழுந்து வருகிறது.

கர்நாடக மாநில உடுப்பில், அரசு பெண்கள் கல்லூரியில் பெண்கள் ஹிஜாப் அணிந்து வரத் தடை விதிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த போராட்டத்திற்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆதரவு கிடைத்தது. இதனை தொடர்ந்து உடுப்பியின் மற்றொரு கல்லூரியிலும் பெண்கள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டது. மேலும், அதே கல்லூரி மாணவர்களில் ஒரு பகுதியினர் காவி துண்டு அணிந்து வந்து ஹிஜாப் அணியும் பெண்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஒன்றிய அரசின் கேந்திரிய வித்யாலயா ஹிஜாப்பை அனுமதிக்கும்போது கர்நாடக அரசு தடைவிதிப்பது ஏன்? – வழக்கறிஞர் தேவதத் காமத்

இந்நிலையில், ஹிஜாப் தடைமூலம் மத சுதந்திரத்தில் கல்லூரி நிர்வாகம் தலையிடுவதாக மாணவிகள் தரப்பில் இருந்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

வழக்கு விசாரணையின்போது இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ள கர்நாடக உயர்நீதிமன்றம் மறு உத்தரவு வரும் வரை, மாணவர்கள் வகுப்பறைகளுக்குள் ஹிஜாப், காவி துண்டு உள்ளிட்ட எந்த மத அடையாளங்களையும் அணிந்து வரை தடை விதித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து ஹிஜாப் விவகாரத்தின் காரணமாக 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டிருந்த கர்நாடகாவின் சில பகுதிகளில், தடை உத்தரவை மீறி நேற்று பல்வேறு பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டது. அப்போது பள்ளிக்கு வந்த மாணவிகள், ஆசிரியைகள் அனைவரும் நுழைவு வாயிலில் வைத்து ஹிஜாப்பை அகற்றிவிட்டு செல்லுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

ஹிஜாப்பை அகற்றுபவர்களுக்கு மட்டுமே உள்ளே செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில பள்ளிகளில் பெண்கள் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

I love Hijab: ஹிஜாப் உரிமைக்காக வீதியில் இறங்கி போராடிய இஸ்லாமியப் பெண்கள்

பெண்கள் ஹிஜாப்பை அகற்ற நிர்ப்பந்திக்கப்படும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவியது. இதற்குப் பல்வேறு தரப்பு மக்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவை மீறும் விதமாக பள்ளி நிர்வாகங்கள் செயல்படுவதால், மாணவிகளின் கல்வி பாதிக்கப்படுவதாகப் பலர் குற்றம் சாட்டினர்.

ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டதற்கு இந்தியா மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் தொடர் எதிர்ப்புகள் வந்து கொண்டு இருக்கின்றன.

சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க தூதர் ரஷத் கான் பதிவிட்டிருந்த ட்விட்டர் பதிவில், “மத சுதந்திரம் என்பது ஒருவரின் மத உடையைத் தேர்ந்தெடுப்பதையும் உள்ளடக்கியது. இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில், அரசு மதம் சார்ந்த உடையைத் தீர்மானிக்க கூடாது. பள்ளிகளில் ஹிஜாப் அணிவதை தடை செய்வது, மத சுதந்திரத்தை மீறுவதோடு, பெண்கள் மற்றும் சிறுமிகளைக் களங்கப்படுத்தவும், கல்வியில் இருந்து ஓரங்கட்டவும் செய்கிறது” எனத் தெரிவித்திருந்தார்.

இஸ்லாமிய பெண்கள் ஒடுக்கப்படுவதை இந்தியத் தலைவர்கள் தடுக்க வேண்டும், என தெரிவித்துள்ள மலாலா யூசுப்சாய் (அமைதிக்கான நோபல் பரிசு வென்றவர்), கல்லூரி படிப்பு மற்றும் ஹிஜாப் இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்ய பெண்கள் நிர்பந்திக்கப்படுகின்றனர் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் பிரஞ்சு சர்வதேச கால்பந்து அணியின் வீரரான பால் போக்பா, ”இந்தியாவில் ஹிஜாப் அணிந்து செல்லும் இஸ்லாமியப் பெண்கள், இந்துத்துவ கும்பலால் தொடர்ந்து துன்புறுத்தப்படுகின்றனர்” என்ற தலைப்பில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு காணொளியை வெளியிட்டிருந்தார்.

ஹிஜாப் போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்களின் தகவல்களை பகிர்ந்த கர்நாடக பாஜக – எதிர்ப்பு வலுத்ததால் பதிவு நீக்கம்

இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு அதிகரித்து வருவதாக, 57 நாடுகள் கொண்ட இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பின் பொது செயலாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவித்திருக்கும் கருத்தில், “இந்தியாவில் இஸ்லாமிய மக்கள் மற்றும் அவர்களின் வழிபாட்டு தளங்கள் மீதான தொடர்ச்சியான தாக்குதல், இஸ்லாமியர்களுக்கு எதிரான சட்டங்கள், அற்ப காரணங்களுக்காக இஸ்லாமியர்கள்மீதான தாக்குதல்கள் ஆகியன, இஸ்லாமியஃபோபியா அதிகரிப்பதை குறிக்கிறது” என தெரிவித்துள்ளார்.

மேலும், “சர்வதேச சமூகம் குறிப்பாக ஐநா மற்றும் மனித உரிமைகள் கவுன்சில் இதில் தலையிட்டுத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்தியாவில் இஸ்லாமியர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதோடு, வன்முறை மற்றும் வெறுப்பு செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு உரிய தண்டனை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்” என கூறியுள்ளார்.

 

ஹிஜாப் தடை: இந்தியாவுக்கு எதிராக சர்வதேச அளவில் அதிகரிக்கும் கண்டனங்கள்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்