கர்நாடகாவில் நடப்பது போன்று தமிழ்நாட்டில் மதப் பிரச்சனைகள் நடந்துவிடக்கூடாது. முற்போக்கு சக்திகள் கவனமாக இருக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு மகளிர் கல்லூரியில் கடந்த டிசம்பர் மாதம் ஹிஜாப் அணிந்து வந்த 6 இஸ்லாமிய மாணவிகளுக்கு வகுப்பறையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து 6 மாணவிகளும் ஹிஜாப் அணிந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கல்லூரி நிர்வாகம் தங்களது உடை விவகாரத்தில் தலையிடுவதாக கர்நாடக உயர் நீதிமன்றத்திலும், தேசிய மனித உரிமை ஆணையத்திலும் அவர்கள் முறையிட்டுள்ளனர்.
இந்திய அரசியல் சாசனம் வழங்கியிருக்கும் உரிமைக்கு எதிராக கல்லூரி நிர்வாகம் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பல்வேறு தரப்பினர் ஹிஜாப்புக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஹிஜாபுக்கு ஆதரவாக இருக்கும் மாணவர்கள் நீல நிற துண்டோடு ஜெய்பீம் என்கிற முழக்கத்தை முன்வைத்து வருகிறார்கள். ஹிஜாபுக்கு எதிரானவர்கள் காவிநிற துண்டணிந்து ‘ஜெய் ஸ்ரீராம்’ என்கிற முழக்கத்தை எழுப்பியுள்ளனர்.
இது குறித்து தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், கர்நாடகாவில் நடப்பது கலக்கத்தைத் தூண்டுகிறது. கள்ளமில்லா மாணவர்கள் மத்தியில் மதவாத விஷச் சுவர் எழுப்பப்படுகிறது. ஒற்றைச் சுவர் தாண்டியிருக்கும் பக்கத்து மாநிலத்தில் நடப்பது தமிழ்நாட்டுக்கும் வந்துவிடக் கூடாது. முற்போக்கு சக்திகள் மேலும் கவனமாக இருக்க வேண்டிய காலம் இது” என்று தெரிவித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.