Aran Sei

பாஜகவில் சேருவதை பற்றி கடவுளிடம் கேட்டபோது அவர் அதை ஏற்றுக்கொண்டார் – பாஜகவில் இணைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ கருத்து

கோவாவில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் 8 பேர் இன்று பாஜகவில் இணைந்தனர். இதற்கிடையே பஞ்சாப் மாநிலத்தில் 10 ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க பாஜக திட்டமிடுகிறது என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டியுள்ளார்.

கோவாவில் பாரதி ஜனதா கட்சியைச் சேர்ந்த முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. மொத்தம் 40 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கோவாவில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணிக்கே அதிக இடங்கள் தேர்தலில் கிடைத்தன.

ஆபரேஷன் தாமரை: கோவா மாநிலத்தில் உள்ள 11 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களில் 8 பேர் பாஜகவிற்கு தாவ முடிவு

இந்த நிலையில் எதிர்க்கட்சியாக இருந்து வரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 8 சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று காலை கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த்தை நேரில் சந்தித்து பேசினர். இவர்களில் மிக முக்கியமாக முன்னாள் முதல்வர் திகம்பர் காமத், எதிர்க்கட்சி தலைவர் மைக்கேல் லோபா ஆகியோரும் அடங்குவர். அவர்கள் தவிர, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களான தெலிலா லோபோ, ராஜேஷ் பல்தேசாய், கேதர் நாயக், சங்கல்ப் அமோன்கர், அலெக்சோ செகீரா மற்றும் ருடால்ப் பெர்னாண்டஸ் ஆகியோரும் கோவா முதலமைச்சரை சந்தித்தனர்.

இதன்பின்னர், காங்கிரஸ் சட்டசபை கூட்டம் நடத்தி ஆலோசனை செய்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய மைக்கேல் லோபோ, நாங்கள் பாஜகவில் இணைந்து விட்டோம். பிரதமர் மோடி மற்றும் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் கரங்களை வலுப்படுத்த போகிறோம் என கூறியுள்ளார்.

கோவா தேர்தல்: மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாஜக

தற்போது கோவாவில் காங்கிரஸ் கட்சிக்கு மொத்தமாக மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட சீட்டு வழங்கப்பட்ட உறுப்பினர்கள் தாங்கள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் கட்சி மாற மாட்டோம் என சத்தியம் செய்த நிலையில் அது தொடர்பாக இன்றைய தினம் கட்சி மாறிய சட்டமன்ற உறுப்பினர்களிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் திகம்பர் காமத் பதில் அளிக்கையில், தேர்தலுக்கு முன்பாக காங்கிரசை விட்டு வெளியேற மாட்டோம் என்று கடவுளிடம் சத்தியம் செய்தது உண்மைதான். ஆனால் மீண்டும் கடவுளிடம் சென்று பாரதிய ஜனதா கட்சியில் இணைவதைப் பற்றி கூறியபோது கடவுள் அதை ஏற்றுக்கொண்டுள்ளார் எனத் தெரிவித்தார். அதே நேரத்தில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் பஞ்சாப் மாநிலத்தில் 10 ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்களை பாஜக. விலை பேசி வருவதாக புதிய குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

ஏற்கனவே தலைநகர் டெல்லியில் “ஆபரேஷன் தாமரை” மூலம் ஆம் ஆத்மி ஆட்சியை கவிழ்க்க பாரதிய ஜனதா கட்சி முயல்வதாகவும், இதற்காக 800 கோடி ரூபாய் ஒதுக்கி இருப்பதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Source : NDTV

” I am not to answer to lies”, Srimathi’s Mother says | Kallakurichi Sakthi School Issue New update

பாஜகவில் சேருவதை பற்றி கடவுளிடம் கேட்டபோது அவர் அதை ஏற்றுக்கொண்டார் – பாஜகவில் இணைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ கருத்து

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்