நாடு முழுவதும் இஸ்லாமியர்களுக்கு எதிராக தொடர்ந்து வெறுப்புப் பேச்சுகள் நடத்தப்பட்டு வரும் சம்பவங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜமியத் உலமா-இ-ஹிந்த் என்கிற இஸ்லாமிய அமைப்பும், மத அறிஞரும் சமூக செயற்பாட்டாளருமான மௌலானா சையத் மஹ்மூத் ஆசாத் மதனி ஆகியோர் இம்மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
இஸ்லாமியர்களுக்கு எதிராக பரப்பப்பட்ட வெறுப்பு கருத்துக்கள்; முகமது நபிக்கு எதிராக பேசப்பட்ட இழிவான கருத்துக்கள்; போன்ற எந்தவொரு நிகழ்வுக்கும் குற்றவியல் சட்டத்தின் கீழ் எந்த நடவடிக்கையும் தொடங்கப்படவில்லை என்று மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஹரித்வார் வெறுப்பு பேச்சு வழக்கு – விசாரணையில் பலரின் பெயர்கள் சேர்க்கப்படுமென காவல்துறை அறிவிப்பு
கடந்த ஆகஸ்ட் மாதம் ஜந்தர் மந்தரில் நடைபெற்ற பேரணியில் தாஸ்னா கோவிலின் பூசாரி யதி நரசிங்கானந்த சரஸ்வதி இஸ்லாமியர்களுக்கு எதிராகப் பேசியது. திரிபுராவில் நடைபெற்ற பேரணிகளில் நபிகள் நாயகத்திற்கு எதிராக இழிவான முழக்கங்கள் எழுப்பப்பட்டது குறித்தும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசத்தில் யதி நரசிங்கானந்த சரஸ்வதியின் கருத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியதற்காக 100க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களை காவல்துறை கைது செய்ததாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.
இஸ்லாமியருக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிராக காவல்துறை நடவடிக்கை எடுக்காதது கவலையளிப்பதாக கூறிய மனுதாரர்கள், அரசு சாராத நபர்களுக்கு அடிபணிவது; சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்கத் தவறியது சட்டத்திற்கு எதிரானது என்று கூறியுள்ளனர்.
இஸ்லாமியர்களுக்கு எதிரான இழிவான கருத்துக்கள் மற்றும் அவதூறான பேச்சுகளால் வன்முறை நிகழ்வதும் தனிநபர்கள் கொல்லப்படும் நடப்பதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற நிகழ்வுகளுக்கு நடவடிக்கை எடுக்காமல் காவல்துறை தன்னுடைய கடமையிலிருந்து நழுவி விடுவதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இது போன்ற சூழ்நிலையில் நீதித்துறை தலையீடு செய்ய வேண்டும் என்று மனுதாரர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Source: Live law
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.