Aran Sei

‘தீஷாவை கொலை செய்ய அழைப்பு விடுக்கும் பாஜக அமைச்சர்’ – காஷ்மீர் எழுத்தாளர் அமான் குற்றச்சாட்டு

ருவநிலை செயல்பாட்டாளர் தீஷா ரவியை டெல்லி காவல்துறை கைது செய்தது குறித்து கருத்து தெரிவித்துள்ள  ஹரியானா மாநில அமைச்சர் அனில் விஜ், “மனதில் தேச விரோத எண்ணங்கொண்டவர்கள் அழித்தொழிக்கப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

நேற்று (பிப்பிரவரி 14), பெங்களூருவைச் சேர்ந்த 21 வயதான பருவநிலை செயல்பாட்டாளர் தீஷா ரவியை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது. ஸ்வீடனைச் சேர்ந்த பருவநிலை செயல்பாட்டாளர் கிரேட்டா துன்பெர்க், இந்தியாவில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக, அமைதியான போராட்டங்களை நடத்துவதற்கு வழிகாட்டும், “டூல்-கிட்”, ஒன்றை பகிர்ந்திருந்தது தொடர்பாக, இந்திய அரசுக்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டியதாக டெல்லி காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருந்தது.

தீஷா ரவி கைது: ‘விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தரும் குடிமக்களுக்கு அரசு தரும் எச்சரிக்கை’ – விவசாய சங்கங்கள் கருத்து

தேசவிரோத சதித்திட்டத்தின் ஒரு பகுதி என்று காவல்துறை கூறும் இந்த “டூல்-கிட்” என்பது உண்மையில், விவசாயிகள் போராட்டம் தொடர்பான கட்டுரைகள், சமூக வலைத்தள கணக்குகள் ஆகியவற்றின் தொகுப்பு ஆகும். இந்தப் போராட்டத்தைப் பற்றி அறிந்து கொண்டு, அதைப் பரப்புவதற்கு விரும்பும் யாருக்கும் உதவுவதற்காக அது உருவாக்கப்பட்டது என்று தி வயர் தெரிவிக்கிறது.

அந்த டூல் கிட்டை திருத்தி வெளியிட்ட கல்லூரி மாணவியும் இளம் சூழலியல் செயல்பாட்டாளருமான தீஷா ரவி, டெல்லி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து, பாஜகவை சேர்ந்த ஹரியானா மாநில அமைச்சர் அனில் விஜ், தனது ட்விட்டர் பக்கத்தில். “மனதில் தேச விரோத எண்ணங்கொண்டவர்கள் அழித்தொழிக்கப்பட வேண்டும். தீஷா ரவியாக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் சரி.” என்று தெரிவித்துள்ளார்.

அனில் விஜ்ஜின் கருத்தை விமர்சித்துள்ள காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த எழுத்தாளர் அமான். “தீஷாவை கொலை செய்வதற்கு பாஜக அமைச்சர் அனில் விஜ் அழைப்பு விடுத்துள்ளார். இந்த ஆட்சியால் வெறுக்கத்தக்க பேச்சுகள் சாதாரண விஷயமாக்கப்பட்டுள்ளன. ஆளும் கட்சியின் முடிவை ஏற்காத தன் மக்களை இந்த நாடு எப்படி நடத்துகிறது என்பதை இதன் மூலம் தெரிந்துகொள்ளலாம்.” என்று விமர்சித்துள்ளார்.

திஷா ரவியின் கைதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள, பாஜக நாடாளுமன்ற உறுப்பினரும், கர்நாடக மாநில பாஜகவின் துணை தலைவருமான பி.சி.மோகன், “புர்ஹான் வானிக்கு 21 வயது. அஜ்மல் கசாபுக்கு 21 வயது. வயது ஒரு எண் மட்டும்தான். யாரும் சட்டங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை. சட்டம் தன் கடமையைச் செய்யும்.” என்று தெரிவித்துள்ளார்.

‘தீஷாவை கொலை செய்ய அழைப்பு விடுக்கும் பாஜக அமைச்சர்’ – காஷ்மீர் எழுத்தாளர் அமான் குற்றச்சாட்டு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்