பசு கடத்தியதாக சந்தேகப்பட்டு ஜூனைத், நசீர் ஆகியோரை காருடன் கடத்தி சென்ற பசு பாதுகாவலர்கள் கும்பல் இரண்டு பேரையும் உயிருடன் காருக்குள் வைத்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தி கொன்றதாக கூறப்படுகிறது.
ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டம் ஹட்மிகா கிராமத்தை சேர்ந்தவர்கள் ஜுனைத் (வயது 39), நசீர் (வயது 25). இஸ்லாமிய மதத்தை சேர்ந்த 2 பேரும் கடந்த புதன்கிழமை அதிகாலை தங்கள் பொலிரோ காரில் ராஜஸ்தான்-அரியானா எல்லை கிராமத்தில் உள்ள ஜுனைத்தின் உறவினரை சந்திக்க சென்றுள்ளனர்.
பசுவதையில் ஈடுபட்ட 5 பேரை கொலை செய்துள்ளோம் – பாஜக முன்னாள் எம்.எல்.ஏ பேச்சு
அப்போது, அரியானாவை சேர்ந்த பசு பாதுகாப்பு கும்பல் ஜுனைத்தும், நசீரும் காரில் பசு மாட்டை கடத்தியதாக கருதி அவர்களை தடுத்து நிறுத்தி தாக்கியுள்ளனர். அரியானாவின் பெரோஷ்பூர் ஹிர்கா பகுதியை சேர்ந்த ரின்கு சைனி என்ற டாக்சி டிரைவர் முதலில் ஜுனைத், நசீர் பயணித்த காரை பின் தொடர்ந்துள்ளார். பசு பாதுகாவலர்கள் அமைப்பை சேர்ந்த இவர் பின்னர் பஜ்ரங் தள் அமைப்பை சேர்ந்த மொனு மனீசர் என்பவருக்கு தகவல் கொடுத்துள்ளார். அவர்கள் தங்கள் குழுவினருடன் இணைந்து ஜூனைத், நசீரின் காரை இடைமறித்து இருவரையும் கடுமையாக தாக்கியுள்ளனர்.
பின்னர், ஜூனைத் மற்றும் நசீரை காருடன் கடத்தி சென்ற பசு பாதுகாவலர்கள் கும்பல் இரண்டுபேரையும் உயிருடன் காருக்குள் வைத்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தியதாக கூறப்படுகிறது. இதில் இரண்டு பேரும் உடல் கருகி உயிரிழந்தனர்.
அரியானாவின் பர்வாஸ் கிராமத்தில் காட்டுப்பகுதியில் கார் தீக்கிரையான நிலையிலும், அதனுள் 2 பேர் எரிந்த நிலையில் எலும்புக்கூடாக கிடப்பது குறித்தும் காவல்துறைக்கு வியாழக்கிழமை தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த விவகாரம் பூதாகாரமான நிலையில், 2 பேரை உயிருடன் எரித்து கொன்றதில் தொடர்புடையதாக டாக்சி டிரைவர் ரிங்கு சைனியை ராஜஸ்தான் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் பஜ்ரங்தல் அமைப்பை சேர்ந்த அனில், ஸ்ரீகாந்த், ரிங்கு சைனி, லோகேஷ் சிங்லா, மோனு ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முக்கிய நபராக மோனுவையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இந்த வழக்கில் ரிங்கு சைனியிடம் ராஜஸ்தான் காவல்துறையினர் விசாரித்ததில் திடுக்கிடம் தகவல் வெளியாகியுள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அரியானாவின் நுங்க் பகுதியில் பசு கடத்தலில் ஈடுபட்டதாக ஜூனைத் மற்றும் நசீரை தாக்கிய 4 பேர் கொண்ட பசு பாதுகாப்பு கும்பல் தாக்குதலுக்கு உள்ளான 2 பேரையும் படுகாயங்களுடன் அரியானாவின் பெரோஸ்பூர் ஹிர்கா காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
2 பேர் மீதும் பசு கடத்தல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யும்படி காவல்துறையினரிடம் கூறிய நிலையில் 2 பேரும் படுகாயங்களுடன் இருந்ததை பார்த்த காவல்துறையினர் இருவரையும் விசாரிக்காமல் அந்த கும்பலிடமே இவர்களை அழைத்து செல்லும்படி கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
படுகாயங்களால் 2 பேரும் மயக்கமடைந்ததால் அதிர்ச்சியடைந்த பசு பாதுகாவலர்கள் கும்பல் இருவரையும் அவர்களின் காரிலேயே அங்கிருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் பர்வாஸ் கிராமத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு காருக்குள் இருவரையும் போட்டுவிட்டு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
காரின் எண்ணை வைத்து ஜூனைத், நசீர் இருவரும் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இந்த கொடூர சம்பவம் தொடர்பாக ராஜஸ்தான், அரியானா காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.