உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வார் மற்றும் தலைநகர் டெல்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிரான பேச்சுகளையும் தர்ம சன்சத் போன்ற நிகழ்ச்சிகளையும் தடை செய்யக் கோரி ஜமியத் உலமா-இ-ஹிந்த் அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
இஸ்லாமியர்களை படுகொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்தவர்கள்மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இவ்விவகாரமானது மதத்தில் மட்டுமல்லாது, நாட்டின் அரசியலமைப்பு, சட்டம், ஒருமைப்பாடு மற்றும் ஒற்றுமை ஆகியவற்றில் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது என்றும் அந்த மனுவில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
“அண்மை காலமாக நாட்டில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகளும் அறிக்கைகளும் திடீரென தீவிரமடைந்துள்ளன. அண்மையில், ஹரித்வாரிலும் டெல்லியிலும் அரசின் கவனத்தின்கீழ் நடத்தப்பட்ட நிகழ்ச்சிகள் கூட வெளிப்படையான வெறுப்புணர்வுகளை ஏற்படுத்தியது மட்டுமின்றி, ‘இந்து ராஜ்ஜியம்’ அமைப்பதற்காக இஸ்லாமியர்களைக் கொன்று குவிக்க பெரும்பான்மையினரைத் தூண்டிவிட முயன்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹரித்வாரில் இஸ்லாமியருக்கு எதிரான வெறுப்பு பேச்சு – புலம்பெயர் இந்தியர்கள் கண்டனம்
“ஆனால், கெடுவாய்ப்பாக, இவ்விவகாரம் தொடர்பாக பதியப்பட்ட இரண்டு வழக்குகளிலும் இதுவரை எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தர்ம சன்சத் போன்ற நிகழ்ச்சிகள் குறித்து ஒன்றிய, மாநில அரசுகள் மௌனம் காப்பது நிலைமையின் தீவிரத்தை அதிகப்படுத்தியுள்ளது” என்று அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இம்மனு குறித்து, ஜமியத் உலமா-இ-ஹிந்த் தலைவர் மௌலானா அர்ஷத் மதனி கூறுகையில், “மாநில மற்றும் ஒன்றிய சட்ட அமலாக்க அமைப்புகள் தங்கள் கடமைகளை நிறைவேற்றவில்லை. இது நாட்டில் மனச்சோர்வு சூழ்நிலையை உருவாக்கியுள்ளது” என்று கூறியுள்ளார்.
ஹரித்துவாரில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை பேச்சு – வழக்கை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம்
இதற்கிடையில், உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரிலும், டெல்லியிலும் நடைபெற்ற தரம் சன்சத் நிகழ்ச்சியில் பங்கேற்று, வெறுப்புப் பேச்சுகளை நிகழ்த்தியவர்கள்மீது உரிய விசாரணையும் சட்ட நடவடிக்கையையும் உறுதி செய்ய உத்தரவிடக் கோரிய மற்றொரு பொதுநல வழக்கு மனுவை விசாரிக்க, நேற்று(ஜனவரி 10) உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டது.
Source: PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.