தொலைக்காட்சி விவாதங்கள் மற்றும் பிற இடங்களில், வழிபாட்டுத் தலங்கள் சட்டம், 1991 (சுருக்கமாக 1991 சட்டம்) அதன் பிரிவு 4 இல் உள்ள விதிவிலக்கு, நடந்து கொண்டிருக்கும் கியான்வாபி மசூதி வழக்குகளுக்குப் பொருந்தாது என்று கூறப்படுகிறது. 8 பிரிவுகளைக் கொண்ட 1991 சட்டத்தைப் படிக்க ஆர்வமுள்ள எவராலும் அத்தகைய பரிந்துரையை தீவிரமாகச் செய்ய முடியாது.
1991 சட்டத்தின் 2(c) பிரிவின்படி ஒவ்வொரு மசூதியும் ஒரு ‘வழிபாட்டுத் தலம்’ ஆகும். எந்தவொரு மசூதியையும் வேறு மதத்தினரின் வழிபாட்டுத் தலமாக யாரும் மாற்றுவது பிரிவு 3-ன் மூலம் தடை செய்யப்பட்டுள்ளது. இந்தத் தடைக்கு விதிவிலக்கு எதுவும் இல்லை என்பதையும் இந்த சட்டம் குறிப்பிடுகிறது. மேலும் அதை மீறுவது சிறைத்தண்டனைக்கு உட்பட்ட கிரிமினல் குற்றமாகும். பிரிவு 4 இல் பட்டியலிடப்பட்டுள்ள விதிவிலக்குகள், பின்னர் விவாதிக்கப்படும், அவை பிரிவு 3 ஐ பாதிக்காது. எனவே, இந்த சட்டம் ஒவ்வொரு வழிபாட்டுத் தலத்திற்கும் பொருந்தும்.
கியான்வாபி மசூதி: சிவலிங்கத்தை வழிபடப் போவதாக அறிவித்த இந்து சாமியார் – தடுத்து நிறுத்திய காவல்துறை
கியான்வாபி மசூதியின் நிலை ஒரு இஸ்லாமிய வழிபாட்டுத் தலமாக உள்ளது என்பது நீதிமன்றங்களால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தெளிவான உண்மை. இதில் மறுகேள்விக்கு இடமில்லை.
மசூதிக்குள் இந்து உருவ வழிபாட்டை அமைக்க முயல்வது ஒரு இஸ்லாமிய வழிபாட்டுத் தலத்தை இந்தவழிபாட்டுத் தலமாக மாற்றும் முயற்சி என்பதில் சந்தேகம் இருக்க முடியுமா? வரலாற்றின் அடிப்படையிலோ, சொத்துரிமை, மத நம்பிக்கை உரிமைகள் என்ற போர்வையிலோ அல்லது ஒரு கலைப்பொருளை, அல்லது பழங்கால நினைவுச் சின்னத்தை கண்டறிவதாலோ மசூதியை மாற்றுவது தடை செய்யப்பட்டதாகும். சட்டத்தால் தடைசெய்யப்பட்டதைச் செயல்படுத்துவதற்கான வழக்கைத் தொடர முடியாது. மசூதியை கோவிலாக மாற்றுவதால் ஏற்படும் பாதிப்பு எதுவாக இருந்தாலும் – நீதிமன்றங்கள் அத்தகைய வழக்கைத் தள்ளுபடி செய்ய பிரிவு 3 மட்டுமே போதுமானது.
பிரிவு 4: சுதந்திர இந்தியாவில் உள்ள வழிபாட்டுத் தலங்களுக்கான சிறப்பு ஏற்பாடு:
இப்போது மசூதிகளை அழிப்பதன் மூலம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு அழிக்கப்பட்ட கோவில்களை மீண்டும் எழுப்ப வேண்டும் என்ற கூச்சல் நாடாளுமன்றம் அறிந்த ஒன்றுதான். எனவே அது, அந்த உண்மையான அல்லது கருதப்படும் வரலாற்றுத் தவறுகளை கிளறும் அனைத்து சாத்தியமான வழிகளையும் முடிவுக்குக் கொண்டுவரக் கூடுதல் ஏற்பாடு செய்தது.
முந்தைய உத்தரவின்படி ஏற்கனவே இருந்த கட்டமைப்புகளை அழித்துக் கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களை மனதில் வைத்து, அத்தகைய தலங்களின் மதத் தன்மையை, ஒரு கட்டத்தில் முடிவு செய்வதற்காக, 1991 ஆம் ஆண்டு சட்டத்தின் பிரிவு 4 கொண்டு வரப்பட்டுள்ளது.
பிரிவு 4(1) இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த நாளான ஆகஸ்ட் 15, 1947 இல் ஒரு இடம், ஒரு கோயிலாகவோ, மசூதியாகவோ, தேவாலயமாகவோ, குருத்வாராவாகவோ அல்லது பொது வழிபாட்டுத் தலமாகவோ இருந்தால், அது கடந்த காலத்தில் என்னவாக இருந்தாலும், கடந்த காலத்தின் கட்டிடத் தடயங்கள் எஞ்சியிருந்தாலும், அது அப்படியே இருக்கும். அதனால்தான் 1991 சட்டம் வரலாறு, எச்சங்கள், கலைப்பொருட்கள் அல்லது வேறு எதையும் அடிப்படையாகக் கொண்டு மதத் தன்மையை மதிப்பிட எந்த வாய்ப்பும் அளிக்கவில்லை.
1991 சட்டத்தில் பொது மற்றும் சிறப்பு பாதுகாப்பு – பிரிவு 3 மற்றும் 4:
1991 சட்டம், பொது மற்றும் சிறப்பு பாதுகாப்பு இரண்டையும் கொண்டுள்ளது. பிரிவு 3 ஒரு வழிபாட்டுத் தலம், அது கட்டப்பட்ட தேதி எதுவாக இருந்தாலும் அதை பாதுகாக்கும் பொதுவான விதியாகும். பிரிவு 4, ஆகஸ்ட் 15, 1947 இல் இருந்த வழிபாட்டுத் தலங்களுக்கு கூடுதலாக சிறப்பு ஏற்பாட்டை அளிக்கிறது.
இது தெளிவான பகுத்தறிவு சிந்தனை. சுதந்திரத்திற்கு முன்பிருந்த பழமையான வழிபாட்டுத் தலங்கள், வரலாற்றுத் தவறுகளின் கூற்றுகளுக்கு ஆளாக நேரிடலாம். அவைகளின் மாற்றத்தைத் தடை செய்து, அதைக் குற்றம் என்று குறிப்பிட்டால் மட்டும் போதாது. மற்றபடி தடை செய்யப்பட்டதைப் பெறுவதற்காக வழக்குகள் போடும் வழிகளைத் தடுப்பதும் அவசியமாக இருந்தது.
1991 சட்டம், பழைய கட்டமைப்புகளின் மதத் தன்மையை மாற்ற நீதிமன்றங்களுக்கு எந்த வாய்ப்பையும் அளிக்கவில்லை. பிரிவு 4 (2) மூலம் பல வழிகளில் அது உறுதி செய்யப்படுகிறது.
இந்தியாவில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் – வங்கதேச கல்வி அமைச்சர் வலியுறுத்தல்
முதலாவதாக, சுதந்திரத்தின் போது இருந்த வழிபாட்டுத் தலங்களின் மதத் தன்மையை மாற்றுவதற்கு எதிர்கால வழக்குகளுக்கு எதிராக அது நிபந்தனை விதிக்கிறது.
இரண்டாவதாக, சுதந்திரத்தின் போது இருந்த வழிபாட்டுத் தலங்களின் மதத் தன்மையில் மாற்றத்தைக் கோரும் நிலுவையில் உள்ள வழக்குகளின் சுருக்கமான விரைவாக குறைப்பதற்கு இது வழி வகுக்கிறது.
மூன்றாவதாக, ஒரு வழிபாட்டுத் தலத்தின் மதத் தன்மை, சுதந்திரத்தின் போது இருந்ததைப் போலவே நீடிக்கச் செய்யவும், அதன் மதத் தன்மை பின்னர் மாற்றப்பட்டால், அதன் மதத் தன்மையை மறுசீரமைக்கவும் இந்த சட்டப் பிரிவு வழி வகுக்கிறது.
பிரிவு 4 தவிர, ஆகஸ்ட் 15, 1947 இல் இருந்த ஒரு மசூதிக்கு பிரிவு 3 இன் பொதுவான பாதுகாப்பு இருக்கும், அது எந்த சூழ்நிலையிலும் இழக்கப்படாது.
கியான்வாபி மசூதியும் சர்ச்சைக்கான பின்னணியும் – ஒரு விரிவான அலசல்
4(3)(a) பிரிவும், விதிவிலக்கும்: பண்டைய நினைவுச் சின்னங்கள் சட்டம்
பண்டைய நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்லியல் இடங்கள் சட்டம் 1958 அல்லது அது போன்ற ஏதேனும் ஒரு சட்டத்தால் மூடப்பட்ட வழிபாட்டுத் தலமானது, 1991 சட்டத்தின் பிரிவு 4 (1) மற்றும் (2) லிருந்து விதி விலக்கு பெற்றுள்ளன என்பது உண்மைதான். எனினும், பிரிவு 4(3)(a) இல் உள்ள இந்த விதிவிலக்கு, மசூதியை அகற்றுவதற்கோ அல்லது அதற்குள் இந்து மத வழிபாடுகளை நடத்துவதற்கோ அனுமதிக்கவில்லை.
முன்பு கூறியது போல், பண்டைய நினைவுச் சின்னங்கள் சட்டத்தின் வரையறையின் கீழுள்ள ஒவ்வொரு வழிபாட்டுத் தலமும் 1991 சட்டத்தின் பிரிவு 3 இன் பொதுவான பாதுகாப்பைத் தக்க வைத்துக் கொள்ளும். பண்டைய நினைவுச் சின்னங்கள் சட்டம் 1958 அதன் சொந்த பாதுகாப்பைத் தருகிறது. இந்தச் சட்டத்தின் பிரிவு 16, அந்தந்த தல நிர்வாகிகள் அனுமதிக்காத வரை, அதனதன் மதத் தன்மைக்கு முரணாக எந்த வழிபாட்டுத் தலத்தையும் பயன்படுத்துவதைத் தடைசெய்கிறது. மேலும் அவர்கள் அனுமதிக்காதவரை அந்த வழிபாட்டுத் தலத்தை வெளியாட்கள் அணுக முடியாது என்பதை உறுதிப்படுத்துவதை அரசின் கடமையாக்குகிறது.
எனவே, ஒரு மசூதி அது 1958 சட்டத்தால் இஸ்லாமியர்களின் வழிபாடு நிறுத்தப்பட்ட தொல்பொருள் நினைவுச்சின்னமாக இருந்தாலும் அது பாதுகாக்கப்பட வேண்டும். அங்கு எந்த ஒரு இந்து பழக்கவழக்கங்களையும் அல்லது உருவ வழிபாடுகளையும் தடுக்க அரசு கடமைப்பட்டுள்ளது. ஏனெனில் அது அதன் மதத் தன்மைக்கு முரணாக இருக்கும். இந்தியத் தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் அல்லது பிற நிறுவனங்களுக்கு மண்ணிலிருந்து சிலைகளை அகழ்வாராய்ச்சி செய்ய உத்தரவிடுவதற்கு முன் இதை மனதில் கொள்ள வேண்டும்.
தேசிய நினைவுச்சின்னங்கள் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டவை தவிர பிற அனைத்து “பண்டைய நினைவுச்சின்னங்களும்” 1958 சட்டத்தின் கீழ் இல்லை. கியான்வாபி மசூதியோ அல்லது அதை ஒட்டிய விஸ்வநாதர் கோயிலோ ஆணையத்தால் பண்டைய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
மொத்தத்தில், கியான்வாபி மசூதி 1958 சட்டத்தின் கீழ் இருந்தாலும் இல்லாவிட்டாலும், அது 1991 சட்டத்தின் 3வது பிரிவின்படி பாதுகாக்கப்படுகிறது. இது 1958 சட்டத்தின் கீழ் இருந்தால், மசூதியில் இஸ்லாமியர்களின் வழிபாடு பாதுகாக்கப்பட வேண்டும் மற்றும் அந்த சட்டத்தின் 16 வது பிரிவின் அடிப்படையில் உருவ வழிபாடுகள் தடுக்கப்பட வேண்டும். அவ்வாறு சட்டத்தின் கீழ் இல்லாவிட்டால், 1991 சட்டத்தின் பிரிவு 4-ன் கீழ் அது சிறப்புப் பாதுகாப்பைப் பெறும்.
இத்தகைய சட்டரீதியான முரண்பாடுகளுக்கு இடையில் மசூதியில் இந்து வழிபாட்டிற்கான ஒரு வழக்கைத் தொடுப்பது கடினம்.
மசூதியில் இந்து வழிபாடுகளுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் தர்க்கத்தை மறந்து விட்டனர். எனவே, 1983 ம் ஆண்டின் காசி விசுவநாதர் கோயில் சட்டம் என்று அழைக்கப்படும் உ.பி. மாநில சட்டம் மசூதியை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்ற அவர்களின் பரிந்துரையில் யாரும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. எப்படியிருந்தாலும், 1991 சட்டத்தின் பிரிவு 7, அதன் ஆணைக்கு முரணான அனைத்து சட்டங்களுக்கும் மேலானது.
1991 சட்டம் ஒரு மசூதி உண்மையில் ஒரு மசூதியா என்பதை தீர்மானிக்க இடமளிக்கவில்லை. பழைய மசூதிகள் போன்றவற்றில் வேறுபட்ட நம்பிக்கைகளின் சின்னங்கள் காணப்படலாம் என்பதை அறிந்தே இது இயற்றப்பட்டது மற்றும் அதன் நோக்கம் துல்லியமாக அத்தகைய சின்னங்களின் பொருத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதாகும். சட்டத்தின் கருத்தியல் எளிமை இந்த விஷயத்தை தீர்க்கிறது. கோவிலில் எது கிடைத்தாலும் அது கோவிலாகவும், மசூதியில் எது கிடைத்தாலும் அது மசூதியாகவும் இருக்கும்.
www.thewire .in இணையதளத்தில் வழக்கறிஞர்.நித்யா ராமகிருஷ்ணன் எழுதியுள்ள கட்டுரையின் தமிழாக்கம்
மொழிபெயர்ப்பாளர் : நாராயணன்
நாடகமாடும் பாஜக, நடிக்கும் அரேபிய நாடுகள் | Prophet Muhammad
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.