வாரணாசி நீதிமன்ற உத்தரவின் பெயரில், கியான்வாபி மசூதி வளாகத்திற்குள் நடத்தப்பட்ட ஆய்வு தொடர்பாக காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் ஊடகங்களில் கசிந்துள்ளது. இந்நிலையில் மனுதாரர்களிடம் இருந்து காணொளிகள் மற்றும் புகைப்படங்களின் நகல்கள் அடங்கிய சீலிடப்பட்ட கவரை திரும்பப் பெற நீதிமன்றம் மறுத்துள்ளது.
நீதிமன்ற உத்தரவின்றி காணொளிகள் மற்றும் புகைப்படங்களை வெளியிடமாட்டோம் என்று 5 மனுதாரர்களில் 4 பேர் (ரேகா பதக், மஞ்சு வியாஸ், சீதா சாகு, லக்ஷமி தேவி) உறுதியளித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து அவர்களுக்குச் சீலிடப்பட்ட கவர்களில் நகல்கள் வழங்கப்பட்டன.
ஆய்வின் காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியானதை அடுத்து, தங்களிடம் இருக்கும் சீலிடப்பட்ட கவர்களை திரும்பத் தருவது தொடர்பாக 4 மனுதாரர்களும் நீதிமன்றத்தில் விண்ணப்பம் ஒன்றைத் தாக்கல் செய்திருந்தனர்.
கியான்வாபி மசூதியும் சர்ச்சைக்கான பின்னணியும் – ஒரு விரிவான அலசல்
சீலிடப்பட்ட கவர்களை பிரிக்கவில்லை என்று தெரிவித்துள்ள மனுதாரர்கள், ஊடகங்களில் எப்படி கசிந்தன என்பது குறித்து எங்களுக்குத் தெரியாது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
“காணொளிகள் கசிந்தது தொடர்பாக எங்களுக்கு எதிரான எந்தவொரு குற்றச்சாட்டையும் தவிர்ப்பதற்காக சீல் வைக்கப்பட்ட உறைகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்க, நாங்கள் ஒரு விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தோம். காணோளிகளைப் பெறுவதற்கு முன்பு, நீதிமன்றத்தின் உத்தரவு இல்லாமல் வீடியோக்கள் பகிரங்கப்படுத்தப்படாது என்று நாங்கள் உறுதிமொழி அளித்திருந்தோம். திங்கள் மாலை சீல் வைக்கப்பட்ட கவர்களில் வீடியோக்களைப் பெற்ற சில நிமிடங்களில், தொலைக்காட்சிகளில் அவை ஒளிபரப்பாகத் தொடங்கின. சீல் வைக்கப்பட்ட உறைகளை நாங்கள் இன்னும் திறக்கவில்லை” என்று மனுதாரர்களில் ஒருவரான சீதா சாஹு கூறியுள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மனுதாரர்களின் வழக்கறிஞர் சுதிர் திரிபாதி, “காணொளி கசிந்தது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடவும், கசியவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் நாங்கள் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளோம்” தெரிவித்துள்ளார்.
ஊடகங்களில் கசிந்தது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மனு ஒன்றை மாவட்ட நீதிமன்றத்தில் நகல்களை பெறாத மனுதாரரான ராக்கி சிங்கின் வழக்கறிஞர் ஷிவம் கவுர் தாக்கல் செய்துள்ளார்.
காணொளிகளின் கசிவு ஒரு மிகப்பெரிய சதியைக் குறிக்கிறது என்பதால் சிபிஐ விசாரணை கோரியுள்ளோம். இது தேசிய பாதுகாப்பு மற்றும் மத நல்லிணக்கத்தின் பிரச்னையாக மாறியுள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.
நகல்களை பெறவில்லை என்று கியான்வாபி மசூதியை நிர்வகிக்கும் அஞ்சுமன் இன்டெஜாமியா மசாஜித் தெரிவித்துள்ளது. ஊடகங்களில் கசியவிடப்பட்டது குறித்து ஆட்சேபனை தெரிவித்துள்ள மசூதி நிர்வாக குழுவின் வழக்கறிஞர் ரயீஸ் அகமது, இதன் பிண்ணனியில் உள்ளவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். கியான்வாபி மசூதி தொடர்பான வழக்கு ஜூலை 4 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
வழக்கின் விசாரணை ஜூலை 4 தேதிக்கு வர இருப்பதால், சீலிடப்பட்ட கவர் மனுதாரர்களிடமே இருக்கும் என்று மாவட்ட அரசு வழக்கறிஞர் மணிஷ் பாண்டே தெரிவித்துள்ளார். அதுவரை கவர்கள் பத்திரமாக இருக்கும் என்று மனுதாரரின் வழக்கறிஞர் திரிபாதி உறுதியளித்துள்ளார்.
ஆய்வு காணொளிகள் மற்றும் புகைப்படங்களின் நகலைப் பெற 117 விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Source: The Indian Express
Annamalai தப்ப முடியாது Journalist Protest Against Annamalai | Haseef | Jeevasagapthan
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.