குஜராத் மாநிலம் மோர்பி நகரில் கேபிள் பாலம் அறுந்து விழுந்த சம்பவம் விபத்தா அல்லது சதியா என்று மஹாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார்
கடந்த 2016-ஆம் ஆண்டு இதே போன்ற சம்பவம் மேற்கு வங்கத்தில் நடந்தது. அப்போது பிரதமர் நரேந்திர மோடி அதுகுறித்து இது கடவுளின் செயல் என்று விமர்சித்திருந்தார். இதனை சுட்டிக்காட்டி சிவசேனாவின் அதிகாரப்பூர்வ இதழான ‘சாம்னா’வில் எழுதப்பட்டுள்ள தலையங்கத்தில் பாஜக கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.
அதில், “கடந்த 2016-ஆம் ஆண்டு இதே போன்ற சம்பவம் மேற்கு வங்கத்தில் நடந்தது. அப்போது பிரதமர் நரேந்திர மோடி அது குறித்து ’இது கடவுளின் செயல்’ என்று விமர்சித்திருந்தார். இப்போது இந்தச் சம்பவத்தை என்னவென்று சொல்வார். இது விபத்தா? சதியா? அதிகாரிகளின் ஏமாற்று வேலையால் நிகழ்ந்த வினையா? போன உயிர்களைக் கொண்டு வர முடியுமா? இந்த பாலத்தை மறுசீரமைப்பு செய்த நிறுவனத்தை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.
குஜராத் அரசு பொறுப்புகளைத் தட்டிக் கழித்துவிட முடியாது. இந்தப் பாலம் மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்குத் திறந்துவிடப்பட்ட நான்காவது நாளிலேயே விபத்து நடந்துள்ளது. அப்படியென்றால் பால மறுசீரமைப்புப் பணிகள் உண்மையிலே முடிந்திருந்தனவா இல்லையா? அந்தப் பாலத்தில் எப்படி அத்தனை பெரிய கூட்டம் அனுமதிக்கப்பட்டது. குஜராத் அரசு பதிலளிக்க நிறையக் கேள்விகள் இருக்கின்றன. ஒன்றிய அரசுக்கும் இதில் பொறுப்பிருக்கிறது” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
பாலம் சீரமைப்புப் பணிகள் ஓரீவா குரூப் என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்த நிறுவனத்தைச் சேர்ந்த 4 பேர் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக, குஜராத் மாநிலம் மோர்பி நகரில் தொங்கு பாலம் உடைந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 141-ஆக உயர்ந்துள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.