மோர்பி பாலம் விவகாரம் குஜராத் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கருதப்பட்ட நிலையில், விபத்து நடந்த மோர்பி தொகுதியில் பாஜக வேட்பாளர் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.
குஜராத் சட்டமன்றத் தேர்தலில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. இந்தத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவிய நிலையில், பாஜக மாபெரும் வெற்றியை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருக்கிறது. கடந்த அக்டோபர் மாதம் 30-ம் தேதி குஜராத் மாநிலம், மோர்பியில் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த கேபிள் பாலம் அறுந்து விழுந்ததில் 135 பேர் உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
மோர்பி பால விபத்து: 53 குழந்தைகள் உட்பட 135 உயிர்களுக்கு குஜராத் கொடுத்த பரிசு – ப.சிதம்பரம்
பாலம் மாலையில் இடிந்து விழுந்ததால் இரவு முழுக்க மீட்புப்பணிகள் நடந்தன. பழுது மற்றும் பராமரிப்புக்காக தனியார் நிறுவனத்தை நியமித்தபோது விதிகளை மீறியதாகவும், ஊழல் நடந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி, உள்ளூர் நிர்வாகத்தின் மீது குற்றம்சாட்டப்பட்டது.
மேலும், விபத்து அக்டோபர் 30-ம் தேதி நடந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் ஒன்றாம் தேதி மோர்பிக்குச் சென்றபோது, விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவர்கள் தங்கியிருந்த மருத்துவமனைக்கு, பெயின்ட் அடித்து, சுத்தப்படுத்தி, புதிய படுக்கைகள், வாட்டர் கூலர் என தயார்ப்படுத்தியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவங்கள் குஜராத் தேர்தலில் பாஜகவுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கருதப்பட்டது. காங்கிரஸ் வேட்பாளராக ஜெயந்திலால் ஜெராஜ்பாய் படேலும், ஆம் ஆத்மி கட்சி சார்பில் பங்கஜ் ரன்சாரியாவும், பாஜக சார்பில் ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த காந்திலால் ஷிவ்லால் அம்ருதியா ஆகியோர் போட்டியிட்டனர்.
இந்த நிலையில், இன்று குஜராத்தில் நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் தொடக்கம் முதலே மோர்பி பாஜக வேட்பாளர் முன்னிலை வகித்தார். தற்போது பாஜக வேட்பாளர் அம்ருதியா 62,079 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸின் ஜெயந்திலால் ஜெராஜ்பாய் படேல், ஆம் ஆத்மி கட்சியின் பங்கஜ் ரன்சாரியா ஆகியோரை வீழ்த்தி வெற்றி பெற்றிருக்கிறார்.
குஜராத் மாநிலத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகியவை முக்கிய கட்சிகளாக களமிறங்கின. 182 தொகுதிகளை கொண்ட குஜராத்தில் பெரும்பான்மைக்கு 92 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும்.
தற்போதைய நிலவரப்படி, மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பாஜக 149 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் பெரும்பான்மையை கடந்து பாஜக அரசு வெற்றி உறுதியாகியுள்ளது. காங்கிரஸ் 22 தொகுதிகள், ஆம் ஆத்மி 6, சுயேட்சைகள் 3, சமாஜ்வாதி 1 தொகுதியிலும் முன்னிலையில் உள்ளது.
149 தொகுதிகளில் முன்னிலை வகிக்கும் பாஜக தொடர்ந்து 7-வது முறையாக குஜராத்தில் ஆட்சியை தக்கவைக்க உள்ளது.
Source :
KT ராகவனின் பூஜையறை ரகசியம் | எல்லாம் கேசவ விநாயகம் ட்ரெயினிங் | Aransei Roast | KT Raghavan | BJP
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.