ஏப்ரல் 17 அன்று குஜராத்தின் வதோதரா நகரில் ஏற்பட்ட ஒரு சாலை விபத்து வகுப்புவாத மோதலாக மாறியுள்ளது. இது சம்பந்தமாக 22 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
வதோதரா நகரின் ராவ்புரா பகுதியில் 2 இரு சக்கர வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டது. வாகனத்தில் விபத்துக்குள்ளானவர்கள் இரு வேறு சமூகமாக இருந்ததால் அது வகுப்புவாத மோதலாக வெடித்தது. இதனைத் தொடர்ந்து ராவ்புரா பகுதிக்கு அருகில் உள்ள கரேலிபாக் எனும் இடத்தில் இரு சமூகங்களைச் சேர்ந்தவர்களும் ஒன்று கூடி, ஒருவருக்கொருவர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த வகுப்புவாத மோதலை தொடர்ந்து நேற்று (ஏப்ரல் 18) ஜூபிலிபாக் பகுதியில் உள்ள கோயிலைச் சேதப்படுத்தியதோடு, அங்கிருந்த இரு சக்கர வாகனங்களையும் தள்ளு வண்டிகளையும் அடித்து உடைத்துள்ளனர். இந்த கலவரத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாகக் கூடுதல் காவல்துறை ஆணையர் சிராக் கொராடியா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இது சம்பந்தமாகக் கைது செய்யப்பட்ட 22 பேரில், 19 பேர் கலவரம் செய்த குற்றச்சாட்டிலும், 3 பேர் இரு சக்கர வாகனங்கள் மோதிய சாலை விபத்து தொடர்பாகவும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கலவரம் செய்தல், சட்டவிரோதமாக ஒன்றுகூடல், கொடிய ஆயுதங்களை வைத்திருத்தல், எந்த வகுப்பினரின் மதத்தையும் அவமதிக்கும் நோக்கத்துடன் வழிபாட்டுத் தலங்களைச் சேதப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவர்களின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏப்ரல் 10 அன்று, குஜராத்தின் காம்பத் நகரில் ராம நவமி ஊர்வலத்தின் பொழுது ஏற்பட்ட வன்முறையில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Source : The Wire
அரண்செய் மீது பரப்பப்படும் அவதூறுக்கான பதில்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.