சரக்கு மற்றும் சேவை வரியால் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பீட்டு மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து வழங்க வேண்டும். மேலும், கொரோனா தொற்றுநோய் தங்களின் வருவாயைப் பாதித்துள்ளதால், ஒன்றிய அரசின் திட்டங்களில் அவர்கள் ஒதுக்கும் நிதியின் பங்கை உயர்த்த வேண்டும் என்று சத்தீஸ்கர், ராஜஸ்தான், மேற்கு வங்கம் உட்பட பல்வேறு மாநிலங்கள் கோரிக்கை வைத்துள்ளன.
இந்தியாவின் ஒரே தேசிய வரியாக உள்ள ஜி.எஸ்.டி.யில் VAT போன்ற மாநில வரிகளும் அடங்குவதால் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட ஒன்றிய அரசு கொடுத்து வரும் இழப்பீடு 2022 ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது.
“ஜி.எஸ்.டி.யால் 2022 ஆண்டில் சத்தீஸ்கர் மாநிலத்திற்கு சுமார் ரூ.5,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் இதனை ஈடுகட்ட ஒன்றிய அரசு எந்த ஏற்பாடும் செய்யவில்லை. எனவே சரக்கு மற்றும் சேவை வரியால் ஏற்படும் இழப்பீடு மானியத்தை ஜூன் 2022க்கு பிறகு மேலும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும், ”என்று சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் கூறியுள்ளார்.
கடந்த 3 ஆண்டுகளில் ஜி.எஸ்.டி வரியின் பங்கில் சத்தீஸ்கர் ரூ.13,089 கோடி குறைவாகப் பெற்றுள்ளது. 2022 ஆம் ஆண்டில் ஜி.எஸ்.டி வரியின் மாநில பங்கை முழுமையாகத் தர வேண்டும்.
ஜி.எஸ்.டி இழப்பீட்டு மானியத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடிக்க வேண்டும் என்ற மாநிலங்களின் கோரிக்கை மிகச் சரியானதாகும். இதனை ஒன்றிய அரசு பரிசீலிக்க வேண்டும். தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை 10% லிருந்து 4% ஆக குறைக்க வேண்டும் என்று ராஜஸ்தான் கல்வி அமைச்சர் சுபாஷ் கர்க் தெரிவித்துள்ளார்.
மேலும் ஒன்றிய அரசின் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகளில் அதன் பங்காக 90 சதவீதமும், மாநில பங்காக 10 சதவீதமும் இருந்த முந்தைய நிலை மாறி 50%-50% என்று சரி பாதியாக நிதி ஒதுக்கீடு மாறியுள்ளது. இதனை மீண்டும் பழைய நிலைக்கே மாற்ற வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஏற்பட்ட வருவாய் இழப்பால் குறைந்தது 2 ஆண்டுகளுக்காவது இழப்பீட்டு மானியத்தை நீட்டிக்க வேண்டும் என்று தமிழ்நாடு நிதியமைச்சர் தியாகராஜன் கூறியுள்ளார்.
1000 ரூபாய்க்கு மேல் உள்ள ஆடைகள் மற்றும் காலணிகளுக்கான ஜிஎஸ்டி வரியை 5% லிருந்து 12% ஆக உயர்த்திய ஒன்றிய அரசின் நடவடிக்கையைத் திரும்பப் பெறக்கோரி பல்வேறு மாநிலங்கள் கோரிக்கை வைத்துள்ளன.
Source : The Wire
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.