அதிகார வரம்பை மீறி செயல்படுவதை ஆளுநர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அறிக்கை விடுத்துள்ளது. மேலும், ஆளுநர் மாளிகை அழைத்திருக்கும் மாநாட்டை பல்கலைக்கழகத் துணை வேந்தர்கள், பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.
இது குறித்த செய்தியாளர் சந்திப்பைப் பொதுப் பள்ளிக்கான மாநில மேடையைச் சேர்ந்தவர்கள் நடத்தியுள்ளார்கள். அதில், தேசியக் கல்விக் கொள்கை குறித்த பயிலரங்கம் நடத்த மாநில அரசுப் பல்கலைக்கழகங்களை அறிவுறுத்தும் சுற்றறிக்கையைப் பல்கலைக் கழக மான்யக் குழு திரும்பப் பெற வேண்டும்.
தனியார் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் (CEO) உரையாற்றும் துணை வேந்தர்கள் மாநாட்டை ஆளுநர் மாளிகை ஏற்பாடு செய்திருப்பது வியப்பை அளிக்கிறது. பல்கலைக் கழக வேந்தர் பொறுப்பு பதவி சார்ந்தது. தனி நபர் சார்ந்ததல்ல. ஆளுநராக இருப்பதால் அவர் வேந்தராக பொறுப்பு வகிக்கிறார்.
கிண்டி ஆளுநர் மாளிகை: வனத்துறை அனுமதியின்றி எழுப்பப்பட்ட சட்டவிரோதக் கட்டிடங்கள் – ஆர்டிஐ யில் தகவல்
மாநிலத்தின் கொள்கை முடிவு மாநில அமைச்சரவையில் தான் உருவாகும். ஆளுநர் தன் சொந்த விருப்பத்தை மாநில மக்கள் மீது திணிக்க முடியாது. மாநிலத்தின் வளர்ச்சிக்கான திட்டங்களை உருவாக்குவது மாநில அரசின் பணியாகும். மாநில அரசுப் பல்கலைக் கழக துணைவேந்தர்கள், பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்களுக்கு நாடு எவ்வாறு முன்னேற வேண்டும் என்று தனியார் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் வகுப்பு நடத்த முடியாது. அத்தகையதொரு மாநாட்டிற்கான ஏற்பாட்டை ஆளுநர் மாளிகை செய்துள்ளது தீங்கிளைக்கும் செயல் மட்டுமல்ல, தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் அதிகாரத்தை மறுதலிக்கும் செயலாகும்.
மாநிலப் பல்கலைக்கழகங்களுக்கு இணை வேந்தராக பொறுப்பு வகிக்கும் மாநில உயர்கல்வி அமைச்சர் பங்கேற்பு இல்லாமல் துணை வேந்தர்கள் மாநாட்டை ஆளுநர் மாளிகை ஏற்பாடு செய்திருப்பதன் மூலம் மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிற்கு நிகரான அதிகார மையமாக ஆளுநர் மாளிகை செயல்படுவதின் வெளிப்பாடாக இருக்கிறது.
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை மதிக்காமல் தன் சொந்த விருப்பங்களை நடைமுறைப் படுத்த ஆளுநர் முயற்சிக்கிறார். ஆளுநர் தன் விருப்பதற்கு ஏற்றார் போல் செயல்பட இந்திய அரசமைப்புச் சட்டம் அனுமதிக்க வில்லை.
மக்கள் தேர்ந்தெடுத்த சட்டப் பேரவையும், மாநில அரசும் பொறுப்பில் உள்ளபோது, அவற்றின் அதிகாரத்தை ஆளுநர் எடுத்துக் கொள்ளக் கூடாது.
இந்திய அரசமைப்புச் சட்டம் ஆளுநருக்குத் தந்துள்ள கடமைகளை நிறைவேற்றாமல்; தனக்குத் தானே கூடுதல் அதிகாரங்களை ஆளுநர் வகுத்துக் கொண்டு செயல்படுகிறார்.
மாநிலப் பல்கலைக்கழகத் துணை வேந்தர்கள் மாநாட்டை ஏற்பாடு செய்யும் ஆளுநர் மாளிகையின் எதேச்சாதிகாரச் செயல்பாடானது, பல்கலைக் கழகங்களை உருவாக்கி நிர்வகிக்கும் மாநில அரசின் அதிகாரத்திற்கு விடப்பட்ட நேரடி சவாலாகும். ஆளுநர் நேரடியாக நிர்வாக செயல்பாடுகளில் தலையிடுவதான் மூலம், மாநிலத்தில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட அரசின் மீது அவநம்பிக்கையை உருவாக்கி, மக்களாட்சி மீது மக்கள் நம்பிக்கை இழக்கச் செய்யும் சூழ்ச்சியை செய்கிறார்.
ஆளுநர் பொறுப்பின் வரம்பை மீறி செயல்படுவதன் மூலம் திரு. ஆர். என். இரவி அவர்கள் நாடாளுமன்ற ஜனநாயகத்தை சீர்குலைக்க முயற்சி செய்கிறார். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை வீட அதிக அதிகாரத்தை தான் பெற்றிருப்பது போல் ஆளுநர் நடந்துக் கொள்கிறார். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் இரட்டை ஆட்சி முறையை மாநிலத்தில் மீண்டும் நிறுவ ஆளுநர் முயல்கிறார்.
மாநிலத்தின் குழந்தைகள் நலனில் சிறிதும் அக்கறையில்லாமல், தான் உருவாகி வந்த இயக்கத்தின் நோக்கங்களை நிறைவேற்றவே ஆளுநர் முயல்கிறார்.
தமிழ்நாடு சட்டப் பேரவை இரண்டு முறை நிறைவேற்றி அனுப்பியுள்ள மருத்துவ இளநிலைப் பட்டப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை சட்ட முன் வடிவைக் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்காமல், மௌனம் சாதிப்பதன் வாயிலாக மக்களாட்சியை கேலிக்குள்ளாக்குவதுடன், மிகுந்த அழுத்தத்திற்கும், மன உளைச்சலுக்கு குழந்தகைளை உள்ளாக்கி குழந்தைகளின் நலனுக்காக எதிராக ஆளுநர் செயல்படுகிறார்.
ஆளுநர் மாளிகை விடுத்துள்ள துணை வேந்தர்கள் மாநாடு அழைப்பை ஆளுநர் அவர்கள் திரும்பப் பெற வேண்டும். ஆளுநர் அவர்கள் கூட்டாட்சித் தத்துவத்தை மதித்து செயல்பட மறுத்தால்; ஆளுநர் மாளிகை விடுத்துள்ள மாநாடு அழைப்பை மாநில அரசுப் பல்கலைக் கழகத் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள் நிராகரிக்க வேண்டும். மாநாட்டில் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோருகிறது.
அதிகார வரம்பை மீறி செயல்படும் ஆளுநரின் செயல்பாட்டை வெறும் பார்வையாளராக தமிழ்நாடு அரசு கடந்து செல்லக் கூடாது. மாநில அரசால் உருவாக்கப்பட்டு, மாநில அரசைக் கலந்தாலோசிக்காமல், மாநில அரசின் பங்கேற்பு இல்லாமல் எதேச்சாதிகார போக்கில் கூட்டப்பட்டுள்ள துணை வேந்தர்கள் மாநாட்டில் மாநில அரசின் நிதியில் நிர்வகிக்கப்படும் மாநிலப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர்கள், பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள் பங்கேற்க்கக் கூடாது என்று அறிவுறுத்த வேண்டும்.
‘நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்புகிறேன்’ -முதல்வர் ஸ்டாலினிடம் உறுதியளித்த ஆளுநர்
இந்திய அரசியல் சாசன நிர்ணயச் சபையின் கடும் உழைப்பால் உருவானதே இந்திய நாடாளுமன்ற ஜனநாயகம் என்று அண்ணல் அம்பேத்கர் அவர்கள் விளக்கினார். அத்தகைய நாடாளுமன்ற ஜனநாயகம் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள சூழலில் அரசியல் கட்சிகள் நாடாளுமன்ற ஜனநாயகத்தைக் காத்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆளுநர் அவர்கள் இந்திய அரசமைப்புச் சட்டம் தனக்குத் தந்துள்ள கடமையை நிறைவேற்ற முன்வர வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும் என்பதை ஆளுநருக்கு உணர்த்த அரசியல் கட்சிகள் முன்வர வேண்டும்.
ஆளுநர் அவர்களின் அதிகார வரம்பு மீறலுக்கு எதிராக வலுவான குரலை எழுப்ப வேண்டும் என்று தமிழ்நாடு மக்களைப் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோருகிறது.
மாநில அரசாங்கத்தின் அதிகாரத்தை பறித்துக் கொள்ள எந்த அதிகாரத்தையும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 246யின் கீழ் ஏழாவது அட்டவணையின் பட்டியல் ஒன்றின் வரிசை 66 ஒன்றிய அரசாங்கத்திற்கு தரவில்லை. இளநிலைப் பட்டப் படிப்பு மாணவர் சேர்க்கை தொடங்கி பல்கலைக்கழக நிர்வாகத்தை ஒழுங்கு படுத்துதல் உள்ளிட்ட அனைத்து அதிகாரத்தையும் ஒன்றிய அரசாங்கம் தனதாக்கிக் கொள்ள இயலாது.
மாநில மக்களின் தேவைகளுக்கேற்ப மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்க மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டு வரும் சூழலில் தேசியக் கல்விக் கொள்கையை நடைமுறைப் படுத்த வலியுறுத்தும் சுற்றறிக்கைகளை பல்கலைக் கழக மானியக் குழு திரும்பப் பெற வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பில் பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, முனைவர் முருகையன் பக்கிரிசாமி, ஐ. பி. கனகசுந்தரம், செ. அருமை நாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
************************** *********************** **************************
பெண்கள் பயப்பட வேண்டாம் – வழக்கறிஞர் திலகவதி நேர்காணல்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.