சென்னை மணலியில் ஆன்லைனில் சூதாடி பணத்தை இழந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது தொடர்பான சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வரும் நேரத்தில் மேலும் ஒருவர் ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரிழந்துள்ளது பெரும் பரபாப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மணலி எம்.ஜி.ஆர். நகர் கால்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 26). ஆட்டோ ஓட்டுநர். இவருடைய மனைவி துர்கா. இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன.
ஆன்லைன் சூதாட்டம்: வட மாநிலப் பெண் தற்கொலைக்கு ஆளுநர்தான் பொறுப்பேற்க வேண்டும் – வைகோ
பார்த்திபன், ஆன்லைனில் சூதாடும் பழக்கம் உடையவர். இதனால் ஆன்லைன் சூதாடி அதிகளவில் பணத்தை இழந்து விட்டார். மேலும் மனைவி துர்கா, மகளிர் சுயஉதவிக் குழு மூலம் ரூ.50 ஆயிரம் கடன் வாங்கி கொடுத்தார். அதனையும் பார்த்திபன் திருப்பி கொடுக்கவில்லை.
இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும் பார்த்திபனுக்கு கடன் தொல்லை அதிகமாகியது. கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டு அவரை தொந்தரவு செய்ய ஆரம்பித்தார்கள்.
இதனால் பார்த்திபன் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். நேற்று முன்தினம் தனது மனைவி துர்காவை அவரது தாய் வீட்டுக்கு குழந்தைகளுடன் அனுப்பிவைத்தார். இரவு வீட்டில் தனியாக இருந்த பார்த்திபன், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த மணலி காவல்துறையினர், தற்கொலை செய்த பார்த்திபன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது தொடர்பான சட்ட மசோதா சட்டசபையில் கடந்த அக்டோபர் மாதம் 19-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறியது. அதன்பிறகு இந்த சட்ட மசோதாவை ஆளுநரின் ஒப்புதலுக்கு சட்ட அமைச்சகம் அனுப்பியது. ஆனால் இந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உடனடியாக ஒப்புதல் வழங்கவில்லை.
ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்த நிலையில், இந்த மசோதா தொடர்பாக கவர்னர் சில விளக்கம் கேட்டிருந்தார். அதில் ஆன்லைன் ரம்மி தடைச் சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ள தண்டனைகள் விதிப்பது தொடர்பான அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளதா? என்றும் இதற்கு முன்பாக கொண்டு வரப்பட்ட ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு நீதிமன்றம் கேட்ட சில கேள்விகளையும் ஆளுநர் குறிப்பிட்டு இருந்ததாக தெரிகிறது.
ஆளுநர் கேட்ட விளக்கங்களுக்கு பதிலளித்து தமிழக அரசு கடிதம் அனுப்பியது. அந்த விளக்கத்தை ஆளுநர் ஆய்வு செய்து வருகிறார். இந்த நிலையில், தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, இன்று ஆளுநர் ஆர்.என்.ரவியை சென்னை ராஜ்பவனில் நேரில் சந்தித்தார்.
இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, “ஆன்லைன் ரம்மி தடை மசோதா குறித்து ஆளுநருக்கு நேரில் விளக்கம் அளித்தோம். ஆளுநர் சில சந்தேகங்கள் கேட்டார். அதற்கு பதிலளித்தோம். ஆன்லைன் ரம்மி தடை மசோதா பரிசீலனையில் உள்ளதாகவும் விரைந்து நடவடிக்கை எடுப்பதாகவும் ஆளுநர் உறுதி அளித்துள்ளார் என்று கூறினார்.
மேலும், இதுவரை 21 மசோதாக்கள் நிலுவையில் இருக்கின்றன. குறிப்பிட்ட காலத்திற்குள் ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என எந்த கால நிர்ணயமும் கிடையாது. எனவே குறிப்பிட்ட
காலத்தை நிர்ணயிக்கும்படி நாம் கேட்க முடியாது என்று கூறினார்.
பாஜகவின் விளை’ஆடு’ மங்காத்தா | நம்ம உசுர கொசுறா கேக்குறாய்ங்களே | Aransei Roast | Annamalaibjp
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.