Aran Sei

இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்குக் காந்தியே காரணம்; அகண்ட பாரதம் வேண்டும் – கோட்சேவை கொண்டாடிய இந்துமகா சபையினர்

நேற்று (ஜனவரி 30) காந்தியின் நினைவுநாளை இந்தியாவே கொண்டாடிக் கொண்டிருக்கும் போது மத்தியப் பிரதேசத்தில் உள்ள குவாலியரில் இந்து மகா சபையானது காந்தியைக் கொலை செய்த நாதுராம் கோட்சே மற்றும் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நாராயண் ஆப்தே ஆகியோருக்கு நினைவு தினம் (கோட்சே ஆப்தே ஸ்மிருதி திவாஸ்) அனுசரித்து அஞ்சலி செலுத்தியுள்ளது.

“இந்தியாவுடன் பாகிஸ்தானை ஒருங்கிணைத்து ‘அகண்ட பாரதத்தை உருவாக்க வேண்டும்” என்ற வேண்டுதலோடு பாரத மாதாவிற்கு ஆரத்தி எடுத்தோம்.

“காந்தியை கோட்சே கொலை செய்த நாளான ஜனவரி 30 அன்று கோட்சே கைது செய்யப்பட்டார், அதற்கு எங்கள் கோபத்தை வெளிப்படுத்தும் விதமாக அந்நாளை ‘கோட்சே ஆப்தே ஸ்மிருதி திவாஸ்’ நாளாகக் கடைப்பிடிக்கிறோம்,” என்று ஹிந்து மகாசபாவின் தேசிய துணைத் தலைவர் ஜெய்வீர் பரத்வாஜ் பிடிஐக்கு தொலைப்பேசியில் தெரிவித்துள்ளார்.

காந்தியின் கொள்கைகள் மறைந்து கோட்சேவின் சித்தாந்தம் மேலெழுகிறது – துஷார் காந்தி

இந்த நிகழ்வில் அண்மையில் காந்தியை அவதூறாகப் பேசிய வழக்கில் கைதான “காளிசரண் மகாராஜ் மற்றும் இந்து மகாசபையின் 4 தலைவர்களுக்கு “கோட்சே-ஆப்தே பாரத ரத்னா” விருது வழங்கி மகாசபை கௌரவித்துள்ளதாக” ஜெய்வீர் பரத்வாஜ் கூறியுள்ளார்.

“1947 இல் இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கும், அதனையொட்டி, லட்சக்கணக்கான இந்துக்கள் கொல்லப்பட்டதற்கும் இடம்பெயர்வதற்கும் காந்தியே காரணம்” என ஜெய்வீர் பரத்வாஜ் குற்றம் சாட்டினார்.

“சுதந்திரப் போராட்டத்தில் இந்து மகாசபை பெரும் பங்களிப்பைச் செய்ததாகவும், அதில் பார்ப்பனர்கள் செய்த தியாகத்தைப் பற்றி காங்கிரஸும் பாஜகவும் மக்களுக்குத் தெரியாமல் மறைத்து விட்டதாக” ஜெய்வீர் பரத்வாஜ் குற்றம் சாட்டினார்.

1949 ஆம் ஆண்டு கோட்சே தூக்கிலிடப்பட்ட சிறையில் இருந்து மண்ணைக் கொண்டு வந்து கோட்சேவின் சிலையைச் செதுக்கப் போவதாகக் கடந்த நவம்பரில் இந்து மகாசபை கூறியிருந்தது.

Source : The Hindu

இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்குக் காந்தியே காரணம்; அகண்ட பாரதம் வேண்டும் – கோட்சேவை கொண்டாடிய இந்துமகா சபையினர்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்