பஞ்சாபில் அரசியலில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைச் சமாளிக்க காங்கிரஸ் போராடிக்கொண்டிருக்கையில், அக்கட்சியில் அதிருப்தி அடைந்த மூத்த காங்கிரஸ் தலைவர்களின் குழுவான ஜி-23, பல காலமாக தீர்க்கப்படாத கட்சியின் தலைமைப் பிரச்சினை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதுதொடர்பாக முடிவெடுக்க உடனடியாக காங்கிரஸ் செயற்குழுவை கூட்டுமாறு இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை மூத்த தலைவரும் ஜி-23 குழுவில் உள்ளவருமான குலாம் நபி ஆசாத் வலியுறுத்தியுள்ளார். அத்தோடு கட்சி தலைவர்கள் தொடர்ந்து வெளியேறுவது குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
கடந்த ஆண்டு, காங்கிரஸ் கட்சியின் தலைமையின் மேல் அதிருப்தி கொண்ட மூத்த தலைவர்கள் 23 பேர் (ஜி 23 என்று அழைக்கப்படுகின்றனர்) ஜம்மு காஷ்மீரில் பேரணி நடத்தினர். குலாம் நபி ஆசாத், கபில் சிபல், ஆனந்த் ஷர்மா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் இந்த அதிருப்தி குழுவில் இடம் பெற்றுள்ளனர். காங்கிரஸ் கட்சி பலவீனமடைந்து வருவதாகாவும், காங்கிரஸ் கட்சிக்குள் தேர்தல் நடத்தவும், கட்சியை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
“வரலாற்றில் நாம் தவறாக மதிப்பிடப்படுவோம்” – காங்கிரஸ் அதிருப்தி தலைவர்களுக்கு உருக்கமான கடிதம்
மற்றொரு மூத்த தலைவரான கபில் சிபலும் தொடர்ந்து கட்சி தலைமையில் நிலவும் வெற்றிடத்தை பற்றி பேசியுள்ளார். இதுகுறித்து, நேற்று (செப்டம்பர் 29), செய்தியாளர்களைச் சந்தித்து பேசியபோது, “எங்கள் கட்சிக்கு தற்போது தலைவர் இல்லை. எனவே, கட்சி தொடர்பான முடிவுகளை எல்லாம் யார் எடுக்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது.” என்று தெரிவித்துள்ளார்.
“நாங்கள் கட்சியில் நிலவும் பிரச்சினைகள் குறித்து தொடர்ந்து குரல் எழுப்புவோம். தற்போதைய கட்சி குழப்பங்களைப் பார்ப்பது இதயத்தை உடைய வைக்கிறது. கட்சிக்கு சுயபரிசோதனை தேவை. நாங்கள் கட்சியின் சித்தாந்தத்தை விட்டுவிட்டு வேறு இடத்திற்குச் செல்லப் போவதில்லை. ஆனால், எங்களுடன் இருப்பவர்கள் வெளியேறிவிட்டார்கள்.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மகாத்மா காந்தியை மேற்கோள் காட்டி பேசியுள்ள கபில் சிபில், ஏகபோக அதிகாரம் ஒரே இடத்தில் இருக்கக் கூடாது என்றும், உரையாடல் வரவேற்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் சித்து ராஜினாமா – குளறுபடிகளின் கூடாரமாகிறதா பஞ்சாப் காங்கிரஸ்?
“இது போன்ற ஒரு பரந்த நாட்டில் அனைத்து சிந்தனைப் பள்ளிகளுக்கும் இடம் இருக்க வேண்டும். எங்கள் கருத்தைக் கேளுங்கள். நீங்கள் அதை ஏற்கவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால், குறைந்தபட்சம் செவிக்கொடுங்கள். எங்களுடன் பேச்சு வார்த்தை நடத்துங்கள். ஒரு நாட்டிலோ அல்லது ஒரு கட்சியிலோ அதன் அதிகார கட்டமைப்புகளில் ஏகபோகம் இருக்கக் கூடாது.” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதையடுத்து, நேற்று (செப்டம்பர் 29) மாலை, கபில் சிபலின் கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரின் வீட்டின் முன்பு இளைஞர் காங்கிரஸை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். அத்தோடு, அவரின் வீட்டின்மீது தக்காளிகளை எறிந்துள்ளனர்.
இந்தத் தாக்குதலைக் கண்டித்துள்ள காங்கிரஸ் செயற்குழுவில் உள்ள உறுப்பினரும் ஜி-23 குழுவில் உள்ளவருமான ஆனந்த சர்மா, “கருத்து சுதந்திரம் காங்கிரஸ் கட்சியின் முக்கிய கூறு. அதை சிதைப்பதை ஏற்க முடியாது. தாக்குதலில் ஈடுபட்டவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார்.
Source: New Indian Express
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.