உயர்மட்டக் குழுக்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு 2023-ம் ஆண்டு, இந்தியாவின் தலைமையில் நடைபெறும் என்று ஜி 20 தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
ஜி 20 நாடுகள் கூட்டமைப்பின் 15-வது உச்சி மாநாடு நவம்பர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. நடப்பு ஆண்டுக்கான கூட்டத்திற்கு சவுதி அரேபியா தலைமை வகித்தது. இந்தக் கூட்டத்தில் ஜி 20 கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளான ரஷ்யா, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் அதிபர்கள் காணொலி வாயிலாகப் பங்கேற்றனர். இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் காணொலி வாயிலாக இந்த கூட்டத்தில் கலந்துகொண்டார்.
முன்னதாக, 2022-ம் ஆண்டிற்கான ஜி 20 மாநாடு இந்தியாவின் தலைமையில் நடைபெறும் என்று திட்டமிடப்பட்டது. கடந்த ஆண்டு, ஒசாகாவில் வெளியிட்ட அறிவிப்பின்படி, 2020-ல் சவுதி அரேபியாவிலும், 2021-ல் இத்தாலியிலும், 2022-ம் ஆண்டு இந்தியாவிலும் ஜி 20 மாநாடு நடைபெறவிருந்தது.
இந்நிலையில், தற்போது சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் நடைபெற்ற கூட்டத்தின்போது இந்தத் திட்டத்தில் சிறிது மற்றம் ஏற்பட்டுள்ளது.
“வெற்றிகரமான ரியாத் உச்சி மாநாட்டை நடத்தியதற்காகவும், ஜி 20 செயல்முறையில் அதன் பங்களிப்புக்காகவும் நாங்கள் சவுதி அரேபியாவுக்கு நன்றி கூறுகிறோம். 2021-ம் ஆண்டு இத்தாலியில், 2022-ம் ஆண்டு இந்தோனேசியாவில் மற்றும் 2024-ம் ஆண்டு பிரேசிலில் நடவிருக்கும் அடுத்தடுத்த கூட்டங்களை நாங்கள் எதிர்நோக்குகிறோம்” என்று ஜி 20 ரியாத் உச்சி மாநாடு தலைவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
“சுழற்சி முறையிலான இந்தத் தலைமை, ஆலோசனைகள் மற்றும் பரஸ்பர வசதிகளின் அடிப்படையில் உறுப்பு நாடுகளிடையே தீர்மானிக்கப்படுகிறது” என்று தகவல்கள் கூறுவதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
ஜி 20 தலைவர்களின் இறுதி அறிவிப்பு
பிரதமர் நரேந்திர மோடி உட்பட அனைத்து ஜி 20 தலைவர்கள் கொரோனாவிற்கான சோதனை, சிகிச்சை மற்றும் தடுப்புமருந்தை அனைவருக்கும் மலிவான விலையில் வழங்குவதாக உறுதியளித்தனர். பேரிடரிலிருந்து மக்களையும், வேலைவாய்ப்பையும், பொருளாதாரத்தையும் காப்பதில் உறுதியாக உள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
“கொரோனா தொற்றின் தாக்கத்தால் 2020-ம் ஆண்டு உலகப் பொருளாதாரம் வீழ்ச்சியைச் சந்தித்தது. இருப்பினும், நமது குறிப்பிடத் தக்க கொள்கை நடவடிக்கைகளின் காரணமாகப் பொருளாதாரம் ஓரளவுக்கு மீண்டு வருகின்றது” என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், இந்தப் பொருளாதார மீட்சி “சீரற்றதாகவும், மிகவும் நிச்சயமற்றதாகவும் இருக்கிறது” என்றும் “இது பல அபாயங்களை கொண்டுள்ளது” என்றும் மாநாட்டில் கூறப்பட்டுள்ளது.
பணமோசடி, பயங்கரவாதத்திற்கு நிதி வழங்குதல் மற்றும் அதை பெருக்க நிதியுதவி செய்தல் ஆகியவற்றை தடுக்கும் உலகளாவிய தர நிர்ணய அமைப்பான நிதி நடவடிக்கை பணிக்குழுவுக்கும் (எஃப்ஏடிஎஃப்) ஜி 20 மாநாட்டில் ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.