விவசாயிகளின் குடியரசு தின டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக, டெல்லி காவல்துறை 25 முதல் தகவல் அறிக்கைகளைப் (எப்ஐஆர்) பதிந்துள்ளது. அதில், மத்திய அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்த 40 விவசாயிகள் சங்கத்தின் தலைவர்களில் 30 தலைவர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
டெல்லி செங்கோட்டையில் நுழைந்தது தொடர்பாகப் பதியப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கை ஒன்றில், பஞ்சாபி திரைப்பட நடிகர் தீப் சித்து மற்றும் அரசியல்வாதியும் மால்வா இளைஞர் கூட்டமைப்பின் தலைவருமான லக்பீர் சிங் சித்தனா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
டிராக்டர் பேரணி – ” வன்முறைக்குக் காரணம் அரசின் சதித் திட்டம் ” : விவசாய சங்கங்கள்
காவல்துறை ஆய்வாளர் அனில் குமார் அளித்த புகாரின் அடிப்படையில், சம்யுக்தா கிசான் மோர்ச்சாவை சேர்ந்த ஆறு செய்தித் தொடர்பாளர்கள் உட்பட முப்பத்தேழு விவசாய சங்கத் தலைவர்களின் பெயர்கள், சமாய்பூர் பட்லி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது.
சம்யுக்தா கிசான் மோர்ச்சாவை சேர்ந்த செய்தித் தொடர்பாளர்களான ஜக்ஜித் சிங் தல்லேவால், பல்பீர் சிங் ராஜேவால், தர்ஷன் பால், குல்வந்த் சிங் சந்து, ராகேஷ் டிக்கைட், யோகேந்திர யாதவ் ஆகியோரில், யோகேந்திர யாதவைத் தவிர, மற்றவர்கள் அனைவரும் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தையில் பங்கேற்றவர்கள் என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் குறிப்பிட்டுள்ளது.
குடியரசு தின டிராக்டர் பேரணி: செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள் : அதிர்ந்த தலைநகரம்
கலகம், கிரிமினல் சதி, கொலை முயற்சி மற்றும் கொள்ளை போன்ற குற்றங்கள் பட்டியலிடப்பட்டுள்ள. இந்த முதல் தகவல் அறிக்கையில், “கலகக்காரர்கள் / போராட்டக்காரர்கள் மற்றும் அவர்களது தலைவர்கள் முன்னர் அரசுடன் பரஸ்பரமாக ஒப்புக் கொண்ட வழிமுயைகளைப் பின்பற்றக் கூடாது என்று முன்ரே திட்டமிடப்பட்ட நோக்கத்துடன் நடந்துக்கொண்டனர். இதன் காரணமாகவே வன்முறை நடந்துள்ளது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
டெல்லி காவல் ஆய்வாளர் அனில் குமார், தனது புகாரில், “செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில், அவர்கள் முதலில் சிங்கு எல்லையில் தடைகளை உடைத்து டிராக்டர்கள், குதிரைகள், தள்ளுவண்டிகளில், இரும்பு கம்பிகள், குச்சிகள் மற்றும் வாள்களைக் கொண்டு சென்றனர். முன்னரே தீர்மானிக்கப்பட்ட பாதையில் செல்லாமல், வெளிபுற சுற்றுச் சாலையை நோக்கிச் செல்ல விரும்பினார்கள். காவல்துறை சார்பில் எச்சரிக்கை அறிவிப்புகள் செய்யப்பட்டன. ஆனாலும், போராட்டக்காரர்கள் கலவரத்தைத் தொடங்கினார்கள். காவல்துறையினருக்கு வாள் மற்றும் லத்திகளால் காயங்களை ஏற்படுத்தினார்கள். மேலும் கொலை செய்யும் நோக்கத்துடன் காவல்துறை அதிகாரிகளை நோக்கித் தங்கள் டிராக்டரை ஓட்டிவந்தார்கள்.” என்று குற்றஞ்சாட்டியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.
“நான் விவசாயிகளை வன்முறைக்குத் தூண்டினேன் அல்லது மோதல்களின்போது நான் அங்கு இருந்தேன் என்பதற்கான ஆதாரத்தைக் காவல்துறையினர் எனக்குக் காட்டினால், என்னை அவர்கள் தாராளமாகக் கைது செய்யலாம்.” என்று பஞ்சாப் விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ருல்டு சிங் கூறியுள்ளார்.
“எந்தப் போராட்டமும் ஒரு கச்சேரிபோல நடக்கது. முதல் தகவல் அறிக்கை பதிவது, சிறையில் அடைப்பது, துன்புறுத்துவது. இவை எல்லா போராட்டத்திலும் ஒரு பகுதி ஆகும்.” என்று யோகேந்திர யாதவ் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.