டெல்லியில் குடியரசு தினத்தன்று விவசாயிகள் சார்பில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ள டிராக்டர் பேரணிக்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த மூன்று விவசாய சட்டங்களை திரும்ப பெறக் கோரி, 50 நாட்களுக்கும் மேலாக டெல்லி எல்லைகளில் விவசாயிகள் போராடி வருகிறார்கள்.
இந்நிலையில், வரும் 26-ம் தேதி குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர் பேரணி ஒன்றை நடத்தவுள்ளதாக விவசாயிகள் அறிவித்திருந்தனர். இந்த டிராக்டர் பேரணிக்குத் தடை விதிக்குமாறு, மத்திய அரசு சார்பில் டெல்லி காவல்துறை மூலம், உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குடியரசு தின டிராக்டர் பேரணி: கலந்து கொள்ள பயிற்சி பெறும் பெண்கள்
ஜனவரி 11ஆம் தேதி இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், டெல்லி காவல்துறையினர் பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
இதனையடுத்து, நேற்று முன் தினம் (ஜனவரி 18) இந்த மனு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, எல்.என்.ராவ், வினீத் சரண் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வு, அரசு தரப்பு வழக்கறிஞரிடம், “டெல்லிக்குள் விவசாயிகளின் டிராக்டர் பேரணி நுழைவது என்பது, டெல்லி காவல்துறையின் சட்டம்- ஒழுங்கு விவகாரம். டெல்லிக்குள் யாரை அனுமதிக்க வேண்டும், யாரை அனுமதிக்கக் கூடாது என்பதை முடிவு செய்ய வேண்டியது டெல்லி காவல்துறை. அதனால், இந்த வழக்கை நாங்கள் ஒத்திவைக்கிறோம். வரும் 20 ஆம் தேதி மீண்டும் விசாரிக்கிறோம்.” என்று உத்தரவிட்டனர்.
இந்நிலையில், இன்று (ஜனவரி 20) உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையில் நீதிபதிகள் ஏ.எஸ்.போபன்னா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் அமர்வு முன் இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தலைமை நீதிபதி பாப்டே அமர்வு, மத்திய அரசின் அரசு தரப்பு வழக்கறிஞரிடம், “டெல்லியில் விவசாயிகள் நடத்தும் டிராக்டர் பேரணியை அனுமதிப்பதில் முடிவு எடுக்க வேண்டியது டெல்லி காவல்துறைதான். இது தொடர்பாக நாங்கள் ஏற்கெனவே எங்கள் பதிலை கூறிவிட்டோம். இதில் நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்காது.” என்று முந்தைய உத்தரவை உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும், “இது முழுமையாக உள்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி காவல்துறை தொடர்புடைய விவகாரம். அதனால், நீங்கள் உங்கள் மனுவைத் திரும்பப் பெற அனுமதிக்கிறோம். டெல்லி காவல்துறைக்குதான் இதில் முடிவெடுக்க முழு அதிகாரம் இருப்பதால், அவர்கள்தான் இதைக் கையாள வேண்டும். அது தொடர்பாக உத்தரவுகளைப் பிறப்பிக்கவும் உங்களுக்குத்தான் அதிகாரம் இருக்கிறது. நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்க இயலாது.” என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, மத்திய அரசு சார்பில் டெல்லி காவல்துறையினர் தாக்கல் செய்த மனு திரும்பப் பெறப்படவுள்ளது.
Source: PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.