Aran Sei

இர்ஃபான் பதான், சோனாக்சி சின்ஹா, சுவரா பாஸ்கர்… – விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவான குரல்கள்

த்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி டெல்லி எல்லையில் விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

உலகப் புகழ் பெற்ற பாப் இசைக் கலைஞரான ரிஹான்னா, விவசாயிகள் போராட்டக் களத்திற்கு இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டது பற்றிய சிஎன்என் செய்தியைப் பகிர்ந்து, அதுபற்றி நாம் ஏன் பேசவில்லை என்று ட்வீட் செய்திருந்தார். விவசாயிகள் போராட்டத்தின் மீதான அரசு அடக்குமுறைக்கு எதிரான ரிஹான்னாவின் பதிவு, உலக அரங்கில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

விவசாயிகளின் போராட்டத்திற்கு பாப் இசைக் கலைஞர் ரிஹான்னா ஆதரவு – டிவிட்டரில் பெரும் ஆதரவு

அதனைத் தொடர்ந்து, விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாகப் பருவநிலை மற்றும் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் கிரேட்டா துன்பெர்க், நடிகை மியா கலீஃபா உள்ளிட்ட பல வெளிநாட்டு பிரபலங்களும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சமூக வலைதளங்களில் கருத்து கூறிவருகின்றனர்.

கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பதிவில், “இந்தியாவின் இறையாண்மை விவகாரத்தில் சமரசம் செய்துகொள்ள முடியாது. வெளியிலிருக்கும் சக்திகள் பார்வையாளர்களாக இருக்கலாம். ஆனால் பங்கேற்பாளர்களாக இருக்க கூடாது. இந்தியாவைப் பற்றி இந்தியர்களுக்குத் தெரியும். இந்தியாவுக்காக இந்தியர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். தேசமாக நமது ஒற்றுமையைப் பறைசாற்றுவோம்.” என்று தெரிவித்துள்ளார்.

’முதுகெழும்புள்ள ஒரு இந்திய கிரிக்கெட் வீரரைத் தேடிக்கொண்டிருக்கிறேன்’ – விவசாயிகள் போராட்டம் குறித்து சச்சினின் பதிவுக்கு பதிலடி

மேலும், இதே கருத்தில், கிரிக்கெட் வீரர்கள் சுரேஷ் ரெய்னா, ரோகித் சர்மா, ஆர்.பி.சிங், விராத் கோலி, பால் பாட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால், நடிகர் அக்‌ஷய் குமார், பாடகர் லதா மகேஷ்கர் போன்றோரும் ட்வீட் செய்துள்ளனர்.

இதுகுறித்து நடிகை தாப்சி பன்னு தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார். அதில், “ஒரு ட்வீட் உங்களின் ஒற்றுமையையும், ஒரு நகைச்சுவை உங்களின் நம்பிக்கையையும் அல்லது ஒரு நிகழ்ச்சி உங்களின் மத நம்பிக்கையையும் ஆட்டம் காணச் செய்கிறதென்றால்,  நீங்கள் உங்களுடைய நம்பிக்கைகளை வலுப்படுத்துவதற்கான வேலைகளை செய்ய வேண்டுமே அன்றி, மற்றவர்களுக்கு ‘பிரச்சார ஆசிரியர்’ ஆகக் கூடாது” என்று கண்டனம் தெரிவித்திருந்தார்.

டெல்லியில் நடப்பது மனித உரிமை மீறல் – மியா காலிஃபா கண்டனம்

இந்நிலையில், நடிகரும் காங்கிரஸ் தலைவர் சத்ருகன் சின்ஹாவின் மகளுமான சோனாக்ஷி சின்ஹா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

அதில், “இந்த சர்வதேச பிரபலங்கள் எழுப்பிய குரல்கள் எல்லாம் மனித உரிமை மீறல், இணைய சேவையை முடக்குவது, உணர்வுகள் வெளிப்படுத்தப்படுவதை அடக்குவது, அரசின் பிரச்சாரம், வெறுப்பை பரப்பும் பேச்சு மற்றும் அதிகார துஷ்பிரயோகம் பற்றியது” என்று கூறியுள்ளார்.

சோனாக்ஷி சின்ஹாவின் மற்றொரு இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், விவசாயிகள் போராட்டம் என்பது இந்தியாவின் உள் விவகாரம் என்ற வாதத்தை நிராகரித்துள்ளார். மேலும்,  “அவர்கள் வேற்றுகிரகவாசிகள் அல்ல. மனிதர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் நம் சக மனிதர்கள்.” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

‘யார் சொல்லிக் கொடுத்ததை ஒப்பித்துக் கொண்டிருக்கிறீர்கள்’ – பிரபலங்களுக்கு சித்தார்த் கேள்வி

நடிகர் ஸ்வரா பாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், தாப்சி பன்னு, காலநிலை ஆர்வலர் கிரேட்டா துன்பெர்க், கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் ஆகியோர் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாகவும், ரிஹான்னாவிற்கு ஆதரவாகவும் எழுதிய ட்வீட்டுகளை மறுபகிர்வு செய்து, ஆதரவு தெரிவித்துள்ளார்.

இந்தி திரைப்பட இயக்குனர் ஒனிர், விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக தொடர்ந்து ட்வீட் செய்து வருகிறார்.

கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், தனது ட்விட்டர் பக்கத்தில், “அமெரிக்காவில் கருப்பினத்தவரான ஜார்ஜ் ஃப்ளாய்ட் காவல்துறை அதிகாரியால் கொலை செய்யப்பட்ட போது, இந்தியா தனது வருத்தத்தை சரியான நேரத்தில் வெளிப்படுத்தியது. #சும்மாசொல்றேன்” என்று பதிவிட்டிருந்தார்.

கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி, தனது ட்வீட்டர் பக்கத்தில், “நான் சிறுவனாக இருந்தபோது பொம்மலாட்ட நிகழ்ச்சிகளை பார்த்தது இல்லை. அதனை பார்ப்பதற்கு எனக்கு 35 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார். பல கிரிக்கெட் வீரர்கள் வெளியிட்ட ட்வீட்டுகள் பின்னால் இருந்து இயக்கப்டுபவர்களால் தூண்டப்பட்டது என்ற பொருளில் அவர் அவ்வாறு ட்வீட் செய்திருந்தார்.

அமெரிக்காவைச் சேர்ந்த சமூக வலைதள பிரபலமும், நடிகரும் ஆன அமண்டா செர்னி தனது ட்வீட்டில், “டெல்லி விவசாயிகளின் போராட்டத்தை உலகமே கவனிக்கிறது. பிரச்சினையை புரிந்து கொள்ள நீங்கள் இந்தியராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்கு மனிதநேயம் இருந்தால் போதும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

இர்ஃபான் பதான், சோனாக்சி சின்ஹா, சுவரா பாஸ்கர்… – விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவான குரல்கள்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்