விவசாயிகளின் குடியரசு தின டிராக்டர் பேரணிக்கு, டெல்லி காவல்துறையினர் அனுமதியளித்துள்ள நிலையில், பேரணிக்கான ஏற்பாடுகள் முழுவீசில் நடந்துவருவதாக விவசாயிகள் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து, பேசிய பாரதிய விவசாயிகள் சங்கத்தின் (உக்ரஹான்) தலைவர் ஜாக்சீர் சிங் கோத்தகுரு, “அனுமதி கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் டிராக்டர் பேரணியை நடத்துவதில் நாங்கள் உறுதியாக இருந்தோம். ஆனால் இறுதியில், டெல்லி காவல்துறை அதிகாரிகளே அனுமதித்திருப்பது நல்லது. சிறிய பொட்டலங்களில் உப்பை கட்டி, கையில் வைத்துக்கொள்ள விவசாயிகளிடம் அறிவுறுத்தியிருக்கிறோம். நெரிசல் காரணமாக ரத்தழுத்தம் குறைந்தால், அந்த உப்பை நக்க சொல்லியிருக்கிறோம்.” என்று தெரிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு காவல்துறை அனுமதி – 2 லட்சம் டிராக்டர்கள் டெல்லியில் தயார்
“ஒருவேளை கண்ணீர்ப்புகைக் குண்டுகள் வீசப்பட்டால், கையில் வைத்திருக்கும் மஸ்லின் துணியை ஈரப்படுத்தி முகத்திலும் கண்களிலும் தேய்க்க சொல்லியிருக்கிறோம். நாங்கள் குருவின் வீரர்கள். நாங்கள் வீரர்களைப் போல எதற்கும் தயாராக இருக்கப் போகிறோம்.” என்று கூறியுள்ளார்.
பாரதிய விவசாயிகள் சங்கத்தின் (உக்ரஹான்) பொதுச் செயலாளர் சுக்தேவ் சிங் கோக்ரிகலன் கூறுகையில், “சாப்பிடுவதற்கான பண்டங்களை எடுத்துச் செல்லும்படி விவசாயிகளிடம் கூறியுள்ளோம். காரணம், அங்கு சாப்பாட்டு பந்திகள் நடத்த முடியாது.” என்று குறிப்பிட்டதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.
லூதியானாவில் உள்ள குடானி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பல்வந்த் சிங் குடானி, “நாங்கள் பிஸ்கெட்டுகளையும் ரஸ்குகளையும் தவிர, பின்னிஸ், பஞ்சிரி, மீத்தி போன்ற காய்கறிகள், நம்கீன் ரோட்டிகளையும் மெதி டி ரோட்டிகளையும் எடுத்துச் செல்லயிருக்கிறோம். டெல்லிக்கு செல்லவுள்ள டிராக்டர்களின் எண்ணிக்கையை கணக்கிட்டால், எங்கள் பேரணி முடிவடைய நான்கு நாட்கள் கூட ஆகலாம் என்று தெரிகிறது.” என்று கூறியுள்ளார்.
பஞ்சாப் ஜம்ஹூரி விவசாயிகள் சபையின் பொதுச் செயலாளர் குல்வந்த் சிங் சந்தூ கூறியதாவது, ”பஞ்சாபில் உள்ள அனைத்து இளைஞர்களும் தங்கள் கிராமங்களிலிருந்து டெல்லியை நோக்கி வர தொடங்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நம்முடைய பொறுமையைச் சோதிக்கும் அவர்களின் அராஜகத்திற்கு நாம் பதில் அளிக்க வேண்டும். நம்முடைய பலத்தை காட்ட வேண்டிய நேரம் இது. ஒரே ஒரு டிராக்டர் கூட பஞ்சாபில் இருக்கக்கூடாது.” என்று வலியுறுத்தியதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் குறிப்பிட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.