குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியின்போது, செங்கோட்டையில் ’நிஷான் சாகிப்’ (சீக்கிய மதத்தின் புனித கொடி) கொடி ஏற்றப்பட்டதை தொடர்ந்து, பஞ்சாப் நடிகர் தீப் சித்துவை விவசாயிகள் விரட்டியடிக்கும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
போராட்டத்தில் தீப் சித்து கலந்துகொண்ட சில வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. அதில் ஒரு வீடியோவில், செங்கோட்டையில் ’நிஷான் சாகிப்’ கொடி ஏற்றப்பட்டதை, டிராக்டரில் அமர்ந்துகொண்டு, தீப் சித்து ஃபேஸ்புக்கில் நேரலை செய்வதாக ட்ரைப்யூன் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
அதைத்தொடர்ந்து, அங்கிருக்கும் விவசாயிகள் அவருடன் வாக்கு வாதத்தில் ஈடுபடுவதையும், “ஒட்டு மொத்த போராட்டத்தையும் நீ கெடுத்துவிட்டாய்” என்று அவரிடம் விவசாயிகள் கோபமாகக் கூறுவதையும் கேட்க முடிகிறது.
உடனே சிலர், தீப் சித்துவை பாதுகாக்கும் வகையில் அவரைச் சூழ்ந்துகொள்வதையும், தீப் சித்து அருகில் இருக்கும் மோட்டர் சைக்கிளை நோக்கி ஓடுவதையும் பார்க்க முடிகிறது. அதைத்தொடர்ந்து, அவரைத் திட்டிக்கொண்டே விவசாயிகள் தீப் சித்துவை நோக்கி ஓடுவதையும் அந்த வீடியோவில் பார்க்க முடிகிறது.
மற்றொரு வீடியோவில் தீப் சித்து மோட்டர் சைக்கிளில் வேகமாகப் போவதையும், காரில் சிலர் அவரைத் துரத்திக்கொண்டே செல்வதையும் பார்க்க முடிகிறது.
நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தலாக, இந்த இயக்கம் (விவசாயிகள்) இருப்பதாகக் கூறப்படுவதில் உண்மையில்லையென, தீப் சித்து கூறியிருப்பதாக, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்மை சரிபார்ப்பு – செங்கோட்டையில் மூவர்ணக் கொடியை அகற்றவுமில்லை, காலிஸ்தான் கொடியை ஏற்றவும் இல்லை
தீப் சித்து, நடிகரும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான சன்னி தியோலுக்கு நெருக்கமானவர் என்றும், 2019 நாடாளுமன்ற தேர்தலில் சன்னி தியோலிற்காக, பிரச்சாரம் செய்தவர் என்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்திவெளியிட்டுள்ளது.
விவசாய சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி, தீப் சித்து போராட்டங்களில் பங்கேற்க துவங்கியதிலிருந்து, சன்னி தியோல் அவரிடமிருந்து விலகி இருந்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கோட்டையில் விவசாயிகள், கொடியேற்றிய பிறகு, தீப் சித்து தனது முகநூல் பக்கத்தில் ஒரு காணொலியை வெளியிட்டிருந்தார். அதில், ”நீண்டகாலமாக மக்களின் உணர்வுகளுக்கும், போராட்டங்களுக்கும் மதிப்பளிக்காததே கோபத்திற்கு காரணம். இங்கு நடைபெற்ற அனைத்தும் கோபத்தின் வெளிப்பாடு. இது போன்ற சூழ்நிலைகளில் எந்த ஒரு தனிநபரையும் குற்றம் சாட்ட முடியாது” எனக் கூறியுள்ளார்.
வேளாண் சட்டங்கள்மீதான எதிர்ப்பின் அடையாளமாகவே ’நிஷான் சாகிப்’ (சீக்கிய மதத்தின் புனித கொடி) கொடி, செங்கோட்டையில் ஏற்றப்பட்டது, எனச் சித்து அதில் தெரிவித்துள்ளார்.
”நாங்கள் விவசாயிகள் சங்கமான கிசான் மஸ்தூர் ஏக்தேவின் கொடியையும் ஏற்றினோம். ஆனால், நாங்கள் மூவர்ண கொடியை அகற்றவில்லை. நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு ஆகியவற்றை கேள்விக்குள்ளாக்கும், எந்த ஒரு செயலையும் நாங்கள் மேற்கொள்ளவில்லை. எதையும் தூண்டும் விதமாக, யாரும் பேசவில்லை. நேற்று நடந்த நிகழ்வைத் தனித்து பார்க்கக் கூடாது. பல மாதங்களாக நடைப்பெற்று வந்த போராட்டங்களின் தொடர்ச்சியாகவே பார்க்க வேண்டும்” என தீப் சித்து கூறியதாக தி ஹிந்து குறிப்பிட்டுள்ளது.
“கொடியேற்றிய நிகழ்வு திட்டமிட்டது அல்ல, போராட்டத்தின் நீட்சியாக நடைபெற்றது” என்று கூறியதோடு, எதிர்ப்பின் அடையாளமாகவே, டெல்லிக்குள் நுழைந்ததாகவும், பொது சொத்தைச் சேதப்படுத்தவோ, யாரையும் துன்புறத்தவோ அல்ல என தீப் சித்து தெரிவித்தாக அதில் கூறப்பட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.