Aran Sei

குடியரசு தின டிராக்டர் பேரணி: செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள் : அதிர்ந்த தலைநகரம்

இந்தியாவின் 72 வது குடியரசு தினமான இன்று, விவசாயச் சட்டங்களை திரும்ப பெறக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் செங்கோட்டையை முற்றுகையிட்டுள்ளனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற கோரி போராடி வரும் விவசாயிகளுடன் அரசு மேற்கொண்ட 11 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்து. இதையடுத்து, போராட்டத்தின் ஒரு பகுதியாகக் குடியரசு தினமான இன்று (26.01.21) டிராக்டர் பேரணியை அறிவிக்கப்பட்டது. மத்திய அரசு இந்த பேரணிக்கு எதிராக வழக்கு தொடுத்தும், விவசாயிகளுக்கு ஆதரவாக டிராக்டர் பேரணிக்கு ஒப்புதல் கிடைத்தது.

இந்த டிராக்டர் பேரணியில் பங்கேற்க, காலையிலிருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் டெல்லி-ஹரியானா எல்லையான சிங்கு எல்லையில் குவியத் தொடங்கினர். பின்னர், சிங்கு எல்லையிலிருந்து புறப்பட்ட ஆயிரக்கணக்கான டிராக்டர்கள், கஞ்சவாலா சவுக், அச்சாண்டி எல்லை, கேஎம்பி ஜிடி சாலை வழியாக டெல்லிக்குள் நுழைந்துள்ளனர்.

விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் ஒருவர் உயிரிழப்பு – காவல்துறை சுட்டதுதான் காரணமா?

மத்திய டெல்லி பகுதிக்குள் டிராக்டர்கள் பேரணி நுழையாத வகையில் பல்வேறு தடுப்புகளை டெல்லி காவல்துறையினர் அமைத்துள்ளனர். முக்கியமாக, சிங்கு எல்லையிலிருந்து டெல்லிக்குள் நுழையும் கர்னால் புறவழிச்சாலையில் கன்டெய்னர் பெட்டிகளைக் கொண்டு தற்காலிகச் சுவரை காவல்துறையினர் உருவாக்கியுள்ளனர்.

மேலும், கொடுத்த நேரத்துக்கு முன்னதாக போராட்டத்தை தொடங்கியதாலும், பேரணி நடத்த அனுமதிக்கப்பட்ட இடங்களை மீறி மற்ற இடங்களில் பேரணி சென்றதாலும், விவசாயிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. காவல்துறையினர் விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதை தடுக்க கண்ணீர்ப்புகை குண்டுகள் வீசியும், தடியடிகள் நடத்தியும் விவசாயிகளைத் தாக்கியுள்ளனர்.

‘எங்கள் 1000 டிராக்டர்கள் டெல்லியை நெருங்கும்; தடுத்தாலும் அமைதியாகப் போராட்டம் தொடரும்’ – ஹரியானா விவசாயிகள்

மத்திய டெல்லி ஐடிஓ பகுதியில் உள்ள தீன் தயாள் உபாதயா சாலையில் பேரணி வந்து கொண்டிருந்த நிலையில், டிராக்டர் கவிழ்ந்து விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். காவல்துறையின் வன்முறையினால்தான் அந்த டிராக்டர் கவிழ்ந்து அந்த நபர் உயிரிழந்துள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளதாக இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

1.5 லட்சம் டிராக்டர்களுடன் விவசாயிகளின் படை தயார் – அணிவகுப்பால் அதிரப்போகும் டெல்லி

இந்தத் தடைகள் அனைத்தையும் உடைத்து, டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள் இன்று மதியம் செங்கோட்டையை முற்றுகையிட்டுள்ளனர். செங்கோட்டையை அடைந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் தேசிய கொடியை அசைக்க, அங்கிருந்த கம்பத்தில் சீக்கியர்களின் கொடி ஏற்றப்பட்டுள்ளது.

ஒன்றரை லட்சம் டிராக்டர்கள் அணிவகுப்பிற்குத் தயார் – அடுத்ததாக நாடாளுமன்ற முற்றுகைக்குத் திட்டம்

”அவர்கள் எங்களை தடுக்க முயன்றும் நாங்கள் செங்கோட்டையை அடைந்தோம். எங்கள் லட்சியம் (மூன்று விவசாய சட்டங்களை அரசு திரும்ப பெறுவது) நிறைவேறும் வரை நாங்கள் ஓய மாட்டோம். நாங்கள் மோடி அரசாங்கத்துக்கு ஒரு செய்தியை உணர்த்த விரும்பினோம். எங்கள் கடமை முடிந்து விட்டது, நாங்கள் திரும்பி செல்கிறோம்” என்று செங்கோட்டையை அடைந்த விவசாயி ஒருவர் கூறியதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

டிராக்டர்களுக்கு டீசல் தர மறுக்கும் பங்க்குகள் – விவசாயிகள் பேரணியைத் தடுக்க உ.பி., அரசு சூழச்சி

இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “எந்த ஒரு பிரச்சனைக்கும் வன்முறை தீர்வல்ல. இந்தச் சம்பவத்தில் யாராவது காயப்பட்டால், இந்த தேசமே வருத்தப்படும். தேசத்தின் நலனிற்காக விவசாய விரோதச் சட்டங்களை திரும்ப பெற வேண்டும்” என அவர் பதிவிட்டிருந்தார்.

”அமைதி (அமைதியான போராட்டம்) தான் எங்கள் மிகப்பெரிய பலம். எந்த ஒரு விதி மீறலும் போரட்டத்தை பாதிக்கும் என்பதை நாங்கள் உணர்ந்தே உள்ளோம். கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக நீண்ட போராட்டமும், டெல்லி எல்லைகளில் 60 நாட்களாக நடைபெறும் போராட்டமும் இந்த நிலைமைக்கு வழிவகுத்ததாகத் தெரிகிறது” என்று சம்யுக்தார கிசான் மோர்ச்சா அறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் குடியரசு தின டிராக்டர் பேரணி : அனைத்து மாவட்டங்களிலும் நடத்த தமிழக விவசாயிகள் முடிவு

விவசாயிகள் டெல்லிக்குள் நுழைந்ததையடுத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இன்றைய இரவு முதல் தலைநகர் டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, டெல்லி எல்லைகளில் இணைய சேவை துண்டிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

குடியரசு தின டிராக்டர் பேரணி: செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள் : அதிர்ந்த தலைநகரம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்