Aran Sei

மத்திய அரசுடன் நடந்த 9வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி – டிராக்டர் அணிவகுப்பிற்கு தயாராகும் விவசாயிகள்

Image Credit : Indian Express

த்திய அரசுடன் விவசாயிகள் நடத்திய ஒன்பதாவது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்துள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று விவசாய சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த ஆண்டு நவம்பர் 28 ஆம் தேதி முதல், டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், விவசாய சட்டங்களுக்கு எதிராகவும், போராடும் விவசாயிகளை அப்பகுதியிலிருந்து அகற்றகோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், கடந்த 12 ஆம்தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மூன்று சட்டங்களையும் செயல்படுத்துவதற்கு இடைக்கால தடை விதித்த உச்சநீதிமன்றம், விசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டது.

விவசாயிகளுடன் இன்று 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை – துளியும் நம்பிக்கையில்லை என்று விவசாயிகள் கருத்து

உச்சநீதிமன்றம் அமைத்துள்ள குழு வரும் 19ஆம் தேதி முதல் முறையாக கூடவுள்ளது. அதற்கு முன்னர், ஏற்கனவே திட்டமிட்டபடி மத்திய அரசுடனான பேச்சுவார்த்தையில் இன்று விசாயிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

பேச்சுவார்த்தைக்குப் பிறகு என்டிடிவி -யிடம் பேசிய அகில இந்திய விவசாயிகள் சபையின் (பஞ்சாப்) தலைவர் பல்கரன் சிங் ப்ரார் “மூன்று சட்டங்களையும் திரும்ப பெறமாட்டோம் என்பதில் அரசு பிடிவாதமாகவுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தில் தற்போது கொண்டுவந்துள்ள மாற்றங்களை மட்டும் திரும்பப் பெற வேண்டும் என்று நாங்கள் கூறினோம். ஆனால், வேளாண்துறை அமைச்சர் அதுகுறித்து எந்த பதிலும் கூறவில்லை” என்ற தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், உச்சநீதிமன்றம் அமைத்துள்ள குழுவில் இடம்பெற்றிருந்த, பாரதிய கிசான் சங்கத்தைச் சேர்ந்த புபிந்தர் சிங் மான், அந்த குழுவிலிருந்து விகுவதாக நேற்று அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “நான், ஒரு விவசாயியாகவும் விவசாய சங்க தலைவராகவும் செயல்பட்டு வருகிறேன். பொதுமக்களிடையே நிலவும் உணர்வுகள் மற்றும் கருத்துக்களுகு மதிப்பளித்து, பஞ்சாப் மற்றும் தேசத்தில் உள்ள விவசாயிகளின் நலன்களில் சமரசம் ஏற்படாமல் எனக்கு வழங்கப்படும் எந்தவொரு பதவியையும் தியாகம் செய்ய நான் தயாராக இருக்கிறேன். நான் இந்த குழுவிலிருந்து விலகுகிறேன், நான் எப்போதும் எனது விவசாயிகள் மற்றும் பஞ்சாபுடன் நிற்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் போராட்டத்தின் எதிரொலி – வரலாறு காணாத அரசு கொள்முதல்

“உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழுவிலிருந்த ஒரு நபர் வெளியேறியுள்ளார். மற்றொருவரும் வெளியேறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசு, விவசாய சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வலியுறுத்த வேண்டும். அதுவே எங்களுடைய எதிர்பார்ப்பு” என்று கிசான் சங்ஹார்ஷ் சமிதியின் உறுப்பினர் சிவேந்திர சிங் கூறியுள்ளதாக என்டிடிவி தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், உச்சநீதிமன்றம் அமைத்துள்ள குழுவில் உள்ள அனைவரும், விவசாய சட்டங்களுக்கு ஆதரவானவர்கள் என்று கூறும் விவசாயிகள், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தமாட்டோம் என்று ஏற்கனவே தெரிவித்துள்ளனர்.

நேற்று, அந்த குழுவை சேர்ந்த அனில் கன்வாத், பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், விவசாயிகள் போராட்டம் நடத்தும் இடத்திற்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்த தயார் என்றும், எங்களுக்கு “ஈகோ” இல்லை என்றும் கூறியுள்ளார்.

ஒன்பதாவது கட்ட பேச்சுவார்த்யும் தோல்வியில் முடிவடைந்துள்ள நிலையில், ஜனவரி 26ஆம் தேதி, இந்திய குடியரசுதினத்தன்று, டிராக்டர் அணிவகுப்பு போராட்டத்தை நடத்தும் ஏற்பாடுகளில் விவசாயிகள் இறங்கியுள்ளனர்.

 

மத்திய அரசுடன் நடந்த 9வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி – டிராக்டர் அணிவகுப்பிற்கு தயாராகும் விவசாயிகள்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்