தீஷா ரவி கைது செய்யப்பட்டிருப்பது, நாட்டில் ஜனநாயக உரிமைகளைக் காக்க விரும்புவர்களுக்கு விடப்பட்ட வலுவான மிரட்டலாகும் என்று விவசாயிகள் சங்கங்கள் விமர்சித்துள்ளன.
நேற்று (பிப்பிரவரி 14), பெங்களூருவைச் சேர்ந்த 21 வயதான பருவநிலை செயல்பாட்டாளர் தீஷா ரவியை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது. ஸ்வீடனைச் சேர்ந்த பருவநிலை செயல்பாட்டாளர் கிரேட்டா துன்பெர்க், இந்தியாவில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக, அமைதியான போராட்டங்களை நடத்துவதற்கு வழிகாட்டும், “டூல்-கிட்”, ஒன்றை பகிர்ந்திருந்தது தொடர்பாக, இந்திய அரசுக்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டியதாக டெல்லி காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருந்தது.
தீஷா ரவி கைது – அகிலேஷ் யாதவ், ஜிக்னேஷ் மேவானி, சசி தரூர், கவிதா கிருஷ்ணன் கண்டனம்
தேசவிரோத சதித்திட்டத்தின் ஒரு பகுதி என்று காவல்துறை கூறும் இந்த “டூல்-கிட்” என்பது உண்மையில், விவசாயிகள் போராட்டம் தொடர்பான கட்டுரைகள், சமூக வலைத்தள கணக்குகள் ஆகியவற்றின் தொகுப்பு ஆகும். இந்தப் போராட்டத்தைப் பற்றி அறிந்து கொண்டு, அதைப் பரப்புவதற்கு விரும்பும் யாருக்கும் உதவுவதற்காக அது உருவாக்கப்பட்டது என்று தி வயர் தெரிவிக்கிறது.
போராடும் விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவான சம்யுக்த் கிசான் மோர்ச்சாவின் மூத்த தலைவரான தர்ஷன் பால், “அவர்மீது (தீஷா ரவி) தேசத்துரோக வழக்கு பதிந்திருக்கிறார்கள். இது மிகவும் முக்கியமான பிரச்சினையாகப் பார்க்க வேண்டும். விவசாயிகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பவர்கள், இந்த அரசு தொடர்ந்து தொந்தரவு செய்கிறது. போராட்டக்காரர்களுக்குப் பொருட்கள் கொண்டு வந்து தரும் லாரி உரிமையாளர்களுக்கும் கூட நோட்டீஸ் அனுப்பினார்கள். இது அரசின் மிரட்டல்களுக்கு ஒரு சிறிய எடுத்துக்காட்டு மட்டும்தான். இவை எங்களைப் பாதிக்கும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால், எங்களுக்கு ஆதரவு தர நினைப்பவர்களை ஒருமுறைக்கு இருமுறை இவை யோசிக்க வைக்கும்.” என்று கூறியுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
சம்யுக்த் கிசான் மோர்ச்சா வெளியிட்ட அறிக்கையில், 21 வயதான செயற்பாட்டாளர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்ததுடன், உடனடியாக அவர் நிபந்தனையற்று விடுதலை செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
சம்யுக்த் கிசான் மோர்ச்சாவின் மற்றொரு தலைவரான கவிதா குருகந்தி, “திஷா ரவியுடைய அமைப்பின் செயற்பாடுகளை நான் கண்டிருக்கிறேன். அவர்கள் கல்லூரிகளில் சுறுசுறுப்பாகச் செயலாற்றக்கூடியவர்கள். இளம் செயற்பாட்டாளர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையானது, நாட்டில் ஜனநாயக உரிமைகளைக் காக்க விரும்புவர்களுக்கு விடப்பட்ட வலுவான மிரட்டலாகும். தகவல் தொகுப்பு (டூல்-கிட்) ஒன்றை தயாரித்துக்கொடுத்தார் என்பதற்காக, இது போன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது கொடூரமானது. இதன் வழியாக, இந்நாட்டின் குடிமக்கள் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தால், இதைதான் செய்வோம் என்று எச்சரிக்கை விடுகிறார்கள்.” என்று குறிப்பிட்டுள்ளதாக தி இந்து தெரிவித்துள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.