Aran Sei

‘கைதுகள், வழக்குகள், நோட்டீசுகள் – எங்களை பின்னோக்கி இழுக்காது’ : போராடும் விவசாயிகள் உறுதி

காவல்துறையின் முதல் தகவல் அறிக்கை மற்றும் நோட்டீசுகளைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை என்றும் இவை எங்களை எத்தருணத்திலும் பின்னோக்கி இழுக்காது என்றும் போராடும் விவசாயிகள் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

குடியரசு தின வன்முறை மற்றும் அதையொட்டி நடந்த கைதுகளை தொடர்ந்து, மத்திய அரசிற்கும் விவசாயிகள் சங்கங்களுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கப்படவில்லை. ஜனவரி 22 ஆம் தேதி நடந்த 11-வது கட்ட பேச்சுவார்த்தைக்கு பின், அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைகள் தொடர்பாக எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் வெளியாகவில்லை.

விவசாயிகள்: “நிறைவேற்றப்பட்ட சட்டத்தை நிறுத்திவைக்க அரசுக்கு அதிகாரம் இல்லை” – தோல்வியில் முடிந்த 11ஆம் கட்ட பேச்சுவார்த்தை

இந்நிலையில், இது தொடர்பாக பேசிய பாரதிய கிசான் யூனியன் ஏக்தாவின் பொதுச் செயலாளர் ஜக்மோகன் சிங், “மத்திய அரசு அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைக்கு அழைத்தால், நாங்கள் பங்கேற்க தயாராகவுள்ளோம். கடைசியாக நடந்த பேச்சுவார்த்தையின்போது, மத்திய அரசின் பிரதிநிதிகள் பிடிவாதமான அணுகுமுறையை கடைப்பிடித்தனர். அவர்களின் முன்மொழிவை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதால், குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்ய வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையை விவாதிக்க மறுத்துவிட்டனர்.” என்று குற்றஞ்சாட்டியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து பேசிய அவர், “ஆனாலும், நாங்கள் அந்த முன்மொழிவை ஏற்றுக்கொள்ளவில்லை. அப்படி ஒருபோதும் செய்ய மாட்டோம். ஏனென்றால் எங்கள் கோரிக்கை சட்டங்கள் ரத்து செய்யப்படுவதுதானே அன்றி, ஒத்திவைப்பதல்ல.” என்று கூறியுள்ளார்.

விவசாய சட்டங்கள் பெரும் குழப்பத்தை தோற்றுவிக்கும் – பி சாய்நாத்

விவசாயிகள் சங்க தலைவர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் மீது தொடுக்கப்படும் வழக்குகள், அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைகள் நடப்பதற்கு தடைகற்களாக அமைந்துள்ளதா ? என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள, அகில இந்திய விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் பிரேம் சிங் பாங்கு, “வழக்குகள் திரும்பப் பெற வேண்டும் என்பது அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கான முன்நிபந்தனை அல்ல. ஆனால், பேச்சுவார்த்தைக்கு பின் எந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதானாலும், வழக்குகள் திரும்பப் பெற வேண்டும் என்பது நிபந்தனையாக இருக்கும். ” என்று குறிப்பிட்டுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

விவசாய சட்டங்கள் குறித்த ஆர்டிஐ கேள்வி – பதில் சொல்லி மாட்டிக்கொண்ட மத்திய அரசு

மேலும், இதுகுறித்து, பேசிய லோக் பாலாய் இன்சாஃப் நலன்புரி சங்கத்தின் தலைவர் பல்தேவ் சிங் சிர்சா, “காவல்துறையின் முதல் தகவல் அறிக்கை மற்றும் நோட்டீசுகளைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. ஏனென்றால், இதனைப் போன்ற வலுவான பெரிய போராட்டங்களின் போது, இவை வழக்கமாக நடக்கும் ஒன்றுதான். எதற்கும் நாங்கள் தயாராகவே உள்ளோம். இவை எங்களை எத்தருணத்திலும் பின்னோக்கி இழுக்காது.” என்று உறுதியளித்ததாக அச்செய்தி தெரிவித்துள்ளது.

‘கைதுகள், வழக்குகள், நோட்டீசுகள் – எங்களை பின்னோக்கி இழுக்காது’ :  போராடும் விவசாயிகள் உறுதி

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்