சங்பரிவார் அமைப்புகள் வெடிகுண்டு தயாரிக்கும் பயிற்சியை ஏற்பாடு செய்ததாகவும், நாடு முழுவதும் குண்டுவெடிப்புகளை நடத்தி, இஸ்லாமியர்கள் மீது பழி சுமத்தியதாகவும், அது “2014 மக்களவை தேர்தலில் அவர்களுக்கு உதவியது” என்றும், ஆர்.எஸ்.எஸ். முன்னாள் செயல்பாட்டாளர் ஒருவர் கூறும் பிரமாணப் பத்திரத்தை காங்கிரஸ் பதிவேற்றியுள்ளது.
ஆர்எஸ்எஸ், விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் ஆகியவற்றில் பணியாற்றியதாகக் கூறிக் கொள்ளும் யஷ்வந்த் ஷிண்டே என்பவர் மகாராஷ்டிராவில் உள்ள நான்டெட் மாவட்ட, அமர்வு நீதிமன்றத்தில் 2022, ஆகஸ்ட் 29 அன்று தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தை காங்கிரஸ் ஊடகத் துறைத் தலைவர் பவன் கேரா வியாழக்கிழமை ட்வீட் செய்துள்ளார். ஷிண்டே வெடிகுண்டு தயாரிப்பு மற்றும் ஆயுதப் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டதாகவும், பின்னர் குண்டுவெடிப்புக்காக கைது செய்யப்பட்டவர்களைச் சந்தித்ததாகவும் கூறினார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
நீதியின் மௌனம்: உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி என்.வி. ரமணாவின் செயல்பாடு ஒரு பார்வை
பல சமூக ஊடக பயனர்கள் கேராவின் பதிவை மறு ட்வீட் செய்தாலும், ஆர்எஸ்எஸ், அல்லது பாஜக வியாழன்(1/9/2022) மாலை வரை இதற்கு பதிலளிக்கவில்லை.
“ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகர் யஷ்வந்த் ஷிண்டே, நாடு முழுவதும் குண்டுவெடிப்பு நடத்த சதித்திட்டம் தீட்டப்பட்டது என்றும், அதில் யார் யார் ஈடுபட்டார்கள் என்பது குறித்தும், ஆர்எஸ்எஸ் தேச விரோத நடவடிக்கைகள் குறித்த பயங்கரமான விவரங்களையும் பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார். இதைவிட பெரிய அதிரடி செய்தி வேறென்ன இருக்க முடியும்?” என்று கேரா ட்வீட் செய்துள்ளார்.
ஷிண்டே இதேபோன்ற கூற்றுகளை கூறும் காணொளியும் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய சிங், ”பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்வதில் யஷ்வந்த் ஷிண்டே முன்மாதிரியான துணிச்சலைக் காட்டியுள்ளார். ஷிண்டேவின் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் குற்றப் போக்குடையவர்கள். ஷிண்டேவின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கலாம். அவருடைய பாதுகாப்புக்கு மும்பை போலீஸ் கமிஷனர் ஏற்பாடு செய்ய வேண்டும்,” எனக் கூறியுள்ளார்.
ஷிண்டே 1990 ஆம் ஆண்டு முதல் அதாவது தனது 18 வயதிலிருந்தே ஆர்எஸ்எஸ் உடன் தொடர்பு கொண்டிருந்தார் என்று பிரமாணப் பத்திரம் கூறுகிறது. அவர் 1994 ஆம் ஆண்டு ஜம்மு மாநிலத்தில் இந்துக்கள் கொல்லப்படுவதைப் படித்துவிட்டு அங்கு சென்றார். மேலும் ஆர்எஸ்எஸ் வீரரான இந்திரேஷ் குமார் அவரை ராஜௌரி மற்றும் ஜவஹர்நகர் பகுதியின் “விஸ்தராக்” ஆக நியமித்தார் (ஆர்எஸ்எஸ்ஸில் ஒரு பதவி). 1995 இல், ஃபரூக் அப்துல்லாவை தாக்கியதற்காக ஷிண்டே கைது செய்யப்பட்டார். ஆனால் சில நாட்களுக்குப் பிறகு பிணைவிடுதலைப் பெற்றார். 1998 இல் அவர் அந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
ஷிண்டே ஆர்எஸ்எஸ்ஸில் முதன்மை மற்றும் இரண்டாம் நிலைப் பயிற்சி பெற்று ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் “பிரசாரக்” ஆக நியமிக்கப்பட்டார். 1999 இல் மும்பை திரும்பிய அவர் பஜ்ரங் தளத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். மாணவர் பிரிவான ஏபிவிபியின் ஆக்கிரமிப்பு பிரிவான கர்ஜனாவுக்காகவும் பணியாற்றினார்.
இந்தியாவில் அதிகரிக்கும் தற்கொலைகள் – தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல்
சண்டைக் குணம் கொண்ட சில சிறுவர்களைப் பிடித்து ஜம்முவுக்கு அழைத்துச் செல்லும்படியும், நவீன ஆயுதங்களைப் பயன்படுத்த அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும்படியும் இந்திரேஷ் தன்னிடம் கேட்டுக் கொண்டதாகவும், அதன்படி தானேயில் நடைபெற்ற மாநில அளவிலான விஎச்பி கூட்டத்தில் சிறுவர்கள் தேர்வு நடைபெற்றதாகவும், அங்கு விண்ணப்பதாரர்களுக்கு ஹிமான்ஷு பான்சே என்ற விஎச்பி தலைவர் ஒருவரை அறிமுகப்படுத்தியதாகவும், பின்னர் ஷிண்டே ஹிமான்ஷுவையும் மற்ற ஏழு பேரையும் ஜம்முவிற்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு அவர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளிக்கப்பட்டதாகவும் ஷிண்டேவின் வாக்குமூலம் கூறுகிறது. வெடிகுண்டு தயாரிக்கும் பயிற்சி முகாமைப் பற்றிக் குறிப்பிடும் பிரமாணப் பத்திரம், “இந்த இரண்டு நபர்களும் (விஎச்பி தலைவர் மிலியாண்ட் பரண்டேவின் நெருங்கிய கூட்டாளிகள்) வெடிகுண்டு தயாரிக்கும் பயிற்சி முகாமிற்கு விரைவில் ஏற்பாடு செய்யப் போவதாகவும், அதற்குப் பின் நாடு முழுவதும் குண்டுவெடிப்புகளை நடத்த ஒரு திட்டம் இருப்பதாக விண்ணப்பதாரரிடம் தெரிவித்ததாகவும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிகபட்ச குண்டுவெடிப்புகளை நடத்த அவர் பொறுப்பேற்க வேண்டும் என்று அவர்கள் முன்மொழிந்தனர் என்றும், அதைக்கேட்டு தான் அதிர்ச்சியடைந்ததாகவும், ஆனால் அதை முகத்தில் காட்டாமல், இது 2004 லோக்சபா தேர்தலுக்கான ஆயத்தமா என்று அவர்களிடம் சற்று நடுக்கத்துடன் கேட்டதாகவும், ஆனால் அதற்கு அவர்கள் பதில் சொல்லவில்லை.” என்றும் கூறப்பட்டுள்ளது.
பிரமாணப் பத்திரத்தில், ராகேஷ் தவாடே என்பவர் வெடிகுண்டு தயாரிப்பில் பயிற்சி அளிப்பதற்காக மிதுன் சக்ரவர்த்தி என்ற நபரை அழைத்து வந்தார் என்றும், பின்னர் அவர் மிதுன் சக்ரவர்த்தியின் உண்மையான பெயர் ரவி தேவ் என்று கண்டுபிடித்தததாகவும் அவர் கூறியுள்ளார்.
நீதியின் மௌனம்: உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி என்.வி. ரமணாவின் செயல்பாடு ஒரு பார்வை
பின்னர் 2008 ம் ஆண்டு நடந்த மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் தவாடே கைது செய்யப்பட்டதாக வாக்குமூலம் கூறுகிறது. “பயிற்சிக்குப் பிறகு, வெடிகுண்டுகளை பரிசோதிப்பதற்காக ஒரு தனிமையான காட்டுப் பகுதிக்கு பயிற்சியாளர்களை ஒரு வாகனத்தில் ஏற்றிச் சென்ற அமைப்பாளர்கள் குண்டுவெடிப்பு ஒத்திகையை மேற்கொண்டதாகக் கூறும் அந்த பிரமாணப் பத்திரத்தில், பயிற்சி பெறுபவர்களுக்கு ஒரு சிறிய குழி தோண்டி, அதில் வெடிகுண்டை குறித்த நேரத்தில் வெடிக்கச் செய்யும் கருவியை இணைத்து வைத்து, அதை மண் மற்றும் பெரிய பாறைகளால் மூடி வெடிகுண்டை வெடிக்கச் செய்ய பயிற்சி கொடுத்ததாகவும், அப்போது நடத்திய சோதனை வெற்றிகரமாக நடந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.இத்தகைய திட்டத்தில் வங்காளத்தைச் சேர்ந்த தபன் கோஷ் மற்றும் கர்நாடகாவில் உள்ள ராம் சேனைச் சேர்ந்த பிரமோத் முத்தாலிக் உட்பட பலரின் ஈடுபாட்டை ஷிண்டே குறிப்பிடுகிறார். ஷிண்டே வன்முறையை ஆதரிக்காததால் பல இடங்களில் குண்டுவெடிப்புத் திட்டத்தை நாசப்படுத்தியதாகக் கூறுகிறார்.
2004 பொதுத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற பிறகு, மிலிந்த் பரண்டே போன்ற முக்கிய நபர்கள் தலைமறைவாகிவிட்டனர் என்றும், “தலைமறைவாக இருந்துக் கொண்டு, அவர்கள் நாடு முழுவதும் பல குண்டுவெடிப்புகளை நடத்தினர் என்றும், அத்துடன் பக்கச்சார்பான காவல்துறை மற்றும் ஒருதலைப்பட்ச ஊடகங்களின் உதவியுடன், அவர்கள் இஸ்லாமியர்கள் மீது குற்றம் சாட்டியதாகவும், அது 2014 மக்களவைத் தேர்தலில் அவர்களுக்கு உதவியது,” என்றும் பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
“விண்ணப்பதாரர் இந்து மதம் மிகவும் உன்னதமான மதம் என்று உறுதியாக நம்புகிறார். பொதுவாக இந்துக்கள் பயங்கரவாதப் போக்கு கொண்டவர்கள் அல்ல, ஆனால் ஆர்எஸ்எஸ், விஎச்பி, பஜ்ரங்தள் போன்ற சில இந்து அமைப்புகள் நிச்சயமாக பாஜகவின் அரசியல் ஆதாயத்திற்காக பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுகின்றன,” என்று பிரமாணப் பத்திரம் மேலும் கூறுகிறது.
எதிர்க்கட்சிகளைப் பழிவாங்க அமலாக்கத்துறையைப் பயன்படுத்தும் மோடி அரசு – நடப்பது என்ன?
“ இதுபோன்ற பிரமாணப் பத்திரம் குறித்து தனக்குத் தெரியாது என்றும், அது குறித்து கருத்து தெரிவிக்கப் போவதில்லை,” என்றும் விஹெச்பியின் தேசிய செய்தித் தொடர்பாளர் வினோத் பன்சால் கூறியதாக மக்தூப் மீடியா தெரிவித்துள்ளது. மேலும் அவர், “ பரண்டே தனது வாழ்க்கையை தேசத்திற்காக அர்ப்பணித்தவர் என்றும், பரண்டே மீது குற்றம் சாட்டுபவர்களை நம்பக்கூடாது,” என்றும் கூறியதாக அது தெரிவிக்கிறது.
www.telegraphindia.com இணையதளத்தில் அதன் சிறப்பு நிருபர் எழுதியுள்ள கட்டுரையின் தமிழாக்கம்
Amit sha answerable for missing heroin | sathyam tv investigation revealed | Aravindakshan interview
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.