Aran Sei

‘காங்கிரஸுக்கு தேவை தலைமைதானே தவிர நான் அல்ல’ – காங்கிரஸின் அழைப்பை நிராகரித்த பிரசாந்த் கிஷோர்

2024ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் ‘அதிகாரம் அளிக்கப்பட்ட செயற்குழுவில்’ இடம்பெற வேண்டும் என்ற அக்கட்சியின் அழைப்பை ஏற்க மறுத்துள்ள தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் கட்சியின் இணைய போவதில்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக, இன்று (ஏப்ரல் 26), தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் கட்சியின் ‘அதிகாரம் அளிக்கப்பட்ட செயற்குழுவில்’ ஒரு பகுதியாக சேர்வதன் வழியாக அக்கட்சியில் இணையவும் தேர்தல்களுக்கு பொறுப்பேற்கவும் அழைப்பு விடுத்த காங்கிரஸின் அழைப்பை நான் நிராகரித்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “எனது தாழ்மையான கருத்துப்படி, காங்கிரஸ் கட்சியில் ஆழமாக வேரூன்றியிருக்கும் கட்டமைப்பு பிரச்சனைகளை சீர்திருத்தங்கள் வழியாக சரி செய்ய, என்னை விட கட்சிக்கு தலைமையும் கூட்டுச்செயல்பாடுமே தேவை” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று (ஏப்ரல் 25), செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா, “தேர்தல் வியூகர் பிரசாந்த் கிஷோர் கட்சிக்கு வருவது குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் கட்சிக்குள்ள சவால்களை சமாளிப்பது, கட்சியை புதுப்பிப்பது போன்ற முக்கிய பணிகளுக்காக அதிகாரம் பொருந்திய செயல் குழுவை அமைக்க சோனியா காந்தி முடிவெடுத்துள்ளார்” என்று தெரிவித்திருந்தார்.

‘பிரசாந்த் கிஷோரை காங்கிரஸில் சேர்த்து, உரிய பதவிகளை வழங்க வேண்டும்’ – வீரப்ப மொய்லி

காங்கிரஸ் கட்சியில் பிரசாந்த் கிஷோரை சேர்ப்பதற்கு ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், ஒன்றிய அரசின் முன்னாள் அமைச்சர் வீரப்ப மொய்லி உட்பட பலர் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர்.

இந்திய அரசியல் நடவடிக்கைக் குழு (ஐ-பேக்) என்ற பெயரில், தேர்தல் பரப்புரைகள் குறித்த ஆலோசனைகள் தரும் நிறுவனத்தின் தலைவராக பிரஷாந்த் கிஷோர் செயல்பட்டு வருகிறார்.

இந்நிறுவனம், 2011 ஆம் ஆண்டு, அப்போதைய குஜராத் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடிக்கு பரப்புரை பணிகளைச் செய்து கொடுத்தது. அதைத்தொடர்ந்து, 2014 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில், பாஜகவின் தேர்தல் பரப்புரைகளை முழுமையாக பொறுப்பெடுத்து நடத்திக்கொடுத்து, அக்கட்சி வெற்றி பெற குறிப்பிடத் தகுந்த அளவிற்கும் உதவியது.

அண்மைய சட்டபேரவை தேர்தல்களில், தமிழ்நாட்டில் திமுகவிற்காகவும், மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்காகவும் தேர்தல் ஆலோசகர் பணியில் ஈடுபட்டிருந்தார் பிரசாந்த் கிஷோர். இருகட்சியும் தேர்தலில் வெற்றிப்பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.

மேலும், பஞ்சாபில் கேப்டன் அமரீந்தர் சிங், ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி போன்றோரின் தேர்தல் பணியிலும் பிரஷாந்த் கிஷோர் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக வாஜ்பாயை ஆதரித்தது ஏன்? துரைமுருகன் விளக்கம்

‘காங்கிரஸுக்கு தேவை தலைமைதானே தவிர நான் அல்ல’ – காங்கிரஸின் அழைப்பை நிராகரித்த பிரசாந்த் கிஷோர்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்