கொரோனா பெருந்தொற்று சமயத்தில், இந்தியாவில் பெரும் பணக்காரர்கள் மற்றும் கோடிக்கணக்கான தொழிலாளர்களுக்கும் இடையேயான வருமான ஏற்றத்தாழ்வுகள் மிகவும் மோசமடைந்திருப்பதாக ஆக்ஸ்ஃபாம் என்ற லாப நோக்கமற்ற ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
பெரும்பாலான தொழிலாளர்கள் நீண்ட காலமாக வேலை இல்லாமல் இருப்பதால், அவர்களது அடிப்படை மருத்துவம் மற்றும் சுகாதார வசதிகளை பெற போராடி வருவதாகவும் ஆக்ஸ்ஃபாம் தெரிவித்துள்ளது. ஸ்விட்சர்லாந்தின் தாவோஸ் நகரில் உள்ள, உலக பொருளாதார மன்றத்தில், ஆக்ஸ்ஃபாம் சமர்பித்துள்ள அறிக்கையில், இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.
சமத்துவமற்ற வைரஸ் என்று தலைப்பிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில், கொரோனா ஊடரங்கு காலத்தில் இந்தியாவில் கோடீஸ்வரர்கள் 35 % வளர்ச்சியடைந்துள்ளதாகவும், ஆனால் 84 விழுக்காடு குடும்பங்கள் பல்வேறு நிலையிலான வருமான இழப்புகளால் அவதிப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு, ஏப்ரல் மாதத்தில் மட்டும், ஒவ்வொரு மணிநேரத்திற்கு 1.7 லட்சம் பேர் வேலையிழந்திருக்கின்றனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட மார்ச் மாத காலத்திலிருந்து, இந்தியாவின் முதல் 100 கோடீஸ்வரர்கள் பெற்ற வருமானத்தைக் கொண்டு இந்தியாவின் ஏழ்மையான 138 மில்லியன் மக்களுக்குத் தலா ரூபாய் 94, 045 தர முடியும் என ஆக்ஸ்ஃபாம் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பாபர் மசூதி இடிப்பு – ‘வரலாற்றுப் பிழை சரி செய்யப்பட்டுள்ளது’ – அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பெருமிதம்
இந்த ஊரடங்கு காலத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி ஒரு மணி நேரத்தில் பெற்ற வருமானத்தைப் பெற, ஒருதொழிலாளருக்கு 10, 000 ஆயிரம் ஆண்டுகள் ஆகும் என்றும், முகேஷ் அம்பானி ஒரு வினாடியில் பெற்ற வருமானத்தை ஒரு தொழிலாளி பெற 3 ஆண்டுகள் ஆகும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆக்ஸ்ட் மாதம், முகேஷ் அம்பானி உலகின் நான்காவது பணக்காரராக அறிவிக்கப்பட்டார். அதற்குச் சில மாதங்களுக்கு முன்பு தான் இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட உலகின் கடுமையான ஊரடங்கின் காரணமாக. லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர் வேலையின்றி பணம், உணவு, இருப்பிடமற்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கள் சொந்த ஊரை நோக்கி, நடைபயணமாகச் சென்ற காட்சிகள் தலைப்பு செய்திகளாகியது. அந்தக் கொடுமையான பயணத்தில், நூற்றுக்கணக்கானோர் பலியாகினர். இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எழுப்பிய கேள்விக்கு, ”இறந்தவர்கள் தொடர்பாகத் தங்களிடம் தகவல் இல்லை” என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்தது.
ஊரடங்கினால் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார இழப்புகளை ஈடுசெய்ய, மத்திய அரசு 20 லட்சம் கோடி பொருளாதார நிவாரண திட்டங்களை அறிவித்தது. அந்தத் திட்டங்களின் ஒரு பகுதியாக மோடி தனது கனவாக ஆத்ம-நிர்பார் பாரத் (தற்சார்பு இந்தியா) திட்டத்தை அறிவித்தார்.
ஆக்ஸ்ஃபோம் தனது அறிக்கையில் ”பாதுகாப்பு துறையில் அந்நிய நேரடி முதலீடு மற்றும் விண்வெளி ஆராய்ச்சியில் தனியாரை அனுமதிப்பது ஆகியவற்றை உள்ளடக்கிய, அரசின் பொருளாதார நிவாரண திட்டம், பொருளாதாரத்தில் ஏற்படுத்திய தாக்கத்தின் மதிப்பு, 2 லட்சம் கோடிக்குச் சற்றே அதிகம் அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீதம் மட்டுமே இருக்கும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் முதல் 11 கோடீஸ்வர்கள், இந்தக் கொரோனா பெருந்தொற்று காலத்தில் பெற்ற வருமானத்திற்கு, வெறும் 1 சதவீதம் வரி விதிப்பதன் மூலம், ஜன் ஆஷாதி திட்டத்திற்கு அதிக நிதிகளை ஒதுக்கி மக்களுக்குக் குறைந்த விலையில் தரமான மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்திருக்க முடியும் என ஆக்ஸ்ஃபாம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா நெறிமுறைகளான சமூக இடைவெளிகளை கடைபிடித்தல், கைகளை சுத்தமாக வைத்திருத்தல் போன்றவை ”ஒரு அறை மற்றும் இரு அறை கொண்ட வீடுகளில் வாழும் 32 சதவீதம் மற்றும் 30 சதவீத நகர்புற குடும்பங்களுக்கு ஆடம்பரமாக இருக்கிறது” என ஆக்ஸ்ஃபாம் கூறியிருப்பதாக என்டிடிவி தெரிவித்துள்ளது.
உமர் காலித்திற்கு எதிராக ஊடகங்களின் பொய் பிரச்சாரம் – பொறுப்புடன் செயல்பட நீதிமன்றம் வலியுறுத்தல்
உலக அளவிலான அறிக்கையிலும் இதே போன்ற ஏற்றதாழ்வுகள் அதிகரித்து இருப்பதை காட்டுகிறது. 2020 ஆம் ஆண்டு மார்ச் 18 முதல் டிசம்பர் 31 வரையிலான காலக்கட்டத்தில், உலக கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு 3.9 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை உயர்ந்திருப்பதாகவும், ஆனால் அதே காலகட்டத்தில் வறுமையில் வாழ்பவர்களின் எண்ணிக்கை 200 மில்லியனில் முதல் 500 மில்லியன்வரை அதிகரித்து இருக்கலாமென ஆக்ஸ்ஃபாம் தெரிவித்துள்ளது.
ஆக்ஸ்ஃபாம் அறிக்கையின் படி கொரோனா தொற்றின் தொடக்கத்திலிருந்து உலகின் முதல் 10 பணக்காரர்களுக்கு அதிகரித்த சொத்தின் மதிப்பைக் கொண்டு உலகில் உள்ள எவரும் வறுமையில் வாடுவதை தவிர்ப்பதோடு, அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க செய்ய முடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை குறைக்க இந்திய அரசுக்கு ஆக்ஸ்ஃபாம் தனது பரிந்துரைகளாக, குறைந்தபட்ச ஊதியத்தை உடனடியாகத் திருத்தி, அதை உரிய இடைவெளிகளில் அதிகரிக்க வேண்டும் எனக் கூறியுள்ளது.
மாஸ்டர் : கொரோனா அடைப்புக்கு பிறகு நம்பிக்கை ஊட்டிய வரவேற்பு – ஷியாம் சுந்தர்
50 லட்சத்திற்கும் மேல் வருமானம் பெறுபவர்களுக்கு, 2 சதவீதம் கூடுதல் வரி விதிப்பது மற்றும் கொரோனா பொருந்தொற்று காலத்தில், அதிக லாபங்கள் ஈட்டும் கம்பெனிகளுக்குத் தற்காலிக வரிகள் விதிப்பதை மேற்கொள்ள அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
நல்ல எதிர்காலத்தை உருவாக்க, குறிப்பிட்ட மற்றும் வலுவான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய நேரமிது. குடிமக்களின் குரல், சமமான மற்றும் நியாயமான எதிர்காலத்தை நோக்கியதாக இருப்பதாகவும், ஆக்ஸ்ஃபாம் என்ற லாப நோக்கமற்ற ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.