Aran Sei

கூட்டணியில் இருந்துகொண்டு, மத்திய அரசை விமர்சிப்பது ஏன்? – பட்ஜெட் குறித்து எதிர்கட்சிகள் கருத்து

ன்று (பிப்ரவரி 23), தமிழக துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், 2021-2022 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல்  செய்துள்ளார்.

பட்ஜெட் தொடர்பாக, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன்  வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 5 ஆண்டுகளில் அரசின் கடன் தொகை ரூபாய் 5 லட்சத்து 70 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளதுடன், வருவாய்ப் பற்றாக்குறை ரூபாய் 43 ஆயிரத்து 417 ஆயிரம் கோடி எனக் கூறும் நிதிநிலை அறிக்கை, அடுத்து ரூபாய் 84 ஆயிரத்து 686 கோடி புதிதாகக் கடன் வாங்க இலக்கு நிர்ணயித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

ஆரவாரமாக அறிவிக்கப்பட்ட பயிர்க் கடன் தள்ளுபடியான ரூபாய் 12 ஆயிரத்து 110 கோடிக்கு, நிதிநிலை அறிக்கை ரூபாய் 5,000 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது என்று கூறியுள்ள முத்தரசன், அடுத்து வரும் அரசின் தலையில் ரூபாய் 7,000 கோடி கடனைச் சுமத்தியுள்ளது என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், “மத்திய அரசு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தமிழகத்திற்குப் போதிய நிதி வழங்கவில்லை என்றும், நிதிக் குழுவில் நீடித்து வரும் அநீதி சரி செய்யப்படவில்லை என்றும் குற்றம் சாட்டும் நிதிநிலை அறிக்கை, வரும் தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கரம் கோர்த்து வரும் வெட்கமற்ற செயலை, மக்கள் மறந்து விடுவார்கள் எனக் கருதுகிறது.” என்று முத்தரசன் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக பட்ஜெட்: மொத்த கடன் 5.7 லட்சம் கோடியாக உயரும் – வருவாய் பற்றாக்குறை 3 மடங்கு உயர்ந்துள்ளது

முன்னதாக, பட்ஜெட் தாக்கலின்போது பேச வாய்ப்பு தரவில்லை என்று கூறி திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர், செய்தியாளர்களை சந்தித்து பேசிய திமுக பொது செயலாளர் துரைமுருகன், “திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் ஆட்சியிலிருந்து இறங்கும்போது தமிழக அரசின் கடன் ஒரு லட்சம் கோடியாகத்தான் இருந்தது. இன்றைக்கு எடுத்த எடுப்பிலேயே கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் நிதியமைச்சர் எங்கள் ஆட்சியின் கடன் ரூ.5.70 லட்சம் கோடி என்று சொல்கிறாரென்றால், ஆட்சி செய்ய அருகதையற்ற அரசு இது என்பதற்கு வேறு சான்று தேவையில்லை.” என்று அவர் விமர்சித்துள்ளார்.

“கடன் வாங்கி, வாங்கி தமிழகத்தை ரூ.5.70 லட்சம் கோடியாக ஆக்கிய கடனாளி அரசுதான் இந்தப் பழனிசாமி அரசு. கடன் வாங்கி மக்களுக்கு நன்மை செய்யவில்லை, டெண்டர் விட்டு பினாமிகளுக்குச் சலுகைகள் செய்து கொடுத்துள்ளார்கள். தமிழக நிதி மேலாண்மையில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி இருவரும் அழிக்க முடியாத கரும்புள்ளியை ஏற்படுத்தியுள்ளனர். அனைத்துத் துறைகளிலும் படுதோல்வி அடைந்த ஒரு அவல ஆட்சியைக் கொடுத்து விட்டுச் செல்வோரின் கடைசி நிதி நிலை அறிக்கைதான் இது.” என்று துரைமுருகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

‘ஜிஎஸ்டியால் மாநிலத்திற்கு நிரந்தர வருமானம் என்று நம்பியது பொய்யாய் போனது’ – ஓ.பன்னீர்செல்வம்

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கையில், துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட், சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த அரசு வழங்கியுள்ள இனிப்பை போன்றதாகும் என்று விமர்சித்துள்ளார்.

“கிராமங்கள் முதல் நகரங்கள் வரை உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மகப்பேறு மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில்நுட்ப ஊழியர்களின் பற்றாக்குறையை சரிசெய்து, அரசு மருத்துவமனைகளை பொதுமக்களின் 100 சதவிகித பயன்பாட்டிற்கு ஏற்றவாறு செய்யாமல், அம்மா மினி கிளினிக் என்ற திட்டத்தைத் தொடங்கி, அதற்கு ரூ.144 கோடி ஒதுக்கியிருப்பது, அரசு மருத்துவமனைகளுக்கு இந்த அரசு மூடுவிழா நடத்தி தனியார் மருத்துவமனைகளுக்கு மறைமுகமாக உதவும் திட்டம் போல் தெரிகிறது.” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

“மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்கும் தேசிய பேரிடர் நிதி போதுமானதாக இல்லை. பெட்ரோல், டீசல் பொருட்களின் மேல்வரி மற்றும் கட்டணங்களில் மாநில அரசின் பங்கை மத்திய அரசு வழங்குவதில்லை, பல்வேறு திட்டங்களுக்கான நிதியை மத்திய அரசு விடுவிக்கவில்லை, நிலுவையில் உள்ள தமிழகத்திற்குத் தரவேண்டிய நிதியை மத்திய அரசு வழங்காதது, உள்ளாட்சிகளுக்கு வழங்கும் மானியத்தை மத்திய அரசு குறைத்துவிட்டது போன்ற மத்திய அரசின் மீதான நிதியமைச்சரின் குற்றச்சாட்டுகள் பாஜகவை ஆதரிக்கும் அதிமுகவை பாஜக ஏமாற்றுகிறது என்ற ஒப்புதல் வாக்குமூலமாகும்.” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழகத்தின் நிதி நிலை கடுமையாக மோசமடைந்துள்ளது – 15வது நிதி கமிஷன் அறிக்கை

மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “’மத்திய அரசுடன் சுமுகமாக இருப்பதால் நாங்கள் கேட்பதை எல்லாம் பாஜக அரசு செய்கிறது’ என்று கூறும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அரசின் வரிப் பங்கீட்டில் தமிழகம் வஞ்சிக்கப்படுவது பற்றியும், பேரிடர் நிவாரண நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசு செய்து வரும் துரோகம் பற்றியும் ஏன் வாய் திறக்கவில்லை?” என்று கேல்வி எழுப்பியுள்ளார்.

கொரோனா கொடுந்துயரத்தால் வாழ்வாதாரங்களை இழந்த லட்சக்கணக்கான அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் வேலையை இழந்த தொழிலாளர்களின் நலனைப் பற்றி அதிமுக அரசு கிஞ்சிற்றும் கவலைப்படவில்லை என்றும் மூடப்பட்டுள்ள சிறு, குறு, நடுத்தரத் தொழிற்சாலைகளை மீண்டும் இயங்கச் செய்வதற்கு ஊக்குவிப்புத் திட்டங்கள் எதுவும் இல்லை என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், “கடந்த ஐந்து ஆண்டுகளாக உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகம் மத்திய, மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீடு இன்றி நிலைகுலைந்துபோய், மக்களின் அடிப்படைத் தேவைகள் கூட நிறைவேற்றப்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி 90 விழுக்காட்டிலிருந்து 40 விழுக்காடாகக் குறைக்கப்பட்டு இருப்பது உள்ளாட்சி நிர்வாகத்தைச் சீர்குலைக்கச் செய்யும்.” என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.

கூட்டணியில் இருந்துகொண்டு, மத்திய அரசை விமர்சிப்பது ஏன்? – பட்ஜெட் குறித்து எதிர்கட்சிகள் கருத்து

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்