Aran Sei

“பெட்ரோல், டீசல் மீதான வரி விதிப்பு – பொருளாதார திறமையின்மையை மறைக்க நடத்தப்படும் கொள்ளை ” – சோனியா காந்தி

Image Credit : indianexpress.com

பெட்ரோல் மீதும் டீசல் மீதும் விதிக்கப்படும் கலால் வரியை குறைக்குமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

சனிக்கிழமை மும்பையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 97-ஐ தாண்டிய நிலையில், டீசல் லிட்டருக்கு ரூ 88-ஐ விட அதிகரித்திருக்கிறது என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கிறது.

சென்னையில் பெட்ரோல் விலை ரூ 92.59 ஆகவும், டீசல் விலை ரூ 85.98 ஆகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உயர்ந்து கொண்டிருக்கும் பெட்ரோல், டீசல் விலை – காரணம் என்ன?

காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் இருந்ததை விட சர்வதேச கச்சா எண்ணெய் விலை பாதியாக உள்ளது என்று காங்கிரஸ் தலைவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

“2020-ம் ஆண்டில் உள்நாட்டு கச்சா எண்ணெய் உற்பத்தி 18 ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவாக வீழ்ச்சியடைந்திருக்கிறது” என்பதையும் சோனியா காந்தி பதிவு செய்துள்ளார்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, கடந்த ஆறரை ஆண்டுகளில் டீசல் மீதான கலால் வரியை 820%-ம் பெட்ரோல் மீதான கலால் வரியை 258%-ம் உயர்த்தியிருப்பதை சுட்டிக் காட்டியுள்ள சோனியா காந்தி, இந்த காலகட்டத்தில் கலால் வரியிலிருந்து மட்டும் அரசு ரூ 21 லட்சம் கோடி வசூலித்திருக்கிறது என்று கூறியுள்ளார். இந்தத் தொகை “இன்னும் மக்களுக்கு பயனுள்ள வகையில் செலவிடப்படவில்லை” என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

“ஒவ்வொரு லிட்டர் பெட்ரோல் மீதும் 33 ரூபாயும், ஒவ்வொரு லிட்டர் டீசல் மீதும் 32 ரூபாயும் என்று மத்திய அரசு பேராசையுடன் கலால் வரி விதித்துள்ளது. இந்த வரித் தொகைகள், இந்த எரிபொருட்களின் அடிப்படை விலைகளை விட அதிகம்” என்று அவர் கூறியுள்ளார்.

எரிபொருட்கள் விலை உயர்வு, விவசாயிகளையும், ஏழைகளையும், நடுத்தர, சம்பளம் வாங்கும் வர்க்கத்தினரையும் பாதிக்கிறது என்று கூறியுள்ள சோனியா காந்தி, அவர்கள், “இது வரை இல்லாத பொருளாதார சுணக்கம், பரவலான வேலைவாய்ப்பின்மை, சம்பள குறைப்புகள், வேலை இழப்புகள், விலைவாசி உயர்வு, வருமான சுருக்கம் ஆகியவற்றுடன் போராடி வருகின்றனர்” என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளார்.

தொழிலாளர்களின் பொருளாதார நெருக்கடி – 100 நாள் வேலைத் திட்டத்தில் மாதம் 2 கோடி குடும்பங்கள்

“மக்களின் துயரத்தையும் வருத்தத்தையும் பயன்படுத்தி ஆதாயம் ஈட்டுவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது” என்று சோனியா காந்தி நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.

“பொருளாதாரத்தை மோசமாக நிர்வகிப்பதை மூடி மறைப்பதற்கான கொள்ளையே இது” என்று கூறியுள்ள அவர், முதன்மை எதிர்க்கட்சி என்ற முறையில், “‘ராஜ் தர்மத்தை’ பின்பற்றி, கலால் வரிகளை குறைப்பதன் மூலம் எரிபொருள் விலைகளை குறைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்” என்று நரேந்திர மோடியிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

“பெட்ரோல், டீசல் மீதான வரி விதிப்பு – பொருளாதார திறமையின்மையை மறைக்க நடத்தப்படும் கொள்ளை ” – சோனியா காந்தி

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்