Aran Sei

தொழிலாளர்களின் பொருளாதார நெருக்கடி – 100 நாள் வேலைத் திட்டத்தில் மாதம் 2 கோடி குடும்பங்கள்

Credit : indianexpress.com

காத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாகவே உள்ளது என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட செய்தி ஒன்று தெரிவிக்கிறது.

40 லட்சத்துக்கும் அதிகமான குடும்பங்கள் இந்த நிதியாண்டுக்கான முழு 100 நாள் வேலையையும் பயன்படுத்தி முடித்து விட்டனர்.

ஏப்ரல்-மே மாதங்களில் முழு அடைப்புக்குப் பிறகு பொருளாதார நடவடிக்கைகள் படிப்படியாக அனுமதிக்கப்பட்டு 8 மாதங்களுக்குப் பிறகும், 2 கோடிக்கும் அதிகமான குடும்பங்கள் ஒவ்வொரு மாதமும் இந்தத் திட்டத்தின் கீழ் வேலை செய்கின்றனர்.

Credit : indianexpress.com
தகவல் – நன்றி – indianexpress.com (மொழியாக்கம் செய்யப்பட்டது)

ஊரகப் பகுதிகளில் விவசாயத்தில் ஏற்பட்ட மாற்றங்களைத் தொடர்ந்து, கூலித் தொழிலாளர்களின் பொருளாதார நெருக்கடியை தணிப்பதற்கு, ஆண்டுக்கு ஒரு குடும்பத்துக்கு 100 நாட்கள் வரை வேலை வாய்ப்பு வழங்கும் திட்டம் 2006-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது தொடங்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின் கீழ் வேலை செய்பவர்களுக்கான கூலிக்கான நிதி மத்திய அரசால் ஒதுக்கப்படுகிறது. இதன் கீழ் ஊரகப் பகுதிகளில் ஏரி மராமத்து முதலான வேலைகள் திட்டமிடப்படுகின்றன.

இந்தத் திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்புக்கான வேண்டல் குறையாமல் இருப்பது, பொருளாதார நடவடிக்கைகள் படிப்படியாக அனுமதிக்கப்பட்டாலும், தொழிலாளர்கள் வேலை தேடுவது கடினமாக இருப்பதைக் காட்டுவதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவிக்கிறது.

இந்த நிதியாண்டில் (ஏப்ரல் 1, 2020 முதல்) பிப்ரவரி 17-ம் தேதி வரையில் 7.17 குடும்பங்கள் (10.51 கோடி நபர்கள்) இந்தத் திட்டத்தை பயன்படுத்தியிருக்கின்றனர். 2006-ம் ஆண்டில் இந்த ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் தொடங்கியதிலிருந்து இல்லாத அளவுக்கு இது அதிக அளவாகும் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவிக்கிறது.

கொரோனா முழு அடைப்பு தொடர்பாக மத்திய அரசு அறிவித்த பொருளாதார நடவடிக்கைகளில், ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்துக்கு ரூ 40,000 கோடி நிதி கூடுதலாக ஒதுக்கப்பட்டது. இது 2020-21 நிதியாண்டுக்கு ஒதுக்கப்பட்ட ரூ 61,500 கோடிக்கு கூடுதலாகும். இவ்வாறு, ஒரு நிதியாண்டில் ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு முதல் முறையாக ரூ 1 லட்சம் கோடியை தாண்டியுள்ளது.

கொரோனா முழு அடைப்பைத் தொடர்ந்து இலட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் தத்தமது கிராமங்களுக்கு திரும்பிச் சென்றதால் ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்துக்கான வேண்டல் பெருமளவு அதிகரித்தது. ஜூன் 2020-ல் இது அதிகபட்சமாக இருந்தது. அந்த மாதத்தில் 3.89 கோடி குடும்பங்கள் இந்தத் திட்டத்தை நாடின. இது 2019 ஜூன் மாதத்தை விட 80% அதிகமாகும்.

ஜூலை மாதம் 2.72 கோடி குடும்பங்கள் இந்தத் திட்டத்தை பயன்படுத்தியது, முந்தைய ஆண்டு அதே மாதத்தை விட 83% அதிகமாகும்.

ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் இந்தத் திட்டத்தை பயன்படுத்தும் குடும்பங்களின் எண்ணிக்கை தலா சுமார் 2 கோடியாக இருந்தது. நவம்பர் மாதம் இது குறைந்து 1.84 கோடியாக இருந்தாலும், அது முந்தைய ஆண்டின் நவம்பர் மாதத்தில் வேலை செய்த குடும்பங்களின் எண்ணிக்கைய விட 47.27% அதிகம்.

மீண்டும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் வேலை செய்யும் குடும்பங்களின் எண்ணிக்கை மாதத்துக்கு 2 கோடியை தாண்டியுள்ளது.

தமிழ்நாடு, மேற்கு வங்கம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிகபட்சம் வேண்டல் இருந்தது என்று தெரிவிக்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ்.

தொழிலாளர்களின் பொருளாதார நெருக்கடி – 100 நாள் வேலைத் திட்டத்தில் மாதம் 2 கோடி குடும்பங்கள்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்