நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏழைகளின் கைகளில் பணத்தை வழங்கினால்தான் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி பெறும் என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இன்று (ஜனவரி 29), நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்க இருக்கும் நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் காணொலி மூலம் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நேற்று (ஜனவரி 28) நடந்துள்ளது.
40 ஆண்டுகளில் முதன்முறையாக நுகர்வோர் செலவு சரிவு – வீழ்ச்சியில் பொருளாதாரம்
இதையடுத்து, முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து பேசியபோது, ”அடுத்த 6 மாதங்களுக்கு 30 சதவீத ஏழை மக்களுக்கு நேரடியாகப் பணத்தை வழங்கினால்தான் சந்தையின் தேவையானது அதிகரித்து, பொருளாதாரம் வளர்ச்சியடைத் தொடங்கும். பொருளாதார வளர்ச்சிக்கு நேரடியாக மக்கள் கையில் பணத்தை வழங்குதல்தான் ஒரே வழி.” என்று தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரம் தற்போது மந்தநிலையில் இருக்கிறது என்று காங்கிரஸ் நம்பவதாகக் குறிப்பிடும் ப.சிதம்பரம், “பொருளாதாரத்தில் மீட்சி நிலை என்பது மெதுவாகவும், வலி மிகுந்ததாகவும் இருக்கும். 2021-22ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சியான ஜிடிபி 5 சதவீதத்துக்கு மேல் இருக்க வாய்ப்பில்லை.” என்று கூறினார்.
தொடர் வீழ்ச்சியில் இந்திய பொருளாதாரம் – கொரோனாவே காரணம் என்கிறது மத்திய அரசு
“2021-22ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப் போகிறார். திருத்தப்பட்ட மதிப்பீடுகளின் அடிப்படையில் அலங்கார பட்ஜெட்டைத் தாக்கல் செய்துவிடுவாரோ என்று பயப்படுகிறோம். 2020-21ஆம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகள், ஒதுக்கீடுகள் அனைத்தும் போலியாகிவிட்டன. இலக்குகள் எதையும் நம்மால் அடையவில்லை.” என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், “கொரோனாவால்தான் நாட்டின் பொருளாதாரம் சரிந்துவிட்டது என்று சொல்ல முடியாது. காரணம், கொரோனா பாதிப்புக்கு முன்பிருந்தே, பொருளாதார வளர்ச்சி சரிவுப் பாதையில்தான் சென்று கொண்டிருக்கிறது. 2018-19ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து 8 காலாண்டுகள் சரிவில் சென்றது. இந்த நேரத்தில் கொரோனா தொற்று வந்து, பொருளாதாரத்தைப் பாதாளத்துக்குக் கொண்டுசென்று மைனஸ் 23.9 சதவீதத்துக்கு நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் தள்ளியது. 2-வது காலாண்டில் மைனஸ் 7.5 சதவீதம் சரிந்தது.” என்று ப.சிதம்பரம் விளக்கியுள்ளார்.
“இந்தியப் பொருளாதாரம் மீள்வதற்கு நீண்ட காலம் பிடிக்கும் ” – ஆக்ஸ்ஃபோர்ட் எகனாமிக்ஸ்
2020-21ஆம் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி மைனஸில்தான் இருக்கும் என்றும் நடப்பு நிதியாண்டு பட்ஜெட்டில் குறிப்பிட்டது போன்று எந்தத் துறையிலும் இலக்குகளை அடைய முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“வருவாய் இலக்கையும் அடைய முடியாது, முதலீடு கடுமையாகப் பாதிக்கும், வருவாய் பற்றாக்குறை 5 சதவீதம் வரை இருக்கும். நிதிப் பற்றாக்குறை 7 சதவீதம் வரை இருக்கும். ஆதலால், 2020-21ஆம் ஆண்டு பட்ஜெட் நேரத்தை வீணடிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. நிதியாண்டு தொடக்கமே பேரழிவுடன் இருந்ததால், முடிவும் அப்படித்தான் இருக்கும்.” என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
இன்னும் லட்சக்கணக்கான குடும்பங்கள் வாழ்வாதாரத்துக்காகப் போராடி வருகின்றன என்று கூறிய அவர், “சமூகத்தில் பொருளாதாரச் சமமின்மையும் இடைவெளியும் அதிகரித்துவிட்டது. ஏற்கனவே வறுமையில் இருந்த மக்கள் மேலும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.” என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கவலை தெரிவித்துள்ளார்.
Source : PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.