Aran Sei

” பெட்ரோல் விலை மாநிலங்களுடன் முடிவு, சோசலிசம் இறக்குமதி சித்தாந்தம் ” – நிர்மலா சீதாராமன்

Image Credit : thehindu.com

2021-22ம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கை தொடர்பான பல கேள்விகளுக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஹிந்து பிசினஸ் லைனுக்கு அளித்த பேட்டியில் பதிலளித்துள்ளார்.

சேமநலநிதி (பிஎஃப்) சேமிப்புகள் மீதான வரி விதிப்பு பற்றியும், நிதிநிலை அறிக்கையின் நம்பகத்தன்மை பற்றியும், வங்கித் துறையில் மாற்றங்கள் பற்றியும், பெட்ரோல், டீசல் மீதான வரி விதிப்பு குறித்தும், சோசலிசம் பற்றியும் அவர் கூறியுள்ள கருத்துக்களை தி ஹிந்து சுருக்கமாக வெளியிட்டுள்ளது.

1. சேமநல நிதி சேமிப்பு மீதான வரிவிதிப்பு

உயர் வருவாய் பெறுபவர்கள் சேமநல நிதியில் சேமிப்பதை தடுக்கும் எண்ணம் இல்லை என்றும், ஆண்டுக்கு ரூ 2.5 லட்சத்துக்கு வரை சேமிக்கப்படும் தொகைக்கு மட்டுமே வரி விலக்கு என்ற நிதிநிலை அறிக்கையின் வரம்பை மறுபரிசீலனை செய்யத் தயாராக இருப்பதாகவும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

ஆண்டுக்கு ரூ 2.5 லட்சத்துக்கு அதிகமாக சேமிக்கும் பணத்துக்கு வரி விதிக்கப்படும் என்று நிதிநிலை அறிக்கை முன்மொழிந்துள்ளது.

மத்திய பட்ஜெட் – பிஎஃப் வசதியை பயன்படுத்தி வரி தவிர்க்கும் பணக்காரர்கள்

சேமநல நிதியத்தையும், தேசிய ஓய்வூதியத் திட்டத்தையும் இணைக்கும் திட்டம் இல்லை என்று அவர்  தெரிவித்துள்ளார்.

2. நிதிநிலை அறிக்கையின் நம்பகத்தன்மை

நிதிநிலை அறிக்கை முன் வைத்துள்ள எண்கள் யதார்த்தமானவை என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். “ஒவ்வொரு எண்ணும் சாதிக்க முடியுமா என்று பலமுறை சரிபார்க்கப்பட்டவை” என்றும், “என்ன சாதிக்க முடியும் என்று பலமுறை கடும் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்ட நிதிநிலை அறிக்கை இது” என்றும் அவர் கூறியுள்ளார்.

நிதிநிலை அறிக்கை முன் வைத்துள்ள மத்திய அரசின் வருவாய் தொடர்பான, செலவினங்கள் தொடர்பான, நிதிப் பற்றாக்குறை பற்றிய எண்கள் நம்பகத்தன்மை அற்றவை என்று முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் நாடாளுமன்ற மேலவையில் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

“பணக்காரர்களால், பணக்காரர்களுக்காக, பணக்காரர்களே உருவாக்கிய பட்ஜெட்” – ப.சிதம்பரம் கடும் தாக்கு

3. வங்கிகளை தனியாருக்கு விற்பது

எந்தெந்த பொதுத்துறை வங்கிகளை தனியாருக்கு விற்பது என்று இன்னும் முடிவெடுக்கப்படவில்லை என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். லாபம் ஈட்டும் வங்கிகளையா, சிறிய வங்கிகளையா, பெரிய வங்கிகளையா என்று முடிவெடுக்கப்பட வேண்டும்.

’எல்ஐசி உள்ளிட்ட அரசு நிதி நிறுவனங்களின் பங்குகளை ரூ.1.75 லட்சம் கோடிக்கு விற்க இலக்கு’ – நிர்மலா சீதாராமன்

4. வளர்ச்சி நிதி நிறுவனங்கள்

நீண்டகால திட்டங்களுக்கு நிதி வழங்குவதற்கான நிறுவனங்களை அமைப்பது பற்றி கூறும் போது, “வங்கிகள் வணிக நோக்கங்களுக்கான கடன் கொடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும். குறுகிய கால வைப்புகளை பெற்று நீண்ட கால திட்டங்களுக்கு கடன் கொடுத்து திணறக் கூடாது.” என்று கூறியுள்ளா, “வளர்ச்சி நிதி நிறுவனங்களின்” கடன் தொகுப்புக்கும், வங்கிகளின் கடன் தொகுப்புக்கும் குறிப்பிடத்தக்க வேறுபாடு இருக்க வேண்டும் என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

5. பெட்ரோல், டீசல் மீது வரிகள்

பெட்ரோல், டீசல் விலைகள் கடுமையாக உயர்ந்த போதும் மத்திய அரசு கலால் வரியை குறைக்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்கு, மத்திய அரசும் மாநில அரசுகளும் சேர்ந்து முடிவெடுக்க வேண்டும் என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

“பெட்ரோல், டீசல் மீதான வரி விதிப்பு – பொருளாதார திறமையின்மையை மறைக்க நடத்தப்படும் கொள்ளை ” – சோனியா காந்தி

“சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் கொண்டு வந்தால், நாடு முழுவதும் ஒரே விலையில் விற்கப்படும். ஜிஎஸ்டி கவுன்சில் இது தொடர்பாக விவாதித்து முடிவெடுக்கலாம். அப்போதும் கூட மத்திய அரசும் மாநிலங்களும் சேர்ந்து முடிவெடுக்க வேண்டியிருக்கும்” என்று அவர் கூறியுள்ளார்.

5. ஜுகாட் சித்தாந்தம்

“இறக்குமதி செய்யப்பட்ட கருத்துக்களில் இருந்து உருவாக்கப்பட்ட ஜுகாட் சித்தாந்தமான சோசலிசத்தை வலியுறுத்துவதில் இந்த நாடு அளவுக்கு அதிகமாக போய் விட்டது” என்றும், “இறக்குமதி செய்யப்பட கருத்துக்களை தொடர்ந்து சேர்ப்பதன் மூலம் அவை ஏதோ ஒரு வழியில் அது நமது நாட்டுக்கு பொருந்தி விடும் என்ற நம்பிக்கையில் செயல்பட்டோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

“சோசியலிசம் என்பது சுமை; பொதுத்துறை நிறுவனங்களை விற்பதே எங்கள் நோக்கம்” – நிர்மலா சீதாராமன்

“நலத் திட்டங்கள் சோசலிசத்துக்கு மட்டும் சொந்தமானவை இல்லை. பொருளாதாரம் நன்கு செயல்படாமல், செல்வம் உருவாக்கப்படாமல் இருக்கும் போது, சமூக நலன் பாதிக்கப்படுகிறது, மக்கள்நல அரசும் பாதிக்கப்படுகிறது.” என்று கூறிய அவர்

“சட்டபூர்வமாக பணம் சம்பாதிப்பது தவறில்லை என்பதை நாங்கள் வலியுறுத்த முயற்சிக்கிறோம். ஒடுக்கும் தன்மை இல்லாத, பகைமைத்தன்மை இல்லாத ஒரு வரி விதிப்பு முறை, மக்கள்நல அரசுக்கு தேவையான வருவாயை தரும்” என்று கூறியுள்ளார்.

” பெட்ரோல் விலை மாநிலங்களுடன் முடிவு, சோசலிசம் இறக்குமதி சித்தாந்தம் ” – நிர்மலா சீதாராமன்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்