தொலைதொடர்பு துறையில் ஜியோவை முன்னணி நிறுவனமாக வெற்றிகரமாக நிலைநாட்டிய ரிலையன்ஸ், இ-காமர்ஸ் (இணைய வர்த்தகம்) துறையில் ஜியோ மார்ட் மூலமாக கால் பதித்துள்ளது.
சில்லறை விற்பனை வணிகத்தில் முதன்மை நிறுவனமாக வளரும் முயற்சியின் பகுதியாக
- பொம்மை தயாரிப்பில் பெரிய நிறுவனமான லண்டனை சேர்ந்த ஹேம்லி (hamley) நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளை £6.79 கோடிக்கு (சுமார் ரூ 679 கோடி) வாங்கியது.
- மருந்து விற்பனை செய்யும் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான நெட்மெட்ஸ் நிறுவனத்தை ரூ 620 கோடி ரூபாய்க்கு வாங்கியது.
- மேலும் லாஜிஸ்டிக்ஸ் (சரக்கு வினியோகம், போக்குவரத்து) துறையைச் சேர்ந்த grab a grub, தகவல் தொழில் நுட்ப நிறுவனமான C-Square, ஃபேஷன் துறையைச் சேர்ந்த Fynd போன்ற பல்வேறு நிறுவனங்களை வாங்கியது.
இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் ஃபியூச்சர் குரூப் நிறுவனத்தின் 30 சதவீத பங்குகளை ரூ 24,713-க்கு வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்தது.
ஃபியூச்சர் குரூப் நிறுவனம் பிக் பஜார், ஹெரிடேஜ், ஃபியூச்சர் ரீடைல் என்று பல பெயர்களில் சில்லறை வணிகக் கடைகளை இந்தியாவில் நடத்தி வருகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து பெருநகரங்களிலும் கிளை பரப்பி வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்றுள்ளது.
இந்தியாவின் இ-காமர்ஸ் (இணைய வர்த்தகம்) துறையின் மதிப்பானது 2020-ம் ஆண்டு கணக்கீட்டின்படி ரூ 3,000 கோடியாக இருக்கிறது. இது 2024-ம் ஆண்டு ரூ 1 லட்சம் கோடியாக வளரும் என்று பயோனீர் ரிப்போர்ட்டின் (Payoneer Report) தரவுகள் தெரிவிக்கின்றன. இது ஆண்டிற்கு ஏறக்குறைய 27 சதவீதம் வளர்ச்சி அடையும் துறையாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இணைய வர்த்தகத் துறையில் ஏற்கனவே அமெரிக்க பெருநிறுவனமான அமேசானும் வால்மார்ட்டும் (ஃபிளிப்கார்ட் மூலமாக) முன்னணி நிறுவனங்களாக செயல்படுகின்றன. இந்த நிலையில்தான் ரிலையன்ஸ் நிறுவனம் ஃபியூச்சர் குரூப் நிறுவனத்தினம் பங்குகளை வாங்கும் ஒப்பந்தத்தை போட்டுக் கொண்டுள்ளது
தொலைதொடர்புத் துறையில் முகேஷ் அம்பானி ஜியோ சேவையை தொடங்கிய பிறகு ஏற்கனவே சந்தையில் இருந்த ஐடியா, டாடா, ஏர்செல், பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல், அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், எம்டிஎஸ் போன்ற பல நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்தித்தன. இதில் பெரும்பாலான நிறுவனங்கள் இழுத்து மூடப்படும் சூழ்நிலை ஏற்பட்டது. பெருநிறுவனங்களான டாடா போன்றோர்களே ரிலையன்ஸ் போட்டியை எதிர்க்க முடியாமல் தமது சேவையை நிறுத்தும் நிலை ஏற்பட்டது.
தொலைதொடர்புத் துறையில் ரிலையன்சின் செயல்பாடுகளால் போட்டியாளர்களுக்கு நேர்ந்ததை பார்த்த அமெரிக்க பெருநிறுவனங்கள் ரிலையன்ஸ் சில்லறை வர்த்தகத் துறையில் நுழைவதை கவனத்துடன் கையாளத் தொடங்கின. அதன் ஒரு பகுதியாக அமேசான் நிறுவனம் தனக்கு ஏற்கனவே உள்ள ஃபியூச்சர் குரூப் நிறுவனத்தில் உள்ள பங்கினை துருப்புசீட்டாக பயன்படுத்தி ரிலையன்ஸ் ஃபியூச்சர் குழுமத்தை வாங்கும் ஒப்பந்தத்தை எதிர்க்கத் தொடங்கியது.
ஃபியூச்சர் குழுமத்துடனான ரிலையன்சின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று
- அமேசான் சிங்கப்பூரில் உள்ள சர்வதேச நடுநிலை குழுவிடம் (Singapore International Arbitration Committee – சுருக்கமாக SIAC) முறையீடு செய்தது.
- மேலும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது.
- இந்திய பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி ரிலையன்ஸ் மற்றும் ஃபியூச்சர் குரூப் நிறுவனங்களுக்கு இடையே நடைபெறும் ஒப்பந்தத்திற்கு தடையிலா சான்றிதழ் வழங்கக் கூடாதுஎன்று கடிதம் எழுதியது.
ஆனால், ரிலையன்ஸ்-க்கு இந்திய அரசு வட்டங்களில் அதிக செல்வாக்கு உள்ளது.
பெரிய இ-காமர்ஸ் (இணைய வர்த்தக) நிறுவனங்களின் வருகையால் சிறு வியாபாரிகள் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது. பெரும் நிறுவனங்களின் இ-காமர்ஸ் தளங்கள் வாங்கி விற்கும் சந்தையாக மட்டும் இன்றி அந்நிறுவனங்களே பொருட்களை தமது கிடங்குகளில் சேமித்து விற்பனை செய்து வருவதைத் தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இந்த நிலையில் இதில் மாற்றம் கொண்டு வருவதற்கு மத்திய அரசு முடிவு செய்து இருக்கிறது. அதன்படி இ-காமர்ஸ் துறையில் வெளிநாட்டு நிறுவனங்கள் பொருள் வாங்கி விற்கும் தளமாக மட்டுமே செயல்பட வேண்டும். கிடங்குகள் அமைத்து பொருட்களை சேமிக்க அவற்றுக்கு அனுமதி இல்லை என்று அறிவித்து உள்ளது. இந்த உத்தரவு அமலுக்கு வந்தால் இது அமேசானுக்கும், வால்மார்ட்டுக்கு சொந்தமான பிளிப்கார்ட்டுக்கும் பாதகமாக முடியும்.
ஆனால், ரிலையன்ஸ் இந்திய நிறுவனம் என்பதால் பொருட்களை கிடங்குகளில் சேமிப்பதில் எந்த பிரச்னையும் இல்லை. எனவே, இந்திய அரசின் இந்த முடிவு ரிலையன்சுக்கு சாதகமாக இருக்கும்.
இந்த நிலையில் பங்குச் சந்தை அமைப்பான செபி அமேசானின் கடிதத்தை ஏற்றுக் கொள்ளாமல் ரிலையன்ஸ் – ஃபியூச்சர் குழுமம் இடையேயான ஒப்பந்தம் நிறைவேறுவதற்கான தடை இல்லா சான்றினை வழங்கியுள்ளது. இதன் மூலம் ரிலையன்ஸ் நிறுவனம் ஃபியூச்சர் குரூப் நிறுவனத்தினை வாங்குவதற்கு வாய்ப்பு அதிகரித்துள்ளது.
அமேசான், வால்மார்ட் போன்ற வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் பல நாடுகளில் கிளை பரப்பி அந்தந்த நாடுகளில் உள்ள நிறுவனங்களை வீழ்த்தி வெற்றி கொண்ட வரலாற்றை கொண்டுள்ளன.
இந்தியாவின் கார்ப்பரேட் நிறுவனமான ரிலையன்ஸ் இந்தியச் சந்தையில் தொட்டதெல்லாம் துலங்கும் நிறுவனமாக இருக்கிறது. ஜியோ நிறுவனத்தை தொடங்கிய போது பிரதமர் மோடியை விளம்பரத்தில் காட்டி மார்க்கெட் செய்யும் அளவிற்கு கோலோச்சும் நிறுவனமாக இருக்கிறது. இந்தியாவின் ‘ஆத்மநிர்பார் பாரத்’ திட்டமும் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சாதகமாக இருக்கிறது.
அதனால் போட்டி இப்போது கடுமையாக இருக்கிறது. இதில் ரிலையன்ஸ் ஜெயிக்க போகிறதா அல்லது அமேசானா என்பது சிங்கப்பூரில் நடைபெறும் வழக்கின் இறுதித் தீர்ப்பு வந்த பிறகு தெரியும்.
(கட்டுரையாளர் ஷியாம் சுந்தர் தகவல் தொழில்நுட்பத் துறையில் 20 ஆண்டுகளுக்கு மேல் பணி புரிபவர்)
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.