Aran Sei

இந்தியப் பொருளாதாரம் – பண்ட ஏற்றுமதி இறக்குமதி, ஐடி வேலை வாய்ப்பு, வங்கிக் கடன், திறன்பேசி விற்பனை

Image Credit : thehindu.com

கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கான முழு அடைப்பைத் தொடர்ந்து இந்திய பொருளாதாரத்தின் செயல்பாடுகள் பற்றிய சில முக்கியமான தரவுகள் வெளியாகியுள்ளன.

பண்ட ஏற்றுமதி – இறக்குமதி

ஜனவரி 2021-ல் இந்தியாவின் ஏற்றுமதிகள், முந்தைய ஆண்டின் அதே மாதத்தை விட 6.2% அதிகரித்திருந்தன. அதே நேரம், இறக்குமதிகள் 2% அதிகரித்துள்ளன என்று தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட துரித மதிப்பீடுகள் தெரிவித்துள்ளனர. கச்சா எண்ணெய், தங்கம் தவிர்த்த இறக்குமதிகள் 7.5% அதிகரித்துள்ளன.

டிசம்பர் 2020-ல் ஏற்றுமதி முந்தைய ஆண்டின் டிசம்பரை விட 0.14% அதிகரித்திருந்தது.

ஜனவரி மாதத்தின் வர்த்தகப் பற்றாக்குறை $1445 கோடி (சுமார் ரூ 1.06 லட்சம் கோடி) ஆக உள்ளது. இது ஜனவரி 2020-ன் வர்த்தகப் பற்றாக்குறையை ($1530 கோடி) விட 5% குறைவாகும்.

இந்த ஆண்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதி, முதல் 10 மாதங்களில் 10% சுருங்கியுள்ளது, இறக்குமதி 22.8% குறைந்துள்ளது.

பல பண்ட வகைகளின் ஏற்றுமதி ஜனவரி மாதம் அதிகரித்திருந்தாலும், பிரதானமான பண்டங்களான பெட்ரோலிய பொருட்கள், தோல், துணி, நகைகள் ஆகியவற்றின் ஏற்றுமதி குறைந்திருப்பது கவலைக்குரியது என்று இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பின் தலைவர் சரத் சராஃப் கூறியுள்ளார்.

“இந்தப் பொருட்கள் இந்தியாவின் ஏற்றுமதி தொகுப்பில் முக்கியமான பகுதியை வகிக்கின்றன. அவை அதிக அளவு தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்கும் துறைகள்” என்று அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

சேவைத் துறை

சேவைத்துறை ஏற்றுமதியும் கவலையளிப்பதாக உள்ளது. டிசம்பர் 2020-ல் சேவைத் துறை ஏற்றுமதி 6.41% குறைந்திருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் வருவாய், 2020-21 நிதியாண்டில் 2.3% அதிகரித்து, $19,400 கோடி (சுமார் ரூ 14.55 லட்சம் கோடி) ஆக இருக்கும் என்று இந்திய ஐடி நிறுவனங்களின் சங்கமான நாஸ்காம் தெரிவித்துள்ளது. இந்த நிதியாண்டில் மென்பொருள் ஏற்றுமதி $15,000 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அது கூறியுள்ளது.

இந்த ஆண்டில், ஐடி துறையில் 1.38 வேலை வாய்ப்புகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன என்றும் இத்தோடு ஐடி துறையில் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை 44.7 லட்சம் ஆக உயர்ந்திருப்பதாகவும் நாஸ்காம் நடத்திய கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது.

“புதிதாக எடுக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் டிஜிட்டல் திறன்கள், ஆழமான தொழில்நுட்பங்களில் (deep technologies) நிபுணத்துவம் உடையவர்கள். வழக்கமான தகவல் தொழில்நுட்ப வேலைகளில் இல்லை” என்று நாஸ்காம் தலைவர் தேப்ஜனி கோஷ் தெரிவித்துள்ளார்.

வங்கிக் கடன்

ஜனவரி 29-ம் தேதியுடன் முடிவடைந்த 15 நாட்களில் வங்கிக் கடன்கள் 5.93% அதிகரித்து ரூ 107.05 லட்சம் கோடியை எட்டின, வங்கி வைப்புகள் 11.06% அதிகரித்து ரூ 147.98 லட்சம் கோடியை எட்டியுள்ளன என்று ரிசர்வ் வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன.

சென்ற ஆண்டு ஜனவரி 31 வரையிலான 15 நாட்களின் இறுதியில் வங்கிக் கடன் ரூ 101.05 லட்சம் கோடியாகவும், வைப்புகள் ரூ 133.24 லட்சம் கோடியாகவும் இருந்தன.

இந்த நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் வங்கிக் கடன் 3.2% அதிகரித்தன, வங்கி வைப்புகள் 8.5% அதிகரித்துள்ளன.

திறன்பேசி சந்தை

2020-ம் ஆண்டில் இந்திய திறன்பேசி சந்தை 1.7% வீழ்ச்சியடைந்துள்ளது என்று சர்வதேச தரவுகள் நிறுவனம் (IDC) தெரிவித்துள்ளது.

இந்திய சந்தையில் 15 கோடி திறன்பேசிகள் விற்கப்பட்டன. இந்த எண்ணிக்கை சென்ற ஆண்டை விட 1.7% குறைவாகும்.

வீட்டிலேயே இருக்க வேண்டும் என்ற ஆணைகள், தொலைபணி, தொலைகல்வி, பயண கட்டுப்பாடுகள், உற்பத்தி நிறுத்தம் ஆகியவற்றின் காரணமாக ஆண்டின் முதல் பாதியில் விற்பனை 26% குறைந்தது என்று ஐடிசி கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.

2021-ல் விற்பனை வேகமாக அதிகரிக்கும் என்று ஐடிசி தெரிவித்துள்ளது.

Source : thehindu.com

இந்தியப் பொருளாதாரம் – பண்ட ஏற்றுமதி இறக்குமதி, ஐடி வேலை வாய்ப்பு, வங்கிக் கடன், திறன்பேசி விற்பனை

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்