2020-21 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சிக்கான கணிப்புகளை பல்வேறு நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி தெரிவிக்கிறது.
ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களைக் கொண்ட இரண்டாவது காலாண்டில் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி 7.5% சுருங்கியுள்ளது. அதாவது 2019-ல் இதே காலகட்டத்தில் இருந்ததை விட இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 7.5% குறைவான பொருட்களும் சேவைகளும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
இரண்டாவது காலாண்டில் இந்திய ஜிடிபி எதிர்பார்த்த அளவுக்கு சுருங்கவில்லை என்பதால், பெரும்பாலான பொருளாதார நிபுணர்கள் மொத்த ஆண்டில் இந்திய பொருளாதாரம் 6% முதல் 8% வரை மட்டுமே சுருங்கும் என்று எதிர்பார்க்கின்றனர். சென்ற மாதம் வரையில் சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்), இந்தியப் பொருளாதாரம் 2020-21-ல் 10% சுருங்கும் என்று கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜப்பானிய பொருளாதார முன்கணிக்கும் நிறுவனமான நொமோரா, இந்தியாவின் ஜிடிபிக்கான தனது கணிப்பை 10.8% சுருக்கம் என்பதிலிருந்து 8.2% மட்டுமே சுருக்கம் என்று மேம்படுத்தியுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
ஏப்ரல், மே, ஜூன் மாதங்களைக் கொண்ட முதல் காலாண்டில் ஜிடிபி 23.9% சுருங்கியது குறிப்பிடத்தக்கது. அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களைக் கொண்ட மூன்றாவது காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 5.6% சுருங்கும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.
ஆனால், தொடர்ந்து இரண்டு காலாண்டுகளில் பொருளாதாரம் சுருங்குவது இந்தியப் பொருளாதாரத்தில் வரலாறு காணாத சுணக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தி ஹிந்து தனது தலையங்கத்தில் எழுதியுள்ளது.
இந்தக் காலாண்டில் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியானது ரூ 33.13 லட்சம் கோடி என்ற அளவில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலைக்கு வீழ்ந்துள்ளது என்பதை தி ஹிந்து சுட்டிக் காட்டுகிறது.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50%-க்கும் மேல் பங்களிக்கும் தனியார் நுகர்வு செலவினம் 11.3% சுருங்கியுள்ளதை குறிப்பிட்டுள்ள தி ஹிந்து, கொரோனா நோய்த்தொற்றுக்கு மத்தியில், வேலை இழப்புகளும் வருவாய் குறைப்பும் நிகழ்ந்து வரும் நிலையில் செலவழிப்பதில் தயக்கம் நீடிப்பதை இது காட்டுவதாகக் கூறுகிறது.
முதல் காலாண்டில் 16% அதிகரித்த அரசின் செலவினங்கள், இரண்டாவது காலாண்டில் 22% சுருங்கியுள்ளன. இது பொது நிதிநிலையின் நெருக்கடியான நிலையை காட்டுகிறது. ஒட்டு மொத்தமாகப் பார்க்கும் போது வேண்டல் மீட்சியடையவில்லை. அதாவது, தனிநபர்களும், நிறுவனங்களும், அரசும் பொருட்களையும், சேவைகளையும் வாங்குவது இன்னும் சுருக்கத்திலேயே உள்ளது.
மொத்த நிலை மூலதன உருவாக்கம், ஏற்றுமதிகள், இறக்குமதிகள் ஆகியவற்றில் சுருக்கம் குறைந்திருந்தாலும், ஒட்டு மொத்த ஜிடிபியில் குறைபாட்டை குறைத்து காட்டும் வகையில் ரூ 56,962 கோடி ‘பிழைகள்’ என்று காட்டப்பட்டிருப்பது விசித்திரமாக உள்ளது என்று தி ஹிந்து கூறுகிறது.
உற்பத்தித் துறையில் மொத்த மதிப்புக் கூடுதலுக்கும், தொழில்துறை உற்பத்திக்கான குறியீட்டுக்கும் இடையேயான வேறுபாடு அதிகரித்திருப்பதும் ஆச்சரியகரமானது என்கிறது தி ஹிந்து.
தொழில்துறை உற்பத்திக்கான குறியீடானது, ஜூலை-செப்டம்பர் காலாண்டில் 6.7 சதவீதம் சுருங்கியிருக்கும் நிலையில், மொத்த மதிப்புக் கூடுதல் தொடர்பான தேசிய புள்ளிவிபர அலுவலகத்தின் தரவுகளின்படி உற்பத்தித் துறை ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 39% வீழ்ச்சியடைந்த பிறகு, ஜூலை – செப்டம்பர் காலாண்டில் 0.6% வளர்ச்சியைக் கண்டுள்ளது. இதற்கான விளக்கம், சென்ற ஆண்டில் உற்பத்தித் துறை மொத்த மதிப்பு சேர்ப்பு சுருங்கியதால் ஏற்பட்டிருந்த குறைந்த மட்டத்தாலும், முழு அடைப்புக்குப் பின்பு சரக்குக் கையிருப்புகளை அதிகரிப்பதாலும் இந்த புள்ளிவிபர வேறுபாடு நிகழ்ந்திருக்கலாம் என்று தி ஹிந்து தெரிவிக்கிறது.
மொத்த மதிப்புச் சேர்ப்பில் நான்கில் ஒரு பகுதியாக இருக்கும் நிதித்துறை, ரியல் எஸ்டேட், மற்றும் தொழில்முறை சேவைகள் முதல் காலாண்டை விட அதிகமாக 8.3% சுருங்கியுள்ளன என்கிறது தி ஹிந்து. பண்டிகை கால வேண்டலின் காரணமாக அக்டோபர் மாதம் வீட்டுக் கடன்களுக்கும், தனிநபர் கடன்களுக்கும் வேண்டல் அதிகரித்தாலும், வங்கிகளின் கடன் நிலுவை மார்ச் 2020 மட்டத்துக்குக் கீழாகவே உள்ளது என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவிக்கிறது.
நீடித்த ஒரு பொருளாதார முடக்கத்தைத் தவிர்க்க வேண்டுமானால், பொருளாதாரத்தின் வேண்டலை பெருமளவு தூண்டுவதற்கான நடவடிக்கை அவசரமாக தேவைப்படுகிறது என்று தி ஹிந்து கூறியுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.