2021 ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.5 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.
கொரோனா பெருந்தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு தளர்த்தப்பட்டு பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டிருக்ககிறது. இந்நிலையில் கடந்த ஆண்டை விட உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) இரண்டாவது (ஜுலை முதல் செப்டம்பர்) காலாண்டில் 7.5 சதவீதம் குறைந்துள்ளதாக தேசிய புள்ளிவிவரங்கள் அலுவலகம் தெரிவித்துள்ளது.
எனினும் 2021-ம் நிதியாண்டுக்கான, முதல் காலாண்டில் (ஏப்ரல் முதல் ஜூன்) ஏற்பட்ட 23.9 சதவீத வீழ்ச்சியை ஒப்பிடும்போது இது குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும். பல ஆய்வாளர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள், வரும் காலங்களில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கணிக்கப்பட்டதை விட அதிகமாக உயரும் என கூறியுள்ளதாக தி வயர் இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
கடந்த காலாண்டில் 22.8 சதவீதம் வீழ்ச்சி அடைந்த மொத்த மதிப்பு கூட்டல் (ஜிவிஏ) இந்த காலாண்டில் 7 சதவீதம் தான் வீழ்ச்சி அடைந்துள்ளது.
கடந்த வாரம் வெளியிடப்பட்ட மற்றொரு அரசாங்க தரவு, இந்திய பொருளாதாரத்தின் எட்டு முக்கிய உள்கட்டமைப்புத் துறைகள் கடந்த ஆண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடும்போது 2.5 சதவீத வீழ்ச்சியைக் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்தியா தற்போது ஒரு பொருளாதார மந்தநிலைக்குள் நுழைந்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியும் குறைந்துள்ள இந்த தருணம்தான் கொரோனா பெருந்தொற்று பொருளாதாரத்தில் ஏற்படுத்திய மிகப் பெரிய தாக்கத்தை உணரும் தருணமாக அமையும் என தி வயர் கூறியுள்ளது.
“இந்தியப் பொருளாதாரம் மீள்வதற்கு நீண்ட காலம் பிடிக்கும் ” – ஆக்ஸ்ஃபோர்ட் எகனாமிக்ஸ்
தனியார் நுகர்வுகள் மற்றும் முதலீடுகளை வைத்து பார்க்கும்போது இரண்டாம் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக அரசாங்க தரவுகள் கூறுகின்றன.
தேசிய புள்ளிவிவரங்கள் அலுவலகம் வெளியிட்டுள்ள துறை ரீதியான தரவுகள் உற்பத்தி, மின்சாரம் மற்றும் பொது பயன்பாடுகள் முதல் காலாண்டில் ஏற்பட்ட வீழ்ச்சியிலிருந்து மீண்டுள்ளதாக கூறியுள்ளது.
முதலாம் காலாண்டில் 39.3 சதவீதம் வீழ்ச்சியடைந்த உற்பத்தித்துறை இரண்டாவது காலாண்டில் 0.6 சதவீதம் வளர்ச்சியடைந்ததுள்ளது எனவும், முதல் காலாண்டில் 7 சதவீதம் வீழ்ச்சியடைந்த மின்சாரம் மற்றும் பொது பயன்பாடுகள் துறை இரண்டாவது காலாண்டில் 4.4 சதவீதம் வளர்ந்துள்ளது என துறை ரீதியான விவரங்களை தேசிய புள்ளிவிவரங்கள் அலுவலகம் அறிவித்துள்ளது.
`இந்தியப் பொருளாதாரம் வலுவான மீட்சியைக் கண்டுள்ளது’ – நிர்மலா சீதாராமன்
கொரோனா பெருந்தொற்று காரணமாக பெரிதும் பாதிப்படையாத விவசாயத்துறை இரண்டாவது காலாண்டில் 3.4 சதவீதம் உயர்ந்துள்ளது எனவும் ”பொருளாதார வீழ்ச்சியடைந்ததற்கு முக்கியமான காரணம் கொரோனா பெருந்தொற்று” என மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.