Aran Sei

ஹரியானா – தனியார் நிறுவனங்களில் உள்ளூர் மக்களுக்கு 75% இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் தொழிலதிபர்கள்

Image credit : ndtv.com

ரியானா மாநிலத்தில் தனியார் துறை வேலை வாய்ப்புகளில் 75% உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க வேண்டும் என்ற சட்டம் “பேரழிவாக இருக்கும்” என்று இந்திய முதலாளிகளின் கூட்டமைப்புகள் கூறியுள்ளதாக தி ஹிந்து செய்தி தெரிவிக்கிறது.

மாதம் ரூ 50,000-க்குக் குறைவான சம்பளத்திலான வேலைகளில் 75%-ஐ ஹரியானாவைச் சேர்ந்தவர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்ற சட்டம் மாநிலத்தின் தொழில் வளர்ச்சியையும், தனியார் முதலீட்டையும் பாதிக்கும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

ஆனால், பொருத்தமான உள்ளூர் நபர் கிடைக்கா விட்டால் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களை வேலைக்கு எடுக்க இந்த மசோதா அனுமதிக்கிறது. ஆனால், அது தொடர்பாக மாநில அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என என்டிடிவி தெரிவிக்கிறது.

ரூ 50,000 வரை சம்பளம் பெறும் ஊழியர்கள் பற்றிய விபரங்களை நிறுவனங்கள் பராமரிக்க வேண்டும் என்றும், இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்த 3 மாதங்களுக்குள் அவ்வாறு செய்யத் தவறினால் அபராதங்கள் விதிக்கப்படும் என்று அரசு கூறியுள்ளது.

இந்த மசோதா ஹரியானா துணை முதலமைச்சர் துஷ்யந்த் சவுதாலாவின் ஆதரவை பெற்றிருந்தது. இந்த மசோதாவுக்கு ஹரியானா ஆளுநர் இந்த வார தொடக்கத்தில் ஒப்புதல் அளித்திருந்தார். ஆனால், இதற்கு முதலாளிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

“நாட்டில் கிடைக்கக் கூடிய ஆகச் சிறந்த மனித வளத்தை பயன்படுத்திதான் முதலீட்டாளர்களும், தொழில்முனைவர்களும் போட்டியிடும் திறனுடனும் வெற்றிகரமாகவும் செயல்பட முடியும். இது போன்ற நடவடிக்கை மூலம் அவர்களை கட்டுப்படுத்துவது, அவர்கள் ஹரியானாவுக்கு வெளியில் வாய்ப்புகளை தேடுவதற்கு இட்டுச் செல்லும். இது மாநிலத்தின் நலன்களை பாதிக்கும்” என்று இந்திய வணிக மற்றும் தொழில் கூட்டமைப்புகள் (FICCI) என்ற முதலாளிகளின் அமைப்பின் தலைவர் உதய் சங்கர் கூறியுள்ளார்.

“உள்ளூரில் போதுமான அளவு திறன் உடைய மனிதவளம் கிடைக்காததால்தான் மாநிலத்துக்கு வெளியில் இருந்து ஆட்களை வேலைக்கு அமர்த்துகிறோம். விண்ணப்பித்தவர்களின் வாழுமிட அடிப்படையில் இல்லாமல், தரம் திறமை ஆகியவற்றின் அடிப்படையில்தான் வேலைக்கு எடுக்கிறோம்” என்று வாகனத்துறை பாகங்கள் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் தீபக் ஜெயின் கூறியுள்ளார்.

ரூ 40,000 கோடி முதலீடு செய்துள்ள வாகனத் துறை, ஹரியானாவின் மொத்த உற்பத்தியில் 25% பங்களிப்பு செய்வதோடு, 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாக தீபக் ஜெயின் சுட்டிக் காட்டியுள்ளார்.

இந்த நடவடிக்கை முதலீட்டுக்கு ஆதரவானது என்ற மாநிலத்தின் மீதான மதிப்பீட்டை பாதிக்கும் என்றும், ஐடி மற்றும் பிபிஓ துறையில் வளர்ந்து வரும் குருகிராமை இது பின்னடையச் செய்யும் என்றும் மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் தேசிய கூட்டமைப்பான நாஸ்காம் கூறியுள்ளது.

இது தொடர்பான தனது கவலையை மாநில அரசிடம் ஏற்கனவே தெரிவித்திருப்பதாக நாஸ்காம் கூறியுள்ளது.

இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (CII) மாநில அரசிடம் கொடுத்துள்ள அறிக்கையில், ஆய்வுகளுக்கும் விவாதங்களுக்கும் பிறகு ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை முடிவு செய்து, உள்ளூர் மக்களுக்கு வேலை வழங்கும் நிறுவனங்களுக்கு ஊக்கத் தொகைகளை வழங்கலாம் என்று கூறியுள்ளது.

இப்போது இயங்கும் நிறுவனங்களை உள்ளூர் மக்களை வேலைக்கு அமர்த்தும்படி கட்டாயப்படுத்த முடியாது என்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த ஒரு பயிற்சி பெற்ற ஊழியரை அந்நிறுவனங்கள் வேலையை விட்டு நீக்க முடியாது என்றும் அது கூறியுள்ளது.

“புதிதாகத் தொடங்கப்படும் நிறுவனங்கள் மூலம் இந்த நோக்கத்தை நிறைவேற்றலாம். இட ஒதுக்கீடு வழங்குவதற்கு பதிலாக கவர்ச்சியான ஊக்கத்தொகைகளை வழங்கலாம்” என்றும் அது கோரிக்கை வைத்துள்ளது.

“எந்த ஒரு தொழில் அல்லது வணிகத்தை செய்யும் அடிப்படை உரிமையை இந்தச் சட்டம் பறிக்கிறது. கொரோனா முழு அடைப்புக்குப் பிறகு தொழில்துறை நடவடிக்கைகள் மறுபடியும் உயிர்பெற்று வரும் நிலையில் இதைக் கொண்டு வருவது மாநிலத்தில் இருந்து முதலீட்டாளர்கள் வெளியேறுவதற்கு வழி வகுக்கும்” என்று ஜே சாகர் அசோசியேட்ஸ் என்ற வழக்கறிஞர் நிறுவனத்தின் பங்காளர் அனுபம் வர்மா கூறியுள்ளார்.

தொடக்க நிலை முதலீடுகளுக்கான மேடை ஒன்றை இயக்கும் நீரஜ் தியாகி, “குருகிராம் வட இந்தியாவின் ‘சிலிக்கன் பள்ளத்தாக்கு’ ஆக படிப்படியாக வளர்ந்து வந்தது. புதிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 75% வேலைகளில் மாநிலத்தைச் சேர்ந்தவர்களையே எடுக்க வேண்டுமானால், இது அவர்களுக்கு ஒரு சவாலாகத்தான் இருக்கும். தொழில்நுட்ப திறனைச் சார்ந்து இயங்கும் நிறுவனங்கள் இந்த பிராந்தியத்திலிருந்து மாறிச் செல்வதைத் தவிர வேறு வழி இல்லை” என்று கூறியுள்ளார்.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பலவற்றின் மையமான அமெரிக்காவின் சான்ஃபிரான்சிஸ்கோ பகுதி சிலிக்கன் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படுகிறது, இந்தியாவின் பெங்களூரு “இந்தியாவின் சிலிக்கன் பள்ளத்தாக்கு” என்று அழைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹரியானா – தனியார் நிறுவனங்களில் உள்ளூர் மக்களுக்கு 75% இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் தொழிலதிபர்கள்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்