Aran Sei

அக்டோபர் ஜிஎஸ்டி வரி வசூல் ரூ 1 லட்சம் கோடியை தாண்டியது – அதிகரிப்பு நீடிக்குமா?

Image Credit - hindustantimes.com

க்டோபர் மாதத்துக்கான ஜிஎஸ்டி வரி வசூல் ரூ 1 லட்சம் கோடியை தாண்டியுள்ளதாக bloombergquint தளம் செய்தி வெளியிட்டுள்ளது. கொரோனா பொது முடக்கம் நீக்கப்பட்ட பிறகு, பண்டிகைக் கால வேண்டல் அதிகரிப்பின் காரணமாக இரண்டாவது மாதமாக ஜிஎஸ்டி வரி வசூல் 1 லட்சம் கோடியை தாண்டியுள்ளதாக அது தெரிவிக்கிறது.

நவம்பர் மாதம் செலுத்தப்பட்ட, அக்டோபர் மாதத்துக்கான வரி வசூல் ரூ 1.05 லட்சம் கோடியாக இருந்தது. இது முந்தைய மாதத்தை விட ரூ 192 கோடி குறைவாகும், சென்ற ஆண்டின் இதே மாத வரி வசூலை விட 1.4% அதிகம்.

இதில் உள்நாட்டு பரிவர்த்தனைகளிலிருந்து கிடைத்த வரி வருவாய் கடந்த ஆண்டை விட 0.5% அதிகரித்துள்ளது, இறக்குமதிகளில் இருந்து வசூலிக்கப்பட்ட வரி வருவாய் 4.9% அதிகரித்துள்ளது” என்று நிதி அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இழப்பீடு குளறுபடியில் ஜிஎஸ்டி கவுன்சில் – கூட்டாட்சி தத்துவத்துக்கு பின்னடைவு

2020-21 நிதியாண்டின் முதல் 8 மாதங்களில் ரூ 6.64 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி வசூலாகியுள்ளது. இது 2019-20 ஆண்டில் வசூலான ரூ 8.05 லட்சம் கோடியை விட 17.4% குறைவாகும்.

“நவம்பர் மாதம் நடைபெற்ற விற்பனைகளுக்கான வரி வசூல் டிசம்பர் மாதம் நடைபெறும். அது தொடர்பான புள்ளிவிபரங்கள் கிடைக்கும் போதுதான், வேண்டல் நீடித்து தொடரக் கூடியதா என்பது தெரிய வரும்” என்று ICRA நிறுவனத்தின் துணைத் தலைவர் அதிதி நாயர் கூறியுள்ளார்.

அக்டோபர் மாதத்துக்கான வசூலில்

  • மத்திய ஜிஎஸ்டி ரூ 19,189 கோடி
  • மாநில ஜிஎஸ்டி ரூ 25,540 கோடி,
  • ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ 51,992 கோடி (சரக்குகள் இறக்குமதியில் வசூலிக்கப்பட்ட ரூ 22,078 கோடியையும் சேர்த்து)
  • இழப்பீட்டுக்கான கூடுதல் வரி ரூ 8,242 கோடி (சரக்குகள் இறக்குமதியில் வசூலிக்கப்பட்ட ரூ 809 கோடியையும் சேர்த்து)

ஆகியவை அடங்கும்.

ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி அந்தந்த மாநிலங்களின் நுகர்வைப் பொறுத்து ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையே பகிர்ந்து கொள்ளப்படும். இந்த பகிர்வுக்குப் பிறகு ஒன்றிய ஜிஎஸ்டி ரூ 41,882 கோடி ஆகவும், மாநில ஜிஎஸ்டி ரூ 41,286 கோடி ஆகவும் உள்ளன.

ரூ 8,242 கோடி கூடுதல் வரி வசூலானது, ஜிஎஸ்டியை அமலாக்குவதால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடு கட்டுவதற்கு தரப்படும். இந்தத் தொகை அக்டோபர் மாதம் ரூ 8,011 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

“முந்தைய மாதத்துடன் ஒப்பிடும் போது ஜிஎஸ்டி இ-வே பில்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருப்பது, பண்டிகை நாட்நகளின் காரணமாக வேலை நாட்களின் எண்ணிக்கை குறைந்ததன் காரணமாக நடந்திருக்கலாம். இருப்பினும் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் ஜிஎஸ்டி இ-வே பில்களின் சராசரி அதிகரிப்பு செப்டம்பர் மாதத்தை கடந்து விட்டது ஊக்கமளிப்பதாக உள்ளது” என்று அதிதி நாயர் தெரிவித்திருக்கிறார்.

ஜிஎஸ்டி வசூல் அதிகரிப்பு: எப்படி புரிந்து கொள்ளலாம்?

பெரிய மாநிலங்களில் ஆந்திர பிரதேசம் (12%), குஜராத், ஜார்க்கண்ட் (11%), தமிழ்நாடு (10%) ஆகியவை மட்டுமே இரண்டு இலக்க வளர்ச்சியை எட்டியுள்ளன என்று தி ஹிந்து செய்தி தெரிவிக்கிறது.

அக்டோபர் ஜிஎஸ்டி வரி வசூல் ரூ 1 லட்சம் கோடியை தாண்டியது – அதிகரிப்பு நீடிக்குமா?

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்