சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி வீதத்தை 1.1% வரைக்கும் மத்திய அரசு குறைத்துள்ளது.
மத்திய அரசின் நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்களுக்கான துறை நேற்று வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின்படி, இன்று முதல் ஜூன் 30 வரையிலான, 2021-22 நிதியாண்டின் முதல் காலாண்டில், பல்வேறு சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி வீதங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இவை 0.4%-லிருந்து 1.1% வரை வெட்டப்பட்டுள்ளன.
- மிக அதிகபட்சமாக, ஒரு ஆண்டு வைப்புக்கான வட்டி வீதம் 5.5%-லிருந்து 4.4% ஆக 110 புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது.
- முக்கியமாக, மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டங்களின் வட்டி வீதம் 7.4%-லிருந்து 6.5% ஆகக் குறைக்கப்படுகிறது.
- பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டமான சுகன்யா சம்ரித்தி கணக்கு திட்டத்தின் வட்டி வீதம் 7.6%-லிருந்து 6.9% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
- பரவலாக பயன்படுத்தப்படும் பொது சேமநதித் திட்டத்திற்கான வட்டி வீதம் 7.1%-ல் இருந்து 6.4% ஆகக் குறைக்கப்படுகிறது. இது கடந்த 40 ஆண்டுகளில் மிகக் குறைவான வட்டி வீதம் என்று என்டிடிவி தெரிவிக்கிறது.
இந்த புதிய வட்டி வீதங்கள் பற்றிய அறிவிப்பை அரசாங்க சேமிப்பு வளர்ப்பு பொது விதிகள், 2018-ன் கீழான அதிகாரத்தை பயன்படுத்தி செய்வதாக, அத்துறையின் துணை இயக்குனர் ராஜேஷ் பன்வார் வெளியிட்டுள்ள இந்த சுற்றறிக்கை தெரிவிக்கிறது. இதற்கு பொருத்தமானவர்களின் ஒப்புதல் உள்ளதாகவும் சுற்றறிக்கை குறிப்பிடுகிறது.
சில்லறை விற்பனை பணவீக்கம் 6% அளவை தாண்டியிருக்கும் நிலையில் வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது என்று தி ஹிந்து கருத்து தெரிவித்துள்ளது. மேலும், இந்த ஆண்டுக்கான, ரூ 12.05 லட்சம் கோடி அளவிலான அரசின் கடன் வாங்கும் திட்டத்தை எளிதாக்கும் வகையில் குறைந்த வட்டியில் கடன் வாங்குவதற்காக மத்திய அரசு இதைச் செய்துள்ளது. 2020-21ல் அரசு ரூ 13.71 லட்சம் கோடி கடன் வாங்கியிருந்தது.
சென்ற ஆண்டு ஏப்ரல் – ஜூன் காலாண்டில் அரசு சிறு சேமிப்புகளின் மீது வட்டி வீதத்தை 140 புள்ளிகளை வரை (1.4%) குறைத்திருந்தது. இவ்வாறு வட்டி வீதங்களை குறைத்திருப்பது அரசின் செலவுகளைக் குறைக்க உதவும் அதே நேரம், மூத்த குடிமக்களுக்கும் நடுத்தர வர்க்கத்துக்கும் இது பலத்த அடியாக இருக்கும் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் கருத்து தெரிவித்துள்ளது.
விவசாயிகள் முன்னேற்ற பத்திரத்தின் மீதான வட்டி வீதம் 6.9%-ல் இருந்து 6.2% ஆகக் குறைக்கப்பட்டிருப்பதோடு, அதன் முதிர்ச்சி காலம் 124 மாதங்களில் இருந்து 138 மாதங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தேசிய சேமிப்பு பத்திரங்களின் மீதான வட்டி வீதம் 6.8%-ல் இருந்து 5.9% ஆகக் குறைக்கப்படுகிறது. மாதாந்திர வருவாய் கணக்கில் வட்டி வீதம் 6.6%-ல் இருந்து 5.7% ஆகக் குறைக்கப்படுகிறது.
சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி வீதம் 4%-லிருந்து 3.5% ஆகவும், 1 ஆண்டு, 2 ஆண்டு, 3 ஆண்டு, 5 ஆண்டு வைப்புகளுக்கான வட்டி வீதங்களும் குறைக்கப்பட்டுள்ளன.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.