Aran Sei

கேம்ஸ்டாப் – பங்குச் சந்தை பெரு நிறுவனங்களுக்கு ஆப்பு வைத்த சிறு முதலீட்டாளர்கள்

Image Credit - theguardian.com

மெரிக்க பங்குச் சந்தையின் மையமான வால் ஸ்ட்ரீட்டின் பெரிய முதலீட்டு நிறுவனங்களை இலக்கு வைத்து சிறு முதலீட்டாளர்கள் ஒன்று சேர்ந்து நடத்திய தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பங்குச் சந்தையில், குறிப்பிட்ட ஒரு பங்கின் விலை குறையும் என்று பந்தயம் கட்டும் பந்தய விற்பனை எப்படி செயல்படுகிறது என்பதைப் புரிந்து கொண்ட பகுதிநேர பங்கு வர்த்தகர்கள் கூட்டாகச் சேர்ந்து, முதலீட்டு நிறுவனங்களின் பங்குச் சந்தை பந்தய விளையாட்டில் புகுந்து அவர்களை தோற்கடித்து விட்டனர் என்று தி கார்டியன் செய்தி தெரிவிக்கிறது.

இணைய உரையாடல் மன்றமான ரெட்டிட் (Reddit) மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்ட சிறு முதலீட்டாளர்கள், கேம்ஸ்டாப் (GameStop) என்ற அமெரிக்க வீடியோ கேம் விற்பனை நிறுவனத்தின் பங்கு விலையையும் இன்னும் பிற நிறுவனங்களின் பங்குகளின் விலைகளையும் உயர வைத்து, அவற்றின் விலை குறையும் என்று பந்தயம் கட்டியவர்களுக்கு ஆப்பு வைத்துள்ளனர்.

பந்தய விற்பனை (short selling) என்றால் என்ன?

ஒரு நிறுவனத்தின் பங்கு விலை வீழ்ச்சியடையும் என்று பந்தயம் கட்டுவதன் மூலம் பணம் சம்பாதிப்பது பந்தய விற்பனை என்று அழைக்கப்படுகிறது.

உதாரணமாக, (கற்பனையான நிறுவனமான) மன்னார் அண்ட் கம்பெனியின் பங்கு விலை ரூ 100 என்று வைத்துக் கொள்வோம். அதன் பங்கு விலை உயரப் போகிறது என்று ஒருவர் நினைத்தால், பங்குகளை இப்போதைய ரூ 100 விலையில் வாங்கி விட்டு, பங்கு விலை ரூ 150 ஆகும் போது, ரூ 100-க்கு வாங்கிய பங்கை விற்று, ரூ 50 லாபம் சம்பாதிக்கலாம்.

பந்தய விற்பனை என்பது இதை விடக் கொஞ்சம் சிக்கலானது. நிறுவனத்தின் பங்கு விலை குறையப் போகிறது என்று அவர் எதிர்பார்த்தால், மன்னார் அண்ட் கம்பெனியின் பங்கை வைத்திருக்கும் ஒருவரிடமிருந்து அதை கடன் வாங்கிக் கொள்வார். கடன் வாங்கிய பங்கை திருப்பிக் கொடுப்பது வரையில் ஒரு சிறு கட்டணத்தை பங்கின் உரிமையாளருக்கு தர வேண்டியிருக்கும்.

கடன் வாங்கிய பங்கை உடனடியாக விற்றால் ரூ 100 வாங்கியவரின் கைக்கு வந்து விடும். இப்போது கடன் வாங்கிய பங்கு கைவசம் இல்லை. பின்னர், அவர் எதிர்பார்த்தபடி பங்கு விலை ரூ 50 ஆகக் குறைந்து விட்டால், அந்தக் குறைந்த விலையில் பங்குகளை வாங்கி கடன் வாங்கியதை திருப்பிக் கொடுத்து விடலாம்.

இதன் மூலம், ஆரம்பத்தில் கடன் வாங்கிய பங்கை விற்ற ரூ 100-லிருந்து அதைத் திருப்பிக் கொடுப்பதற்கு வாங்கிய விலை ரூ 50-ஐ கழித்தால், பந்தய விற்பனை செய்தவருக்கு, ஒரு பங்குக்கு ரூ 50 லாபம் கிடைத்து விடுகிறது.

இதில் ஏதாவது பிரச்சினை உள்ளதா?

பங்கின் விலை குறையும் என்ற எதிர்பார்ப்பு பொய்த்துப் போய் அதன் விலை ரூ 200 ஆக அதிகரித்து விட்டால், கடன் வாங்கிய பங்கை திருப்பித் தருவதற்கு ரூ 200 கொடுத்து வாங்க வேண்டும். அதனால், முதலில் கடன் வாங்கிய பங்கை விற்ற போது கிடைத்த ரூ 100-ஐ விட கூடுதலாக ரூ 100 செலவாகி இழப்பு ஏற்பட்டு விடும்.

கேம்ஸ்டாப் நிறுவனத்தின் பங்குகளில் என்ன நடந்தது?

மெல்வின் கேபிட்டல் என்ற முதலீட்டு நிறுவனம் உட்பட பல வால் ஸ்ட்ரீட் பெரு முதலீட்டு நிறுவனங்கள் (hedge funds) கேம் ஸ்டாப் பங்கின் விலை குறையும் என்று மதிப்பிட்டு அதனை பந்தய விற்பனை செய்திருந்தன.

இதைக் கவனித்த, WallStreetBets என்ற Reddit குழுவின் உறுப்பினர்கள் தகவல்களை பகிர்ந்து கொள்வதன் மூலம் ஒருங்கிணைந்து, இந்த பங்குச் சந்தை பெருநிறுவனங்களை தண்டிக்கும் வகையில்,  கேம்ஸ்டாப்பின் பங்குகளை வாங்க ஆரம்பித்தனர்.

இதன் மூலமாக கேம்ஸ்டாப் நிறுவனத்தின் பங்கு விலை $19-லிருந்து புதன் கிழமை அன்று $330-க்கு உயர்ந்தது. அதாவது, அதன் பங்கு விலை இப்போது 18 மடங்கு அதிகரித்திருக்கிறது. அதன் பங்கு விலை குறைந்து விடும் என்று பந்தய விற்பனை செய்திருந்த பெரு நிறுவனங்கள், அதிக விலைக்கு பங்கை வாங்க வேண்டியது ஏற்பட்டது.

Image Credit : theguardian.com
$19-லிருந்து $130-க்கு, கிடுகிடுவென உயர்ந்த கேம்ஸ்பாட் பங்கு விலை – Image Credit : theguardian.com

அவர்கள் இது வரை $100 கோடி (சுமார் ரூ 7,500 கோடி) இழப்பை எதிர்கொண்டுள்ளனர் என்று தி கார்டியன் மதிப்பிடுகிறது.

ரெட்டிட் உறுப்பினர்கள் இவ்வளவு பங்குகளை எப்படி வாங்க முடிந்தது?

அவர்கள் பங்குகளை முழு விலை கொடுத்து வாங்கவில்லை. மாறாக, விருப்ப வாங்கல் (call option) என்ற முறையை பயன்படுத்தினர். அதன்படி, பங்குகளை ஒரு குறிப்பிட்ட விலையில் வாங்குவதற்கான உரிமையை அவர்கள் பெறுகின்றனர். இதற்கு பங்கு விலையில் ஒரு சிறு பகுதியை கட்டணமாக செலுத்தினால் போதும். இந்த பங்குச் சந்தை உத்தியை பயன்படுத்திதான் அவர்கள், ஷார்ட் விற்பனை செய்தவர்களை பிழிந்து எடுத்துள்ளனர்.

பொதுவாக பங்குச்சந்தை முதலீட்டு நிறுவனங்கள் இழிபுகழ் வாய்ந்தவையாகவே உள்ளன என்கிறது தி கார்டியன். அவை பங்குச் சந்தையில் சூதாடுவதன் மூலம் தொழில் வணிக நிறுவனங்களின் நலன்களை கிள்ளுக் கீரையாக மதித்து பெரும் லாபம் ஈட்டுகின்றன.

2008 உலகளாவிய நிதி நெருக்கடியின் போது, இந்த பங்குச் சந்தை முதலீட்டு நிறுவனங்கள், பல நூறு கோடி டாலர்களுக்கான பந்தய விற்பனைகள் மூலம் பல நிறுவனங்களை வேண்டுமென்றே திவாலாக்கி விட்டன.

பல நாடுகளின் நிதித்துறை ஒழுங்குமுறை அமைப்புகள், சில பலவீனமான பங்குகள் மீதான ஷார்ட் விற்பனை மீது தற்காலிக தடைகளை விதிக்கின்றன. சில நாடுகளில் ஷார்ட் விற்பனை முழுவதுமாக தடை செய்யப்பட்டுள்ளது.

பந்தய விற்பனை மூலம் ஒரு நிறுவனத்தின் பலவீனமான நிலைமையை முதலீட்டாளர்கள் வெளிக் கொண்டு வரலாம் என்ற அடிப்படையில் அது நியாயப்படுத்தப்படுகிறது.

கேம்ஸ்டாப் – பங்குச் சந்தை பெரு நிறுவனங்களுக்கு ஆப்பு வைத்த சிறு முதலீட்டாளர்கள்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்