மத்திய அரசின் 2021-22ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் பொதுத்துறை வங்கிகளை தனியாருக்கு விற்கப்படுவதை எதிர்த்து மார்ச் 15, 16 தேதிகளில் வேலைநிறுத்தம் செய்யப் போவதாக வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான UFBU அறிவித்துள்ளது.
“சோசியலிசம் என்பது சுமை; பொதுத்துறை நிறுவனங்களை விற்பதே எங்கள் நோக்கம்” – நிர்மலா சீதாராமன்
பிப்ரவரி 19-ம் தேதி அனைத்து மாநில தலைநகரங்களிலும் ஒரு நாள் முழுக்க ஆர்ப்பாட்டம் நடத்தவும், பிப்ரவரி 20-ம் தேதி முதல் மார்ச் 10-ம் தேதி வரை அனைத்து மாநிலங்களிலும், மாவட்டங்களிலும், நகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தவும் மார்ச் 15, 16 தேதிகளில் இரண்டு நாள் முழு அடைப்பு நடத்தவும் UFBU அழைப்பு விடுத்திருந்தது.
அதைத் தொடர்ந்து, வரும் வெள்ளிக்கிழமை மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக தமிழ்நாடு வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பும், அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கமும் அறிவித்துள்ளன.
வங்கிகளை தனியாருக்கு விற்பது
- தேச விரோதமானது
- மக்களுக்கு எதிரானது
- வளர்ச்சிக்கு எதிரானது
- முன்னேற்றத்துக்கு எதிரானது
- ஊழியர்களுக்கு எதிரானது
என்று கூறியுள்ள வங்கி சங்கங்கள், இந்தப் போராட்டத்தில் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொள்ளுமாறு வங்கி ஊழியர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன.
பிப்ரவரி 14 முதல் மார்ச் 15,16 வரையிலான ஒரு மாதத்தில் போராட்ட நிகழ்ச்சி நிரலையும் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் வெளியிட்டுள்ளது.
அதில்,
- அரசியல் கட்சிகளிடமும் பிற தொழிற்சங்கங்களிடமும் ஆதரவு கோருவது
- மாநில தலைநகரங்களிலும் நாடாளுமன்றத்தின் முன்பும் ஆர்ப்பாட்டங்கள்
- நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதமர் ஆகியோருக்கு மனு அனுப்புவது
- ஊழியர்கள் மத்தியிலும் வாடிக்கையாளர்கள் மத்தியிலும் துண்டறிக்கைகள் வினியோகித்து பிரச்சாரம் செய்வது
- பத்திரிகையாளர் சந்திப்புகள்
- சமூக ஊடக பிரச்சாரம்
ஆகியவை திட்டமிடப்பட்டுள்ளன.
இது தொடர்பாக, சென்ற வாரம் செவ்வாய்க் கிழமை அன்று ஹைதராபாதில் நடந்த வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டத்தில் மூன்று விவசாயச் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் பற்றியும், மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் பற்றியும், பொதுத்துறை வங்கிகளையும் காப்பீட்டு நிறுவனங்களையும் தனியாருக்கு விற்பது பற்றியும் விவாதிக்கப்பட்டதாக, UFBE ஒருங்கிணைப்பாளர் சஞ்சீவ் கே பந்த்லிஷ் வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.