நீங்கள் எந்த வழியில் இந்தியை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்தாலும், நாங்கள் சொல்லக்கூடிய ஒரே வார்த்தை “இந்தி தெரியாது போடா” அதை எப்பொழுதும் சொல்லிக் கொண்டே இருப்போம் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் அலுவல் மொழிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் கடந்த சில தினங்களுக்கு முன்பாக நடைபெற்றது. இதில் 112 பரிந்துரைகள் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் வழங்கப்பட்டிருக்கின்றன. இதில் பெரும்பாலும் இந்தி திணிப்பு முயற்சியாகவே இருப்பதாக பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின், இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், மாணவரணி, இளைஞரணி சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து, இன்று காலை சென்னையின் வள்ளுவர் கோட்டத்தில் திமுக மாணவரணி, இளைஞரணி சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதில் கலந்துக்கொண்டு உரையாற்றிய திமுக இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், “இந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று முன்தினம் தான் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அழைத்து நடத்த வேண்டும் என்று ஆணையிட்டார்.
ஒரே நாளில் இவ்வளவு பெரிய கூட்டத்தை திராவிட முன்னேற்ற கழகம் கூட்டியிருக்கிறது. ஒன்றியம் என்று சொன்னால் தான் கோபம் வரும். அதனால் அப்படியே அழைக்கிறேன். ஒன்றிய அரசின் பிரதமர் மோடி அவர்களே… உள்துறை அமைச்சர் அவர்களே…நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பது போல இங்கு நடந்து கொண்டிருப்பது அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி ஆட்சியோ, ஓ.பன்னீர் செல்வம் ஆட்சியோ இல்லை. இப்போது தமிழ்நாட்டை ஆட்சி செய்து கொண்டிருப்பவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.
இந்தி எதிர்ப்பா? இந்தித் திணிப்பு எதிர்ப்பா? – பொள்ளாச்சி மா உமாபதி
நாங்கள் ஆட்சியில் இருக்கும்போது வெறும் ஆர்ப்பாட்டம் தான் நடத்தி இருக்கிறோம். இது போராட்டமாக மாற வேண்டுமா வேண்டாமா என்பது உங்கள் கையில் இருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கியமான கொள்கையில் ஒன்று இந்தி திணிப்பை எப்பொழுதும் எதிர்ப்போம் என்பதுதான். அதிலிருந்து சற்றும் விட்டுக் கொடுக்க மாட்டோம்.
எங்களுடைய மாநில உரிமைகளை ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் எப்போதும் தலைவர் விட்டுக் கொடுக்க மாட்டார். ஏனென்றால் நாங்கள் பெரியார், அண்ணா, கருணாநிதியின் வழியில் வந்தவர்கள். இந்தியை எதிர்த்த போராட்டத்தில் தான் முதன் முதலில் ஆட்சியில் அமர்ந்தவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தினர். இப்பொழுது மீண்டும் கழகம் ஆட்சியில் இருக்கிறது.
நீங்கள் எந்த வழியில் இந்தியை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்தாலும், நாங்கள் சொல்லக்கூடிய ஒரே வார்த்தை “இந்தி தெரியாது போடா” அதை எப்பொழுதும் சொல்லிக் கொண்டே இருப்போம்.
மூன்று மொழிப்போர்களை சந்தித்தது திராவிட முன்னேற்ற கழகம். அதில் மூன்றாவது மொழிப்போரை வழி நடத்தியது திராவிட மாணவர்கள் இயக்கம். இளைஞர் அணி கடந்த நான்கு வருடங்களாக எந்தப் போராட்டத்தை கையில் எடுத்தாலும் வெற்றி பெற்று இருக்கிறோம். கண்டிப்பாக இந்தப் போராட்டத்திலும் வெற்றி பெறுவோம்.
தற்போது சென்னையில் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறோம். நீங்கள் மீண்டும் இந்தி திணிப்பை கையில் எடுத்தால், தமிழ்நாட்டில் மட்டுமல்ல திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் தலைவரின் அனுமதியுடன் டெல்லியில், உங்கள் அலுவலகத்தின் முன்பு எங்கள் போராட்டம் நடக்கும்.
இரண்டு நாள்களுக்கு முன்பு மேற்கு வங்கத்தில் இந்தி திணிப்பை எதிர்த்து போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். அந்தப் போராட்டத்தில் அண்ணாவின், கலைஞரின் புகைப்படத்தை எடுத்துச் சென்று இருக்கிறார்கள். எனவே, தமிழ்நாடு மக்கள் என்றும் இந்தி திணிப்பை ஏற்க மாட்டார்கள். 2019-ல் பாஜகவை விரட்டினோமோ அதே போல 2024-லும் மீண்டும் விரட்டியடிப்பார்கள்” என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
நம்ம ஊரு ஆட்டுக்காரனின் அமெரிக்க சாகசம் | அதிபரைச் சொரிந்து விட்டு அடி வாங்கிய கதை | Aransei Roast
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.