Aran Sei

அதிகரித்துவரும் வேலைவாய்ப்பின்மை நாட்டிற்கு ஆபத்து – ஒன்றிய அரசை விமர்சித்த எதிர்க்கட்சிகள்

மாநிலங்களவையில் 2022-23ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் மீதான பொது விவாதத்தின் போது, ​​ திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டோலா சென் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த எளமரம் கரீம், நாட்டில் வேலையின்மை அதிகரித்து வருவதாக கூறி ஒன்றிய அரசை விமர்சித்துள்ளனர்.

இவ்விவாதத்தில் பங்கேற்று பேசியுள்ள டோலா சென், “2014ஆம் ஆண்டு நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்தபோது, ​​ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக அவர் கூறினார். இந்த ஆண்டு பட்ஜெட் உரையில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அடுத்த ஐந்தாண்டுகளில் 60 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று கூறினார். இதில், யார் சொல்வது உண்மை?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

“உண்மையில், பெருந்தொற்று காலத்திற்கு முன்பே, நாட்டில் உள்ள வேலையின்மையின் விகிதம் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக அதிகமானது. 2016-17ஆம் ஆண்டு தொடங்கி, 2020-21ஆம் ஆண்டு வரையிலான நான்கு ஆண்டுகளில், மோடிஜியின் ‘மேக் இன் இந்தியா’ கொள்கை இருந்தபோதிலும், உற்பத்தித் துறையில் பணிபுரியும் தொழிலாளர்களின் எண்ணிக்கையானது பாதியாகக் குறைந்துள்ளது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘நாட்டின் வளங்களை எல்லாம் தனியாருக்கு விற்று விட்டால் நாடு என்னவாகும்’? – பாஜக எம்.பி. வருண் காந்தி

இந்தியாவில் ஆண்டுக்கு சராசரியாக ஐந்து மில்லியன் இளைஞர்கள் பணியில் சேருவதாக கூறியுள்ள டோலா சென், “இது மிகவும் கெடுவாய்ப்பானது. ஆனால், இந்த பட்ஜெட்டில் அந்த இளைஞர்களுக்கும், பெண்களுக்கும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் எந்த உத்தரவாதத்தையும் அளிக்கவில்லை என்பதுதான் உண்மை. வேலையில்லாத தொழிலாளர்களுக்கு, நூறுநாள் வேலைத் திட்டத்தில் பணிசெய்யும் தொழிலாளர்களுக்கும் கூட எந்த உத்தரவாதமும் இல்லை” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

“மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு (நூறுநாள் வேலைத்திட்டம்) நிதி குறைக்கப்பட்டுள்ளது. அத்தொழிலாளர்களுக்கு இன்னும் 3,358 கோடி ரூபாய் ஊதியம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதே விமர்சனத்தை முன்வைத்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த எளமரம் கரீம், “நூறுநாள் வேலைத்திட்டத்திற்கான செலவினங்களும் குறைக்கப்பட்டுள்ள நிலையில், நகர்ப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தை இப்போது அறிமுகப்படுத்துவதற்கான தேவை என்ன?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

‘கடந்த 3 ஆண்டுகளில் வேலையின்மையால் 9,140 பேர் தற்கொலை’ – ஒன்றிய அரசு தகவல்

வருமான இழப்பு, வறுமை மற்றும் பசி அதிகரிப்பு, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு போன்ற பிரச்சனைகள் நாட்டு மக்களுக்கு இருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், “இந்த சூழலில், வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கும், உள்நாட்டு தேவையை அதிகரிப்பதற்குமான திட்டங்களை இந்த பட்ஜெட்டில் சேர்த்திருக்க வேண்டும். ஆனால், அவற்றை கவனத்தில் கொள்ளவில்லை” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

திமுகவைச் சேர்ந்த கனிமொழியும் வேலையின்மை, பட்ஜெட் குறித்து ஒன்றிய அரசை விமர்சித்துள்ளார்.

Source: PTI

அதிகரித்துவரும் வேலைவாய்ப்பின்மை நாட்டிற்கு ஆபத்து – ஒன்றிய அரசை விமர்சித்த எதிர்க்கட்சிகள்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்