சென்னையில் உள்ள திருவொற்றியூரில் அரிவாக்குளம் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்புக் கட்டடம் நேற்று இடிந்து விழுந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பழைய குடியிருப்புகளின் தரம் குறித்து ஆய்வு செய்ய வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
“திருநெல்வேலியில் அண்மையில் தனியார்ப் பள்ளியில் உள்ள கழிவறை கட்டடம் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்ததை அடுத்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளி கட்டடங்களின் தரத்தையும் ஆய்வு செய்யத் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல தமிழ்நாடு அரசு குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளின் தரம் குறித்து விரிவாக ஆய்வு செய்ய வேண்டும்” என்று நகர்ப்புற குடியிருப்பு நிலவுரிமை கூட்டமைப்பின் தலைவர் செபாஸ்டியன் தெரிவித்துள்ளார்.
“தமிழ்நாடு முழுவதும் உள்ள குடியிருப்பு கட்டிடங்களை முறையாக ஆய்வு செய்து பாழடைந்த குடியிருப்புகளைக் குறிப்பிட்ட காலத்திற்குள் இடித்துப் புனரமைத்து அம்மக்களுக்கு வழங்க வேண்டும். தற்போது வீடுகள் இடிந்து பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு அவர்களின் தற்போதைய இருப்பிடத்திற்கு அருகிலேயே மாற்று அடுக்குமாடிக் குடியிருப்புகளை வழங்க வேண்டியதன் அவசியத்தை” ஒடுக்கப்பட்ட நகர்ப்புற சமூகங்களுக்கான தகவல் மற்றும் வள மையத்தின் (IRCDUC) நிறுவனர் வனேசா பீட்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
“குறைந்த வருமானம் கொண்ட இந்தக் குடும்பங்கள் தங்களது வீடுகள் இடிந்துள்ளதால் தங்கள் உடைமைகள் அனைத்தையும் இழந்துள்ளனர். ஆகவே இந்தக் குடும்பங்களுக்கு வெகு தொலைவில் மாற்று இடங்களை வழங்கினால் அது அவர்களின் வாழ்க்கையையே பாதிக்கும்” என்று வனேசா பீட்டர் மேலும் கூறியுள்ளார்.
குடிசை மாற்று வாரியத்தில் உள்ள தரக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தோல்வியடைந்துள்ளதையே இந்த வீடுகள் இடிந்த நமக்குச் சம்பவம் காட்டுகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா கூறியுள்ளார்.
Source: The hindu
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.