நீதி மறுக்கப்படுவது அராஜகத்திற்கு வழிவகுக்கும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா எச்சரித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் உயர்நீதிமன்றத்திற்கான புதிய வளாக கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டி உரையாற்றிய நீதிபதி ரமணா, சுதந்திரத்திற்குப் பிறகு நவீன இந்தியாவின் தேவைக்கு ஏற்ப நீதித்துறையின் உட்கட்டமைப்பு மாற்றியமைக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.
“சச்சரவுகளை விரைவாக தீர்ப்பது ஆரோக்கியமான ஜனநாயகத்தின் அடையாளம். நீதி மறுப்பு இறுதியில் அராஜகத்திற்கு வழிவகுக்கும். விரைவில், நீதித்துறையின் அமைப்பு சீர்குலைந்துவிடும், ஏனெனில் மக்கள் சட்டத்திற்குப் புறம்பான வழிமுறைகளைத் தேடுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
ஆரோக்கியமான ஜனநாயகத்தின் செயல்பாட்டிற்கு, மக்கள் தங்களின் உரிமைகள் மற்றும் கண்ணியம் பாதுகாக்கப்படுவதை உணர வேண்டியது அவசியம். மக்களின் கண்ணியம் மற்றும் உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டு பாதுகாக்கப்படும் போது மட்டுமே அமைதி நிலவும் என்று அவர் கூறியுள்ளார்.
காஷ்மீர் கவிஞர் ராஜா பாசுவை மேற்கோள் காட்டி பேசிய தலைமை நீதிபதி ரமணா, “ஜம்மு காஷ்மீர் மூன்று பெரிய மதங்களின் சங்கமம் – இந்து, புத்தம் மற்றும் இஸ்லாம். நமது பன்மைத்துவத்தின் இதயத்தில் இருக்கும் இந்த சங்கமமே நிலைத்திருக்க வேண்டும்;போற்றப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மாவட்ட நீதித்துறையே, நீதியின் அடித்தளம் என்று குறிப்பிட்ட அவர், “அடித்தளம் வலுவாக இருந்தால்தான் ஒட்டுமொத்த அமைப்பும் செழிக்க முடியும். இந்தியாவின் நீதி வழங்கும் முறை மிகவும் சிக்கலானதாகவும் செலவுமிக்கதாக இருக்கிறது” என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா கூறியுள்ளார்.
Source: The Hindu
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.