உத்தரபிரதேச மாநிலத்தில் சமீபத்தில் நடந்த வன்முறையில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகள் இடிக்கப்பட்டது குறித்து பதிலளிக்குமாறு அம்மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வீடுகள் இடிக்கும் நடவடிக்கை சட்டத்தின்படி இருக்க வேண்டும், அவை பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வழக்கின் அடுத்த விசாரணையை ஜூன் 21 தேதிக்கு ஒத்திவைத்துள்ள உச்சநீதிமன்றம், அதற்கு முன்பாக உத்தரபிரதேச மாநில அரசு, பிரக்யாராஜ் மற்றும் கான்பூர் மாவட்ட அதிகாரிகள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
பிரயாக்ராஜ் வன்முறை: ‘ஒரு குடும்பத்தை உடைத்துவிட்டார்கள்’ – ஜாவேத் முகமதுவின் மகள் சுமையா நேர்காணல்
“எல்லாமே நியாயமாக இருக்க வேண்டும்… அதிகாரிகள் சட்டப்படி மட்டுமே செயல்பட வேண்டும் என எதிர்பார்க்கிறோம். அசம்பாவிதம் எதுவும் நடக்காத வகையில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இடிப்பு நடவடிக்கைக்கு தடைவிதிக்க முடியாது என்று தெரிவித்துள்ள நீதிபதிகள், நடவடிக்கையை சட்டத்திற்கு உட்பட்டு மேற்கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
சட்டவிரோதமாக வீடுகள் இடிக்கப்பட்டதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஜமியத் உலமா இ ஹிந்த் அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தது.
முறையான சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படாமல் இடிப்புகள் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு உத்தரப்பிரதேச அரசை நீதிமன்றம் கேட்டுக் கொள்ள வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.
உத்தரப்பிரதேசத்தில், முஹம்மது நபி தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பாஜக பிரமுகர்களுக்கு எதிராக போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. வன்முறைக்கு காரணமானவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டவர்களின் சொத்துக்களை மாவட்ட நிர்வாகங்கள் இடித்தது. கான்பூர், பிரக்யாராஜ், சஹாரன்பூர் ஆகிய மாவட்டங்களில் இடிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
வீடுகள் இடிப்பு நடவடிக்கைகள் அதிர்ச்சியூட்டும் மற்றும் திகிலூட்டும் வகையில் இருந்தன என்று தெரிவித்த மனுதாரர்கள், வீடுகள் இடிக்கப்பட்ட பிறகு நோட்டீஸ் வழங்கப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
உத்தரப்பிரதேச சட்டங்களின்படி, எந்தவொரு இடிப்பு நடவடிக்கைக்கு முன் குறைந்தபட்சம் 15 முதல் 40 நாட்களுக்கு ஒரு முறையான அறிவிப்பு அவசியம் என்று தெரிவித்துள்ள மனுதாரரின் வழக்கறிஞர் சியூ. சிங், “போதுமான அறிவிப்புகள் அவசியம். இது அரசியலமைப்பிற்கு விரோதமானது மற்றும் அதிர்ச்சியளிக்கிறது. இது ஒரு சமூகத்தை குறிவைத்து செய்யப்படுகிறது” என்று கூறியுள்ளார்.
“பதிலளிப்பவர்களுக்கு (உ.பி அரசு) அவர்களின் ஆட்சேபனைகளுக்கு நேரம் கிடைக்கும். இதற்கிடையில் அவர்களின் (பாதிக்கப்பட்ட தரப்பினரின்) பாதுகாப்பை நாங்கள் உறுதி செய்ய வேண்டும். தெளிவாக இருக்கட்டும், அவர்களும் சமூகத்தின் ஒரு பகுதி, இறுதியில், ஒருவருக்கு ஒரு குறை இருந்தால், அவர்கள் அதை நிவர்த்தி செய்வதற்கான உரிமை உள்ளது” என்று நீதிபதி ஏஎஸ் போபண்ணா தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச அரசு சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, “இடிப்புகளுக்கு உரிய சட்டம் பின்பற்றப்படுகிறது. ஊடகங்கள் இடிபாடுகளை அரசியல் அறிக்கைகளுடன் தேவையில்லாமல் இணைக்கின்றன” என்று கூறியுள்ளார்.
சட்டவிரோதமாக காவலில் வைத்தல், புல்டோசர் கொண்டு வீடுகளை இடித்தல் போன்ற காவல்துறை நடவடிக்கைகளை கவனத்தில் கொள்ளுமாறு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணாவிற்கு முன்னாள் நீதிபதிகள் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் கடிதம் எழுதியிருந்த நிலையில், நீதிபதிகள் போபண்ணா மற்றும் விக்ரம் நாத் அடங்கிய விடுமுறைக்கால அமர்வு இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
Source: NDTV
புல்டோசர் பாபாவும், புல்டோசர் மாமாவும் | Aransei Explainer | Yogi Adityanath | Afreen | Nupur Sharma
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.